பயிர்க் கழிவுகளை எரிக்கலாமா?

நிலவளத்தைக் காக்கப் பாடுபடும் இந்தக் காலத்தில், சில விவசாயிகள், தோப்பைச் சுத்தம் செய்வதாகக் கருதி தீ வைப்பது மன்னிக்க முடியாதது. அரையடி மண் உருவாக ஆயிரம் ஆண்டுகள் ஆகும் என்பர்.

ஆனால், வேலை செய்ய மலைக்கும் விவசாயிகள், தென்னந் தோப்பு, கரும்புத் தோட்டத்தில் தீயை வைத்துச் சுற்றுச்சூழலை மாசாக்கும் மாபாதகச் செயலைச் செய்கின்றனர்.

பயிர்க்கழிவு இயற்கை நமக்குத் தரும் கொடை. அதை அப்படியே மட்கச் செய்தால் மகத்தான இலாபம் உண்டு. இதில், வியப்பு என்னவெனில், கட்டைக் கரும்பு சாகுபடிக்கு முனையும் போது தீயை வைப்பது.

ஏற்கெனவே பத்து மாதங்கள் மண் வளத்தைக் கரும்பு உறிஞ்சிய நிலையில், மறுதாம்பு சாகுபடியின் போது தீ வைப்பது மிகப்பெரிய தவறாகும்.

இதை யாரோ ஒருவர் செய்த தவறாகக் கருத முடியாது. பஞ்சாப் கரும்பு வயல்களில் வைக்கப்பட்ட தீ மூலம் வானில் கிளம்பிய சாம்பல் துகள்களால், டில்லியில் விமானப் போக்குவரத்தே நின்று போனது பலருக்கும் தெரியும்.

காட்டில் தீப்பிடித்தால் கவலைப்படும் விவசாயிகள், தம் தோட்டங்களில் விவசாயக் கழிவுகளைத் தீ வைத்து எரிப்பது மிகமிகத் தவறாகும்.

தீயெரிந்த இடத்திலுள்ள நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் அழிவதால், மண்வளம் அழிவதுடன், மீண்டும் இந்த இடத்தை வளமாக்க முடியாது என்பதை விவசாயிகள் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். இத்தகைய தீய செயலை இனிமேல் யாரும் செய்ய வேண்டாம்.

மண்ணிலுள்ள உயிர்கள் அழிவதுடன், வேகமாகக் காற்று வீசும் போது, தென்னை மட்டைகளில் தீப்பிடித்து மரமும் அழிந்து போக நேரலாம். வைக்கோல் போர், கொட்டில்கள் கூட இதனால் தீப்பிடிக்க வாய்ப்புண்டு.

எனவே, தென்னந் தோப்பு மற்றும் கரும்புத் தோட்டங்களில் உள்ள தாவரக் கழிவுகளை எரித்து நிலத்தைச் சுத்தம் செய்ய வேண்டும் என்னும் நினைப்பை விவசாயிகள் கைவிட வேண்டும்.

அந்தக் கழிவுகளை மட்க வைத்து உரமாக ஆக்கினால் நிலவளம், மண்வளம் பெருகி, நல்ல மகசூலுக்குக் கை கொடுக்கும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.


டாக்டர் பா.இளங்கோவன், இணை இயக்குநர் மற்றும் பேராசிரியர், பாசன மேலாண்மைப் பயிற்சி நிலையம், துவாக்குடி, திருச்சி – 620 015.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!