கருப்பை மற்றும் யோனி வெளியாவதைத் தடுத்தல்!

றவை மாடுகளில் கருப்பை வெளித் தள்ளுதல், பிரசவம் முடிந்ததும் அல்லது அதற்குப் பிறகு சில மணி நேரங்களில் நடக்கும். யோனி வெளித் தள்ளுதல், பிரசவம் நடப்பதற்கு முன்புள்ள கடைசி மூன்று மாதங்களில் ஏற்படும்.

இதனால், சினைப் பிடிக்கும் வாய்ப்புக் குறைந்து பொருளாதார இழப்பு ஏற்படும். மேலும், மாடுகள் இறக்கும் நிலையும் கூட ஏற்படும். எனவே, கருப்பை மற்றும் யோனி வெளித் தள்ளுதலை, வருமுன் தடுப்பது குறித்தும், வந்த பிறகு சரி செய்வது குறித்தும், தெரிந்து கொள்வது அவசியம்.

கருப்பை, யோனி வெளிவரும் காரணங்கள்

நஞ்சுக்கொடி தங்குதல், கால்சியச் சத்துக்குறை, கன்றை ஈனுவதில் ஏற்படும் சிக்கல், கன்றை ஈனும் போது மாடு அதிகமாக முக்குதல், ஈஸ்ட்ரோஜன் சுரப்பி அதிகமாகச் சுரத்தல் போன்றவை கருப்பை வெளியே வருவதற்கான காரணங்கள் ஆகும்.

வயிற்றுக்குள் ஏற்படும் அதிக அழுத்தம் அல்லது கொழுப்பு இருத்தல், கருப்பை விரைப்புத் தன்மையை இழந்து மெதுவாகச் சுருங்குதல் ஆகியன, யோனி வெளியே வருவதற்கான காரணங்கள் ஆகும்.

பசுக்களில் ஈஸ்ட்ரோஜன் சுரப்பி அதிகமாகச் சுரந்தால், கருப்பை மற்றும் அதைச் சுற்றியுள்ள தசைகள் தளர்ந்து, கருப்பையும் யோனியும் வெளியே தள்ளப்படும்.

ஈனுவதில் சிக்கல் ஏற்படும் போது, கன்றை வெளியேற்றத் தரும் அதிக அழுத்தம் காரணமாகக் கருப்பையும் வெளியே வந்து விடும். சினையற்ற மாடுகளிலும் யோனி வெளியாதல் நிகழும். வளர்ச்சியின்றி மெலிந்து காணப்படும் கிடேரிகளில் இந்த நிலை ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

அறிகுறிகள்

வெளியே தள்ளப்பட்ட கருப்பை அல்லது யோனி, மூட்டு வரை தொங்கும். யோனி வெளித் தள்ளலால் கருச்சிதைவு ஏற்பட்டு, குறைமாதக் கன்றின் தலை வெளியே வருவது போல் காணப்படும். எனவே, இதை அடித் தள்ளுதல் என்றும் சொல்வார்கள். அதில், சாணம், வைக்கோல், தூசி போன்றவை படிந்திருக்கும்.

பொதுவாக, யோனியுடன் சேர்ந்து கருப்பை வாய் வெளியே வரும். இதனால், பசுக்களுக்கு அதிக வலியும், மூச்சுத் திணறலும் ஏற்படும். சில நேரங்களில் மாடுகள் உண்ணாமல் மிகவும் சோர்வாக, எழுந்து நிற்க முடியாத நிலைக்குத் தள்ளப்படும். மாடுகள் முக்குவதையும் காண இயலும்.

வெளியே தள்ளப்பட்ட கருப்பையில், சீழ் பிடித்துத் தற்காலிக மலட்டுத் தன்மை ஏற்படலாம். மேலும், கிருமிகள் உள்ளே செல்வதால் கருப்பை புண்ணாகி விடும்; ஒவ்வாமையால் பாதிக்கப்படும் கருப்பை அல்லது யோனி, வீக்கமாக இருக்கும்.

தீர்வு

முதலில், பாதிக்கப்பட்ட மாட்டை மற்ற மாடுகளிடம் இருந்து பிரித்துத் தனியாகக் கட்டி வைக்க வேண்டும். பிறகு, வெளிவந்த பகுதி அசுத்தமாக இருந்தால், அதை நல்ல நீரால் சுத்தமாகக் கழுவ வேண்டும்.

மாட்டைச் சுற்றியுள்ள இடத்தையும் சுத்தம் செய்ய வேண்டும். கருப்பை வெளியே வந்தால், சிறுநீரைக் கழிப்பதில் சிரமம் ஏற்படும். இந்நிலையில், வெளிவந்த பகுதியைச் சற்று உயரமாகத் தூக்கிப் பிடித்தால், சிறுநீர் வெளியே வருவதுடன் வீக்கமும் சற்றுக் குறையும்.

வெளிவந்த பகுதியை ஈரத்துணியால் சுற்றி வைக்க வேண்டும். துணி மீது அவ்வப்போது நீரைத் தெளித்து அதன் ஈரம் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மாடு தரையில் படுக்க முற்பட்டால் ஈரத்துணியால் மூடிய கருப்பையை, சுத்தமான வாழை இலையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும், கால்நடை மருத்துவரை உடனே அணுகி, மாட்டின் நிலையைக் கூறி, சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

மூலிகை மருத்துவம்

கால்நடை மருத்துவமனை அருகில் இல்லாத நிலையில், மூலிகை மருத்துவம் மூலம் முதலுதவி செய்யலாம். இதற்குத் தேவையான பொருள்கள்:

ஒரு மடல் சோற்றுக் கற்றாழைக் கூழ், ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி, இரண்டு கைப்பிடி தொட்டாற் சிணுங்கி இலை.

தயாரிப்பு முறை: கற்றாழைக் கூழின் பிசுபிசுப்புத் தன்மை குறையும் வரை பலமுறை கழுவ வேண்டும். அடுத்து, மஞ்சள் பொடியைச் சேர்த்து, பாதியாகக் குறையும் வரை கொதிக்க விட்டு ஆற வைக்க வேண்டும். தொட்டாற் சிணுங்கி இலையை விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பயன்படுத்தும் முறை: வெளிவந்த கருப்பை பகுதியைச் சுத்தம் செய்ய வேண்டும். பிறகு அதன் மீது கற்றாழைக் கூழைத் தடவ வேண்டும். கூழ் உலர்ந்ததும், தொட்டாற் சிணுங்கி விழுதைத் தடவ வேண்டும். நிலைமை குணமாகும் வரை இதைத் தொடர்ந்து செய்தால், வீக்கம் குறைந்து கருப்பை உள்ளே சென்று விடும்.

தவிர்க்கும் முறைகள்

இந்நிலை, பெரும்பாலும் சத்துக் குறையால் ஏற்படுவதால், மாடுகளுக்குச் சத்தான தீவனத்தை அளிக்க வேண்டும். சினைக் காலத்தில் பசுந்தீவனம் அளிக்க வேண்டும்.

மேலும், தாதுப்புகள் மற்றும் அடர் தீவனத்தை அளிக்க வேண்டும். சுமார் 300 கிலோ எடையுள்ள மாட்டுக்குத் தினமும் 5 கிலோ உலர் தீவனம், 3 கிலோ தவிடு, புண்ணாக்கைக் கொடுக்க வேண்டும்.

மாட்டுத் தொழுவம் சரிவாக இல்லாமல் சற்று உயரமாக இருக்க வேண்டும். கருப்பை மற்றும் யோனித் தள்ளலைத் தகுந்த சிகிச்சை மூலம் குணமாக்க முடியும். சிறந்த நிர்வாகத்தின் மூலம் இந்நிலை ஏற்படாமல் தவிர்க்கவும் முடியும்.


சா.சவிதா, நான்காம் ஆண்டு மாணவி, கால்நடை மருத்துவக் கல்லூரி, சென்னை – 600 007. மரு. பொ.ஜெயகாந்தன், உதவிப் பேராசிரியர், கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்,பிள்ளையார்பட்டி, தஞ்சாவூர் – 613 403.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!