மருந்தாகும் தாம்பூலம்!

வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பைக் குறிப்பிட்ட அளவில் கலந்து மென்று சுவைப்பதை வெற்றிலை போடுதல், தாம்பூலம் தரித்தல் என்கிறோம்.

வெற்றிலையை மட்டுமோ அல்லது பாக்கை மட்டுமோ போடக் கூடாது. சுண்ணாம்பு தடவாத வெற்றிலையை முதலில் மெல்ல வேண்டும்.

அடுத்துச் சுண்ணந் தடவிய வெற்றிலையைப் பாக்குடன் மெல்வது இனிது.

மூன்றையும் ஒன்றாகக் கலந்து மெல்லும் போது, உமிழ் நீருடன் கலந்து வரும் கடும் சுவையுள்ள சாற்றைத் துப்பி விட வேண்டும்.

பிறகு ஊறும் நீரைச் சுவைத்தல் மேன்மை தரும். முதல் நீர் நஞ்சு, இரண்டாம் நீர், பித்தச்சூட்டைக் கூட்டும், மூன்றாவது அமிர்தம், நான்காவது இனிக்கும் குணமுள்ளது.

காம்பு, நுனி, நடுநரம்பை நீக்கி விட்டு, சிறு பூச்சிகளின் முட்டைகள் இலையில் ஒட்டியிருக்கலாம் என்பதால், முன்னும் பின்னும் இலையைத் துடைத்துச் சுத்தமாக்கி நம் முன்னோர் பயன்படுத்துவர்.

நல்ல அறுசுவை உணவுக்குப் பின் தாம்பூலம் தரித்தால், உண்ட உணவு எளிதில் செரிக்கும்.

வயிற்றிலுள்ள வாயு நீங்கும். உப்புசம் போகும். வாய் நாற்றம் நீங்கும். பற்கள் உறுதி பெறும்.

குரல் வளமாகும். முகத்தில் வசீகரமும் களையும் உண்டாகும்.

வெற்றிலை சேர்த்து மெல்லும் பாக்கினால், கோழைக் கிருமிகள் நீங்கும். பித்தம் தன்னிலை பெறும். மலச்சிக்கல் நீங்கும்.

பாக்கைத் தனியே உண்டால் இரத்தச் சோகை உண்டாகும்.

தாம்பூலத்தில் கல் சுண்ணாம்பைச் சேர்த்தால், உணவு செரிப்பதுடன், குடல் நோய், பேதி, பூச்சிக்கடி நஞ்சு நீங்கும். எலும்புகள், பற்கள் பலமாகும்.

ஆடும் பல் இறுகும். வாய்ப்புண், ஈறுகளில் இரத்தக் கசிவு குணமாகும். குடல் கிருமிகள் நீங்கும்.

தாம்பூலத்தில் சுக்கைச் சேர்த்தால், முகவாட்டம், செரியாமை அகலும். கிராம்பு, ஏலக்காய், ஜாதிக்காயைச் சேர்த்தால், நறுமணம், சுறுசுறுப்பு, மனக்களிப்பு உண்டாகும்.

வெற்றிலையுடன் புகையிலையைச் சேர்ப்பது தவறு; ஆபத்தானது. விலக்குதல் நல்லது.

இரத்தக் காசம் என்னும் டி.பி., இரத்தப் பித்தம் என்னும் இரத்தக் கொதிப்பு, கண் நோய், மயக்கம், சன்னி, வெறிநோய், தலைவலி இருப்போர் தாம்பூலம் போடக் கூடாது.

குழந்தைகள், சிறுவர்கள் தாம்பூலம் போடக் கூடாது. தக்க சமயம் அறிந்து அளவுடன் தாம்பூலம் போட்டால் மிகுந்த பயன்களைப் பெறலாம்.


மரு.ப.குமாரசுவாமி, மேனாள் அரசு சித்த மருத்துவர், செங்கல்பட்டு.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!