இந்த உலகத்தில் நன்னீர் வளம் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்களுக்கு உணவைத் தரும் அடிப்படைத் தொழிலான விவசாயமும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
இந்தச் சூழ்நிலையில், நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் தொழில் நுட்பங்களும், பயிர் வகைகளும் வந்து கொண்டே உள்ளன.
அந்த வகையில், நீர் மிகக் குறைவாக உள்ள கோடைக் காலத்திலும் நன்கு வளர்ந்து வளமான வருமானத்தைத் தரும் பயிராக, மரப்பயிரான பெருநெல்லி உள்ளது.
பல்லாண்டுப் பயிராக விளங்கும் இந்தப் பெரு நெல்லியை, அவரவர் வசதிக்கேற்ப சாகுபடி செய்தால், வறட்சியிலும் நல்ல வருமானம் பெற முடியும்.
பெரு நெல்லியில் பல இரகங்கள் உள்ளன. குறிப்பாக, பவானி சாகர்-1 சாக்கியா என்.ஏ-7, கிருஷ்ணா, காஞ்சன் ஆகிய இரகங்களைப் பயிரிடலாம்.
வளமான மண்ணாக இருந்தால், செடிக்குச் செடி மற்றும் வரிசைக்கு வரிசை 18 அடி இடைவெளியில் நடலாம். சற்று வளம் குறைந்த நிலமாக இருந்தால் 15 அடி இடைவெளியில் நடவு செய்யலாம்.
பெரு நெல்லியை நடவு செய்வதற்கு முன்பு, நிலத்தை 2-3 முறை நன்கு உழ வேண்டும். பிறகு மேலே குறிப்பிட்டுள்ள இடைவெளியில், இரண்டு அடி நீள, அகல, ஆழமுள்ள குழிகளை எடுத்து ஒரு வாரத்துக்கு ஆறப்போட வேண்டும்.
பின்பு அந்தக் குழிகளில் எரு, மணலைச் சம அளவில் கலந்து போட வேண்டும். களர் நிலமாக இருந்தால், குழிக்கு 10 கிலோ ஜிப்சத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இப்படித் தயாரிக்கப்பட்ட குழிகளில் பெருநெல்லிச் செடிகளை, ஒட்டுக் கட்டப்பட்ட பாகம் மண்ணுக்கு மேலே இருக்கும் வகையில் நட்டு, நீரைப் பாய்ச்ச வேண்டும்.
செடிகள் நன்கு வளரத் தொடங்கிய பின்பு, பத்து நாட்களுக்கு ஒருமுறை பாசனம் செய்தால் போதும். அடுத்து, மழைக்காலம் தொடங்கு முன், கன்றுகளைச் சுற்றியுள்ள மண்ணை எடுத்து விட்டு, அந்த இடைவெளியில் மட்கிய தொழுவுரத்தைப் போட்டு நிரப்ப வேண்டும்.
மேலும், கன்று ஒன்றுக்கு முக்கால் கிலோ யூரியா, அரைக்கிலோ சூப்பர் பாஸ்பேட், அரைக்கிலோ பொட்டாஷ் வீதம், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை இட்டு, பாசனம் செய்ய வேண்டும்.
நெல்லிக் காய்களில் பழுப்பு நிறமும், கரும் புள்ளிகளும் தெரிந்தால், அது போரான் சத்துப் பற்றாக்குறை என அறிந்து கொள்ள வேண்டும். இக்குறையைப் போக்க, நூறு லிட்டர் நீருக்கு 600 கிராம் போராக்ஸ் சத்து வீதம் கலந்து, இரண்டு முறை மரங்களில் தெளிக்க வேண்டும்.
நிலத்தில் இருந்து மூன்றடி உயரத்துக்குக் கீழே கிளைகள் வராமல் அவ்வப்போது வெட்டி விட்டு, மரங்களில் சூரிய ஒளி நன்கு படும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
நெல்லிக் காய்களை அறுவடை செய்த பிறகு நுனியில் இருந்து 10 சென்டி மீட்டர் அளவுக்குக் கிளைகளை வெட்டி விட வேண்டும். கிளைகளில் புழுத் துளைகள் இருந்தால், அவற்றில் வேப்பெண்ணெய்யை ஊற்றிக் களி மண்ணால் அடைக்க வேண்டும்.
அசுவினியைக் கட்டுப்படுத்த ஈக்கோ நீம்பினால், நீம்சால் போன்ற தாவரப் பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளிக்கலாம். தொழில் நுட்பங்களைச் சரியாகச் செய்தால், நன்கு வளர்ந்த மரம் ஒன்றில் இருந்து 150 கிலோ வரையில் காய்களை மகசூலாகப் பெறலாம்.
மேலும், பெருநெல்லி சாகுபடி நிலத்தில், குறைந்த வயதுள்ள காய்கறிகளைப் பயிர்களையும் சாகுபடி செய்து கூடுதல் வருமானத்தைப் பெறலாம்.
பசுமை