பால் கறவையை முடக்கும் மடிவீக்க நோய்!

பால் உற்பத்தியை அதிகரிக்க, கறவை மாடுகளை நல்ல முறையில் பராமரிப்பது மிகமிக முக்கியம். பசு மற்றும் எருமை மாடுகளைத் தாக்கும் பல நோய்களில் முக்கியமானது மடிவீக்க நோய்.

இந்த நோய் வந்த மாடுகளில் பால் உற்பத்திக் குறைவதோடு, சரியான முறையில் சிகிச்சை செய்யா விட்டால், அந்த மாடுகளில் காலம் முழுவதும் பாலைக் கறக்க முடியாத நிலையும் ஏற்படலாம்.

மடிவீக்க நோய் மூலம் நம் நாட்டில் பலகோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படுவதால், இந்நோயைப் பற்றிய விழிப்புணர்வு மிகவும் அவசியம்.

மடிவீக்க நோய், பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இந்த பாக்டீரியாக்கள் எல்லா இடங்களிலும் நீக்கமற இருக்கும்.

குறிப்பாக, சரியாகப் பராமரிப்பு இல்லாத மாட்டுத் தொழுவங்களில் இருக்கும் பாக்டீரியாக்கள், கறவை மாடுகளின் காம்புத் துளைகள் வழியாக, மடிக்குள் சென்று, மடிவீக்க நோயை உண்டு பண்ணும்.

கறவை வளர்ப்பில் முக்கியமானது பால் உற்பத்தி தான். கறவை மாட்டின் நான்கு காம்புகளிலும் பால் சுரந்தால் தான், கறவை வளர்ப்பு இலாபகரமாக இருக்கும்.

சரியாக மடியைக் கழுவாமல் பால் கறப்பதாலும், முழுமையாகப் பாலைக் கறக்காமல் மடியில் தங்க விடுவதாலும், மடி நோய் வருகிறது. எனவே, பாலைக் கறக்கும் முறையும் முக்கியமாகப் படுகிறது.

விரல்களை அழுத்திக் கறப்பதால், விரல் நகம் பட்டு, மடியில் காயம் உண்டாகி, அதன் வழியாக பாக்டீரியாக்கள் மடிக்குள் சென்று, மடிநோயை உருவாக்கும்.

மடிநோய் வந்த மாட்டில், ஆரம்பக் கட்டத்தில் பாலின் அளவு குறையும். பிறகு, பாலின் சுவையில் உப்பு அதிகரிக்கும்.

பாலைக் காய்ச்சினால் திரிந்து விடும். நோய் முற்றிய நிலையில், மடிப்பாகம் வீங்கியும் சூடாகவும் இருக்கும். இந்த அறிகுறிகள் தென்பட்டால், உடனே கால்நடை மருத்துவரை அணுக வேண்டும்.

இந்த நோய் எளிதில் பரவும் தன்மை உள்ளது. அசுத்தமான கைகளால் பாலைக் கறப்பதாலும், மடி வீக்கத்தால் பாதிக்கப்பட்ட மாட்டில் பாலைக் கறந்து விட்டு, நோயற்ற மாடுகளில் பாலைக் கறப்பதாலும், அடுத்தடுத்த மாடுகளுக்கு இந்த நோய் பரவும்.

அதனால், இதற்குத் தொடக்க நிலையிலேயே சிகிச்சை செய்யா விட்டால், பாதிக்கப்பட்ட காம்பு பழுதாகி, பால் கறவை முற்றிலும் நின்று விடும்.

ஒரு காம்பில் பால் கறவை நின்று விட்டால், அது காலத்துக்கும் நின்று போனது போல் தான். எனவே, இந்த நோயைக் குணப்படுத்த ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை தர வேண்டும்.

நோய் வந்த பிறகு சிகிச்சை தருவதை விட, வருமுன் காப்பதே ரொம்ப ரொம்ப நல்லது.

மடிவீக்க நோய் நோய் வராமல் இருக்க, மாட்டுத் தொழுவம் சுத்தமாக இருக்க வேண்டும். சாணமும் சிறுநீரும் தொழுவத்தில் தேங்கக் கூடாது.

பாலைக் கறப்பதற்கு முன், மடியை லேசான வெந்நீரில் கழுவி, உலர்ந்த, சுத்தமான துணியால் துடைக்க வேண்டும்.

பால் கறவையாளரின் கைகள் சுத்தமாக இருக்க வேண்டும். மடிநோய் வந்த மாட்டில் பாலைக் கறக்க வேண்டும் என்றால், அதற்கு முன் நோயற்ற கறவை மாடுகளில் பாலைக் கறந்துவிட வேண்டும்.

மடியில் பாலைத் தேங்க விடாமல், பால் முழுவதையும் கறந்துவிட வேண்டும். மடிநோய் வராமல் தடுக்க, கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி, கன்று போடுவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பே, காம்பின் வழியாக மருந்தைச் செலுத்தலாம்.

நோயுற்ற காம்பை வம்பாகப் பிடித்து இழுத்துப் பாலைக் கறக்கக் கூடாது. நல்ல பாலோடு மடிநோய்ப் பாலைக் கலக்கக் கூடாது.

மடிநோய்ப் பாலில் பாக்டீரியாக்கள் மிகுதியாக இருக்கும். எனவே, அந்தப் பாலைக் குடித்தால் வயிற்றுப் போக்கு ஏற்படலாம். அதனால், மடிநோய்ப் பாலைக் கறந்து பாதுகாப்பான முறையில் அகற்ற வேண்டும்.


தொகுப்பு: பசுமை

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!