நெற்பயிரைத் தாக்கும் வேர் முடிச்சு நூற்புழுக்கள் குறித்தும். அவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும் இங்கே பார்க்கலாம்.
சேத அறிகுறிகள்
வேர் முடிச்சு நூற் புழுக்களால் பாதிப்படைந்த வயலில், ஆங்காங்கே பயிர்களின் வளர்ச்சியின்றி, திட்டுத் திட்டாகக் காணப்படும்.
நாற்றங்காலில் உள்ள நாற்றுகள் அதிகளவில் மடிந்தும், எரிந்து போனதைப் போன்றும் காணப்படும்.
பாதிக்கப்பட்ட நாற்றுகள் வளர்ச்சிக் குன்றி, மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
பாதிக்கப்பட்ட பயிர்களின் வேர் நுனியில், கொக்கியைப் போன்ற முடிச்சுகள் இருக்கும்.
மேலாண்மை முறைகள்
பூசண முட்டை ஒட்டுண்ணியான பர்பூரியோ சிலியம் லீலாசினம், பொகோனியா கிளாமி டோஸ்போரியா போன்ற, உயிரியல் நூற்புழுக் கொல்லிகளை, எக்டருக்கு 2.5 கிலோ வீதம் மண்ணில் இடுவதன் மூலம், இந்த நூற்புழுக்களை வெகுவாகக் கட்டுப்படுத்தலாம்.
ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் பேசில்லஸ் சப்டிலிஸ் வீதம் எடுத்து விதை நேர்த்தி செய்து விதைத்தல், 1.5 கிலோ பேசில்லஸ் சப்டிலிஸ் கலந்த கரைசலில், நாற்றுகளை நனைத்தல், எக்டருக்கு 2.5 கிலோ பேசில்லஸ் சப்டிலிஸ் வீதம் எடுத்து, நடவு வயலில் இடுதல் ஆகியவற்றின் மூலம், இந்த நூற் புழுக்களைக் கட்டுப் படுத்தலாம்.
நூற்புழுப் பாதிப்பு இல்லாத இடத்தில் நாற்றங்காலை அமைத்து, நல்ல நாற்றுகளை நடவு செய்ய வேண்டும்.
சணப்பை, கொளுஞ்சி போன்ற பசுந்தாள் உரப் பயிர்களை வளர்த்து, அவை பூப்பதற்கு முன் மடக்கி உழ வேண்டும். இதனால், அந்தப் பயிர்கள் மட்கும் போது, அவற்றில் இருந்து, நூற்புழுக்களை அழிக்கும் பல்வேறு நச்சு வாயுக்கள் வெளியேறுவதன் மூலமும், நன்மை பயக்கும் நுண்ணுயிரிகள் பெருகுவதன் மூலமும், நூற் புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்.
நெற்பயிருடன், காய்கறி மற்றும் பயறுவகைப் பயிர்களைச் சுழற்சி முறையில் பயிரிடுவதன் மூலமும், இந்த நூற் புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்.
செய்தி: இயக்குநர், மாநில வேளாண்மை விரிவாக்க மேலாண்மை நிலையம், குடுமியான்மலை.