களாக்காய் சாகுபடி!

ளாக்காய்ச் செடியின் தாவரவியல் பெயர் கேரிஸ்ஸா காரண்டாய். இதை ஆங்கிலத்தில் Bengal currant tree என்று கூறுகின்றனர். இதன் தாயகம் இந்தியா தான்.

களாக்காய்ச் செடி, இந்தியாவில் மிதமான தட்ப வெப்பப் பகுதிகளில் வளரக் கூடியது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1,600 அடி வரையுள்ள பகுதிகளில் வளரும்.

களாக்காய்ச் செடிகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று புதர்ச்செடி, இந்தச் செடி மூன்றடி உயரம் வரை வளரும். மற்றொன்று மரம். இது, 15 அடி உயரம் வரை வளரும்.

செடிகளில் பச்சை இலைகள் செறிந்து இருக்கும். மார்ச், ஏப்ரலில் மரம் முழுவதும் வெள்ளை நிறத்தில் பூக்கள் பூத்துக் குலுங்கும். தேனீக்களுக்குத் தேன் பூக்களைத் தரும் மரமாகும்.

அடர்ந்த இலைகளுடன் இருப்பதால், காற்றின் வேகத்தைத் தடுத்து, தூசியை வடிகட்டிக் காற்றைத் தூய்மை செய்யும். வீட்டு முகப்பில், தோட்டத்தில், சாலை ஓரத்தில், சுற்றுப்புறத்தில், அழகூட்டும் அலங்கார மரம், இந்தக் களாக்காய் மரம்.

களாக்காயில் உள்ள சத்துகள்

களாக்காயில் நம் உடலுக்குத் தேவையான சத்துகள் நிறைந்து உள்ளன. நூறு கிராம் களாக்காயில், மாங்கனீசு 2 மி.கி., கரையும் நார்ச்சத்து 0.4 கி., நார்ச்சத்து 1.6 கி.,

நீர் 80.14 கி., இரும்புச் சத்து 10.33 கி., பொட்டாசியம் 81.26 கி., ஜிங்க் 3.26 கி., காப்பர் 1.92 மி.கி., வைட்டமின் சி 51.27 மி.கி. ஆகியன அடங்கி உள்ளன.

களாக்காய் பழமானால் புளிப்பும் இனிப்பும் கலந்த சுவையில் இருக்கும். இதில் வைட்டமின்கள் ஏ-யும் சி-யும் உள்ளன.

இப்பழத்தில் இரும்பு மற்றும் தாதுச் சத்துகள் அதிகமாக இருப்பதால், இரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோயைக் குறைக்க இப்பழம் உதவும்.

பார்வை தெளிவாகும். சாப்பாடு ஏற்கும் திறன் மிகுந்து பித்தம் கட்டுப்படும். களாக்காயை ஊறுகாயாகத் தயாரித்து உணவில் சேர்க்கலாம்.

சாகுபடி

மணல் கலந்த வறண்ட மண்ணில் களாச்செடி நன்கு வளரும். இதை ஜூன் ஜூலையில் நடலாம். வரிசை மற்றும் பயிர் இடைவெளி 2 மீட்டர் இருக்க வேண்டும்.

களாக்காய்ப் பழங்களை இரண்டு நாட்கள் வைத்திருந்தால், சிறிது அழுகிய நிலைக்கு மாறிவிடும். இப்பழங்களை நீருள்ள பாத்திரத்தில் பிசைந்து விட்டால், விதைகள் அடியில் தங்கி விடும்.

அவற்றைச் சேகரித்து, சாம்பல் அல்லது செம்மண் அல்லது பாஸ்போ பாக்டீரியா அல்லது அசோஸ் பைரில்லத்தில் கலந்து விதை நேர்த்தி செய்யலாம்.

நேர்த்தி செய்த விதைகளை, ஒரு பங்கு மட்கிய தொழுவுரம், இரு பங்கு மணல், செம்மண் கலந்து நிரப்பிய நெகிழிப் பைகளில் மூன்று விதை வீதம் ஊன்ற வேண்டும்.

விதைத்த நாளில் இருந்து ஒரு மாதம் வரை, இரண்டு நாட்களுக்கு ஒருமுறை நீரைத் தெளித்து வர வேண்டும். நாற்றுகள் ஒரு அடி உயரம் வளர்ந்த பிறகு எடுத்து நடலாம்.

குழியெடுத்தல்

நடவுக்கு ஒரு அடி நீள, அகல, ஆழத்தில் குழிகளை எடுக்க வேண்டும். குழி எடுத்து ஒருநாள் கழித்து மட்கிய தொழுவுரம் மற்றும் குழியின் மேல் மண்ணை நன்றாகக் கலந்து குழியை நிரப்ப வேண்டும். குழியின் நடுவில் செடியை நடவு செய்ய வேண்டும்.

பராமரிப்பு

கன்றுகளை நட்டதும் உயிர் நீர் விட வேண்டும். வாரம் ஒருமுறை நீர் விட்டால் போதும்.

செடியின் அடிப்பகுதியில் இருந்து இரண்டடி உயரம் வரையுள்ள பக்கக் கிளைகளை நீக்க வேண்டும். காய்ந்த கிளைகள் மற்றும் நோயுற்ற கிளைகளை அகற்ற வேண்டும்.

களாக்காய், ஆகஸ்ட், செப்டம்பரில் அறுவடைக்கு வரும். ஒரு மரத்தில் இருந்து 2-4 கிலோ காய்கள் கிடைக்கும்.


முனைவர் பி.ஜெய்சங்கர், தோட்டக்கலை உதவிப் பேராசிரியர், தந்தை ரோவர் வேளாண்மைக் கல்லூரி, பெரம்பலூர்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!