மாடு வளர்க்க மலைப்பாக இருக்கிறதா?

விவசாயிகள் பலரும் தங்களின் நிலங்களுக்குத் தேவையான சத்துகளைக் கொடுப்பதற்கு, இரசாயன உரங்களை மட்டும் இட்டால் போதும் என எண்ணுவது தவறு.

எந்த இடத்துக்கும் போக முடியாமல் ஏகப்பட்ட வேலைகள் இருக்கும் போது, இந்த மாட்டை யார் வளர்ப்பது; அதை எப்படிப் பராமரிப்பது என்று, விவசாயத்தின் ஆதரவுத் தொழிலான கால்நடை வளர்ப்பை விட்டதற்குக் காரணம், தீனி போட்டுச் சமாளிக்க முடியாது என்னும் அறியாமை தான்.

குறிப்பாக, வறட்சிக் காலத்தில், நாம் வாழ்வதே பெருஞ் சங்கடம், இதில் நமக்கு எதற்கு இன்னொரு கஷ்டம் என்று, தம்மால் வளர்க்க முடிந்த ஆடு அல்லது பசுங் கன்றுகளைக் கூட வளர்க்காமல் விட்டு விடுகிறார்கள்.

இயற்கை எருவை விலைக்கு வாங்கி இட்டால் கட்டுபடியாகுமா என்று எண்ணாமல் இருப்பதும், இயற்கை எருவை நிலத்துக்கு இடும் வழக்கத்தை விவசாயிகள் குறைத்துக் கொண்டே வருவதும் தான் இதற்குக் காரணம்.

விவசாயம் செழிக்கத் துணையாக இருக்கும் கால்நடைகளை, அடிமாட்டு விலைக்கு விற்பது மாபெரும் அறியாமை.

பாலே தராத மாடு என்றாலும், மலட்டு மாடு என்றாலும் கூட, அதனால் விவசாயிக்கு இலாபம் தான் என்பதை நன்கு அறிந்தவர் வெகு சிலரே.

ஒரு லிட்டர் பஞ்சகவ்யா 150 ரூபாய்க்கு விற்கப்படும் போது எதற்கு அய்யா விற்க வேண்டும் மாட்டை?

சாணமும், கோமியமும் கோடி பெறுமே! ஆடு, மாடுகள் தரும் அனைத்துப் பொருள்களையும் வெறும் வரவு செலவுக் கணக்கில் வைத்துப் பார்க்கக் கூடாது.

நீடித்த வேளாண்மைக்கு நம் மண்ணைத் தயார்ப்படுத்த உதவுபவை கால்நடைகள் தான். இவை இறைவன் அளித்த வரம்.

வறட்சிக் காலம், காட்டில் புல் இல்லை என்று விவசாயிகள் கூறுவது உண்மை தான். ஆனால், முந்திய பயிர் மூலம் கிடைத்த துணைப் பொருள்கள் தீவனமாக உதவுமே?

கலப்புப் பயிராக நாம் விதைத்த வரகு, கம்பு, இருங்குச் சோளம், சாமை, கொள்ளு முதலியன மட்டுமின்றி, தவிடு, உளுந்து, பயறு, கடலைப் பொட்டு முதலியவற்றை, தீவனத்தில், மக்காச் சோளத்துக்குப் பதிலாக 50 சதம் வரை சேர்க்கலாம்.

நிலக்கடலைக் கொடி, கிழங்குத் திப்பி, பருத்தி விதை, ஓடு நீக்கப்பட்ட புளியங் கொட்டைத் தூள் ஆகியவற்றைத் தீவனத்தில் சேர்ப்பதும்;

வைக்கோல், சோளத்தட்டை, கம்பந்தட்டை, காய்ந்த புல், சூரியகாந்திச் செடிகள், விதை நீக்கிய சூரியகாந்திப் பூக்கள், கேழ்வரகுத் தாள் என, எத்தனையோ உலர் தீவனங்கள் உள்ளனவே?

அப்புறம் எதற்குக் கவலைப்பட வேண்டும்? மக்காச் சோளத்தை ஊற வைத்து, முளைக்கட்டி வளர்த்து, முளைப்பாரியைப் போல, வெள்ளை வேருடன் தரலாமே? அசோலாவும் இருக்கிறதே?

உளுந்துச்செடி, துவரைச்செடி, சவுண்டல், சீமையகத்தி, வாகைத் தழையை ஆடுகளுக்குத் தரலாம். கரும்புத் தோகையைத் தினமும் 20-25 கிலோ வரை மாட்டுக்குத் தரலாம்.

புளியங்கொட்டை, மாங்கொட்டை போன்ற விதைகளைத் தீவனத்தில் 20-30 சதம் வரை சேர்க்கலாம்.

ஆங்காங்கே கிடைக்கும் அகத்தி, வேம்பு, பூவரசு, கருவேல், குடைவேல், பலா, ஆல், அரசு, உதியன், இலந்தைத் தழைகளை, கறவை மாட்டுக்குத் தினமும் 10-15 கிலோ தரலாம்.

சிந்தித்துப் பார்த்துச் செய்கையை மாற்றி, மாட்டைத் தோட்டத்தில் கட்டுவோம்; முடிந்த வரையில் பேணுவோம்; நிலமெங்கும் நல்ல உரமிட்டுப் பயிர்கள் பல பெருகிடச் செய்வோம்.

மேலும் விவரம் பெற 98420 07125 எண்ணில் பேசலாம்.


முனைவர் பா.இளங்கோவன், இணை இயக்குநர் மற்றும் பேராசிரியர், பாசன மேலாண்மைப் பயிற்சி நிலையம், துவாக்குடி, திருச்சி – 620 015.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!