இறைச்சியில் உடலுக்குத் தேவையான புரதம், வைட்டமின்கள், தாதுப் பொருள்கள் உள்ளன.
இறைச்சி விரைவில் கெட்டுப் போகும் பொருள் என்பதால், சுகாதார முறையில் உற்பத்தி செய்து, நுகர்வோருக்கு வழங்க வேண்டிய கடமை இறைச்சி உற்பத்தி யாளர்களுக்கு உள்ளது.
இறைச்சிப் பொருள்களை மக்கள் அதிகமாக விரும்பும் இன்றைய நிலையில், சமைக்க நேரம் எடுத்துக் கொள்ளாமல், இறைச்சி ஊறுகாயை அப்படியே சாப்பிடலாம்.
மேலும், குளிர் சாதனப் பெட்டி இல்லாமல், அறை வெப்ப நிலையில் வைத்துப் பாதுகாக்க முடியும்.
மசாலா, உப்பு, தாவர எண்ணெய், அசிட்டிக் அமிலம் கலந்த அல்லது இவை இல்லாமல் தயாரிக்கப்பட்ட இறைச்சி சார்ந்த பொருள்கள், இறைச்சி ஊறுகாய் எனப்படும்.
இதை, நெடுநாட்கள் வைத்துப் பயன்படுத்த முடியும். ருசியாக இருக்கும். சத்து மிக்கதும் ஆகும்.
இந்தியாவில் பசியைத் தூண்டவும், இரைப்பைச் சாறு ஓட்டத்தைத் தூண்டுவதன் மூலம், உணவைச் செரிக்க வைக்கும் பண்பும் கொண்டது ஊறுகாய்.
பலவகை இறைச்சிகள் மூலம் ஊறுகாயைத் தயாரிக்க முடியும். இங்கே கோழியிறைச்சி மூலம் ஊறுகாயைத் தயாரிப்பது எப்படி எனப் பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்
எலும்பில்லாக் கோழிக்கறி ஒரு கிலோ,
வினிகர் 150 மில்லி,
சமையல் எண்ணெய் 400 மில்லி,
இஞ்சி, பூண்டு விழுது 100 கிராம்,
சீரகப்பொடி 10 கிராம்,
பெருங்காயம் 5 கிராம்,
வெந்தயப் பொடி 5 கிராம்,
கடுகுப்பொடி 10 கிராம்,
உப்பு 30 கிராம்,
கறிமசாலாப் பொடி 10 கிராம்.
செய்முறை
தோல் நீக்கப்பட்ட இறைச்சியைக் குளிர் சாதனப் பெட்டியில் 4 ± 1 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் இரவு முழுவதும் வைக்க வேண்டும்.
பிறகு, இதிலுள்ள எலும்பு மற்றும் கொழுப்புத் திசுக்களை நீக்கி விட்டு, பெருவிரல் அளவுத் துண்டுகளாக நறுக்க வேண்டும்.
பிறகு, பாதியளவு வினிகரில் இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
அடுத்து, இதையெடுத்து வடிகட்டி 175 ± 5 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில், சமையல் எண்ணெய்யில் தங்கப் பழுப்பு நிறம் வரும் வரையில் வறுக்க வேண்டும்.
பிறகு, அதிகமாக இருக்கும் எண்ணெய்யை வடித்து விட்டு, குறைவான வெப்பத்தில், குறைவான எண்ணெய்யில்,
இஞ்சி, பூண்டு விழுது, உலர்ந்த மசாலா மற்றுமுள்ள பொருள்களைச் சேர்த்து வறுக்க வேண்டும்.
அடுத்து இத்துடன், ஏற்கெனவே வறுத்து வைத்துள்ள இறைச்சியைச் சேர்த்து, மிதமான சூட்டில் நன்கு கிளற வேண்டும்.
பிறகு, இதை அடுப்பில் இருந்து இறக்கி நன்கு ஆற வைத்து, தேவையான அளவில் வினிகரைச் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
பிறகு, எண்ணெய்யைச் சேர்த்துப் புட்டியில் இட்டுச் சொந்தத் தேவைக்குப் பயன்படுத்தலாம். அல்லது விற்பனை செய்யலாம்.
இப்படித் தயாரிக்கும் இறைச்சி ஊறுகாய் மூன்று மாதம் வரை கெடாமல் இருக்கும்.
இந்த ஊறுகாய்த் தயாரிப்புக்கு எந்தவித இயந்திரமும் தேவையில்லை. குறைந்த முதலீட்டில், வீட்டில் இருந்து கொண்டே இல்லத்தரசிகள் வருவாய் ஈட்ட முடியும்.
இதைப் பற்றிய மேலும் தகவல்களுக்கு, அருகிலுள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியை அணுகலாம்.
மரு.மு.முத்துலட்சுமி, உதவிப் பேராசிரியை, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், நாமக்கல் – 637 002.