நாட்டின் உணவுப் பாதுகாப்பில் முக்கியமானவை, சத்துகள் நிறைந்த உணவு வகைகளாகும். இந்தச் சத்துகளைத் தானியங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள், பழங்கள், பால், இறைச்சி மற்றும் மீனிலிருந்து பெறலாம். இத்தகைய சமநிலை உணவை உண்ணும் போது நம் உடலுக்குத் தேவையான சக்தி, புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுப்புகள் கிடைக்கும்.
மக்களின் வருமானப் பெருக்கம் மற்றும் நகரமயத்தால், இறைச்சி மற்றும் மீன்களை மக்கள் விரும்பி உண்ணத் தொடங்கி உள்ளனர். வளர்ந்து வரும் தேவையை ஈடுகட்ட, ஆடு, மாடு, கோழி மற்றும் மீன் வளர்ப்பு மிகுந்து வருகிறது.
மீன்களைக் கடல்நீர் மீன்கள், நன்னீர் மீன்கள் என இருவகையாகப் பிரிக்கலாம். நன்னீர் மீன்கள், ஆறு, ஏரி, குளம் ஆகிய இயற்கை நீர் நிலைகளில் வளரும். மேலும், குளங்களை வெட்டி, மீன் குஞ்சுகளை இருப்பு வைத்து, தீவனம் கொடுத்து வளர்க்கப் படுகின்றன.
நன்னீர் மீன் வகைகளில், இந்திய கெண்டை இனங்களான கட்லா, ரோகு, மிர்கால்; சீனக்கெண்டை இனங்களான புல் கெண்டை, வெள்ளிக் கெண்டை, சாதாக் கெண்டை ஆகியன அதிகமாக வளர்க்கப் படுகின்றன.
மேலும், கெளுத்தி, திலேப்பியா இனங்களும் வளர்க்கப் படுகின்றன. இவற்றைத் தவிர, இயற்கையாகப் பிடிக்கப்படும் விரால் மற்றும் அயிரை மீன்களும் அநேக மக்கள் விரும்பி உண்ணும் நன்னீர் மீன்களாகும்.
நன்னீர் மீன்களிலுள்ள சத்துகள்
நன்னீர் மீன்களில், நமது உடல் நலனுக்குத் தேவையான புரதம், கொழுப்பு, வைட்டமின்கள் மற்றும் தாதுப்புகள் நிறைந்து உள்ளன.
புரதம்
மீன்களில் உள்ள புரதத்தை மூன்று வகையாகப் பிரிக்கலாம். அவையாவன: நீரில் கரையும் புரதம், அதாவது, நொதிகள், மயோ பைப்ரில்லார் புரதம், அதாவது, மீன் சதையிலுள்ள புரதம், இணைப்பு புரதம் அல்லது ஸ்டோரமா புரதம், அதாவது, தோல், துடுப்பு மற்றும் செதிலில் உள்ள புரதம்.
நன்னீர் மீன்களில் 16-20% புரதம் இருக்கும். இது, பல்வேறு அமினோ அமிலங்களால் ஆனது. மனித உடலால் உற்பத்தி செய்ய முடியாத அமினோ அமிலத்தை, அத்தியாவசிய அமினோ அமிலம் (essential amino acid) என்கிறோம்.
நன்னீர் மீன்களில் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் 41-51% உள்ளன. மொத்த அமினோ அமிலங்களில், 15-20% குளுடாமிக் அமிலமும், 10-12% அஸ்பார்டிக் அமிலமும் உள்ளன.
குழந்தைகளுக்குத் தேவைப்படும் முக்கிய ஹிஸ்டிடீன் அமினோ அமிலம், மிர்கால் மீனில் அதிகமாக உள்ளது. ஆனால், லைசின் மற்றும் புரோலைன் அமினோ அமிலங்கள், கடல் மீன்களில் இருப்பதை விடக் குறைவாக உள்ளன. மீன் புரதம் எளிதில் செரிக்கக் கூடியதாகும்.
கொழுப்பு
நன்னீர் மீன்களில், 1-2.5% கொழுப்பு உள்ளது. நன்னீர் மீன் கொழுப்பு அமிலங்கள், கடல் மீன்களில் இருப்பதை விட மாறுபட்டு உள்ளன. பல்மடிக் அமிலம், ஒலியிக் அமிலம் ஆகியன முக்கியக் கொழுப்பு அமிலங்கள் ஆகும்.
கடல் மீன்களில் உள்ள சிறப்புமிக்க ஓமேகா-3 கொழுப்பு அமிலங்களான இபிஏ ஈகோசா பென்டா ஈனாயிக் அமிலம் மற்றும் டோகோசா ஹெக்ஸா ஈனாயிக் அமிலம், நன்னீர் மீன்களில் குறைவாக உள்ளன.
தாதுப்புகள்
மனித உடலுக்கு அதிகமாகத் தேவைப்படும் கனிமங்களான, சோடியம், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் ஆகியன பெரிய கனிமங்கள் எனவும், இரும்பு தாமிரம், துத்தநாகம், மாங்கனீஸ், செலீனியம் ஆகியன நுண் கனிமங்கள் எனவும் கூறப்படும்.
நன்னீர் மீன்களில் சோடியம், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு, துத்துநாகம், மாங்கனீஸ் ஆகிய தாதுப்புகள் நிறைந்து உள்ளன.
வைட்டமின்கள்
மனித உடலுக்கு வைட்டமின்கள் மிகவும் அவசியம். கொழுப்பில் கரையும் ஏ, டி, ஈ, கே வைட்டமின்கள், நன்னீர் மீன்களில் அதிகமாக உள்ளன. டி, கே ஆகிய வைட்டமின்கள், புன்ட்டஸ் என்னும் சிறிய வகை மீனில் அதிகமாக உள்ளன.
அயிரை மீன், நிறைய மக்கள் விரும்பி உண்ணும் மீனாகும். இது, சுவையும் சத்தும் நிறைந்தது. இம்மீனின் விலை கிலோ 1,500 ரூபாய் வரை இருக்கும். இந்த மீனிலுள்ள அமினோ அமிலங்கள் மருத்துவக் குணமிக்கவை.
இம்மீனின் கொழுப்பு அமிலத்தில், ஓமேகா-3 கொழுப்பு அமிலம் அதிகமாக உள்ளது. மேலும், இம்மீன்களை முழுமையாகச் சாப்பிடுவதால், எலும்பின் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துகளும் எளிதாகக் கிடைக்கின்றன.
தரக்கட்டுப்பாடு
கடல் மீன்களை ஒப்பிடும் போது, நன்னீர் மீன்களில் தரப் பிரச்சனை குறைவாக உள்ளது. கடலில் மீன்களைப் பிடித்து, கரைக்குக் கொண்டு வந்து, ஏலம் விட்டு நுகர்வோரை அடைவதற்கு நேரமாகும்.
ஆனால், நன்னீர் நிலைகளில் இருந்து பிடிபடும் மீன்கள், பனிக்கட்டிப் பதனத்தில், விரைவில் நுகர்வோரை அடைகின்றன. சில சமயங்களில் மீன்கள் செத்து வயிறு வீங்கிய நிலையில் சந்தைக்கு வரும். அத்தகைய மீன்கள் உண்ணத் தகுதியற்றவை.
தரமான மீன்களின் செவிள் சிவப்பு நிறத்தில், கண்கள் தெளிவாக, தோல் பளபளப்பாக இருக்கும். மேலும், சதை விரைப்பாக, நல்ல மணமுடன் இருக்கும்.
கெட்ட மீன்களின் செவிள் வெளிரிய நிறத்திலும், கண்கள் கலங்கியும், தோல் மங்கிய நிறத்திலும் இருக்கும். மேலும், துர்நாற்றமும், சதை கொளகொள எனவும் இருக்கும். நன்னீர் மீன்களின் தரப் பிரச்சனைக்கு, நுண்ணுயிர்கள், இரசாயன எச்சங்கள், கலப்படங்கள் ஆகியன காரணங்கள் ஆகும்.
நுண்ணுயிர்கள்
நுண்ணுயிர்கள், மீன்களின் செவிள், குடல் மற்றும் தோலில் அதிகமாக இருக்கும். மீன்கள் உயிருடன் இருக்கும் வரை இந்தக் கிருமிகளால் ஒன்றும் செய்ய இயலாது.
ஆனால், மீன்கள் இறந்த பிறகு, இக்கிருமிகள் சதையைத் தாக்கி அதனுள் ஊடுருவி, மீன்களைக் கெடச் செய்யும். மீன்களைக் கெடாமல் தடுப்பதற்குப் பனிக்கட்டியை இடுவது சிறந்த முறையாகும்.
இரசாயன எச்சங்கள்
பயிர்களில் பூச்சிகளின் பாதிப்பைத் தடுப்பதற்கு ஏராளமான பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன் படுகின்றன. சைபர்மெத்ரின், என்டோ சல்பான், லின்டேன், அல்டிரின், என்றின் ஆகியன முக்கியப் பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகும்.
இவை மழைக் காலத்தில் மழைநீர் மூலம் ஏரி, குளம், ஆறுகளில் கலக்கின்றன. பிறகு, நீர் மற்றும் குளத்து வண்டல் மூலம் நேரடியாக மீன்களை அடைகின்றன. மேலும், உணவுச் சங்கிலியில் புகுந்து மீன் உணவு மூலமும் மீன்களை அடைகின்றன.
பூச்சிக்கொல்லி மருந்துகள், கொழுப்பில் கரையும் தன்மை மிக்கவை. தாமிரபரணி ஆற்றில் வாழும் நன்னீர் மீன்களான, கட்லா, ரோகு, மிர்கால், திலேப்பியா, சாதாக் கெண்டை ஆகியவற்றை ஆய்வு செய்து பார்த்ததில், இம்மீன்கள் மூலம் மனிதனுக்கு எவ்விதப் பாதிப்பும் இல்லை என்பது தெரிய வந்தது.
மற்றொரு முக்கிய இரசாயன ஆபத்து, கன உலோக எச்சமாகும். ஆர்சினக், பாதரசம், காட்மியம், காரீயம் ஆகியன, மனிதனுக்குத் தீமை செய்யும் கன உலோகங்கள் ஆகும். இவை இயல்பாக மண்ணை அடைகின்றன.
மேலும், ஆலைக் கழிவுகள், உரம், இரசாயனக் கழிவுகள் மூலம், நீர் நிலைகளை அடைகின்றன. இவை, நீர் மற்றும் உணவுச் சங்கிலி மூலம் மீன்களை அடைகின்றன.
கன உலோகங்கள், மீனின் புரதத்தில் ஒட்டும் தன்மை மிக்கவை. இவற்றில் காட்மியமும் காரீயமும் மீனின் கல்லீரல், செவிள், சிறுநீரகம், எலும்பு ஆகியவற்றில் படியும் தன்மை கொண்டவை.
பாதரசம், மீனின் தசையில் படியும். கன உலோகங்கள் நிறைந்த மீன்களைத் தொடர்ந்து சாப்பிட்டால், மனிதனுக்குப் புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்கள் வரலாம்.
இந்த இரசாயனக் கழிவுகள், மீன்களின் உள் உறுப்புகளில் அதிகமாகப் படியும் என்பதால், அவற்றைக் கவனமாக நீக்கி விட்டுச் சமைக்க வேண்டும்.
கலப்படங்கள்
இப்போது மீனில், பார்மலின் என்னும் வேதிப் பொருளைச் சேர்ப்பதாகப் புகார் எழுந்துள்ளது. பொதுவாக, ஆய்வகங்களில் விலங்கின மாதிரிகள் மற்றும் இறந்த மனித உடலைப் பதப்படுத்த பார்மலின் பயன்படும்.
நெடுநேரம் மீன் கெடாமல் இருக்கச் சிலர் இதைப் பயன்படுத்தி வருகின்றனர். பார்மலின் கலந்த மீன், மனித உடலுக்குக் கெடுதலைத் தரும். மீனை நீரில் நன்கு அலசினால், பார்மலின் ஓரளவுக்கு அகலும்.
சத்துகளைப் பொறுத்த வரையில், கடல் மீன்களை விட, நன்னீர் மீன்களில் மனித உடலுக்கு நன்மை பயக்கும் ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் குறைவாக இருப்பினும், மற்ற புரதமும் தாதுப்புகளும் போதியளவில் உள்ளன.
தரத்தைப் பொறுத்த வரையில், கடல் மீன்களை விட, நன்னீர் மீன்கள் எளிதில் நுகர்வோரை அடைவதால், நுண்ணுயிர்ப் பாதிப்புக் குறைந்த நிலையில், நல்ல தரத்தில் கிடைக்கின்றன.
இராசயன எச்சங்களான, கன உலோகம் மற்றும் பூச்சிக் கொல்லிப் பாதிப்பு, வரையறுத்த அளவுகளை விடக் குறைவாக இருப்பதால், மக்கள் எந்த அச்சமுமின்றி நன்னீர் மீன்களை உண்ணலாம்.
முனைவர் இரா.ஷாலினி, முனைவர் ப.சிவராமன், இரா.ஜெயஷகிலா, உ.அரிசேகர், த.சூர்யா, ச.சுந்தர், மீன் தர உறுதிப்பாடு மற்றும் மேலாண்மைத் துறை மீன்வளக் கல்லூரி, தூத்துக்குடி.