இறால் ஓட்டுக் கழிவைப் பயன்படுத்தும் முறைகள்!

ந்தியாவின் மொத்தக் கடல் மீன் பிடிப்பில் மேலோட்டுக் கணுக்காலிகளின் பங்கு 12% ஆகும். இந்திய இறால் உற்பத்தி, இப்போது சுமார் ஏழு இலட்சம் மெட்ரிக் டன்னாக உள்ளது.

இறால் உற்பத்தியில் உள்ள இடைவிடாத வளர்ச்சியும், ஏற்றுமதிச் சந்தையில் கிடைக்கும் நல்ல வரவேற்பும், அதிகளவில் மீன் பதன ஆலைகளை நிறுவக் காரணமாகின்றன. இறால் பதப்படுத்தலின் போது, அதன் எடையில் 45-55% கழிவாக வெளிப் படுகிறது.

இவ்வகையில், நம் நாட்டில் ஆண்டுக்கு 1.5 இலட்சம் டன்னுக்கும் மேல் ஓட்டுமீன் கழிவுகள் கிடைக்கின்றன. மேலும், ஓட்டுக் கணவா மீன்களின் மேலோட்டுக் கழிவுகள், அலகுகள் மற்றும் ஓலக் கணவாயின் உள்ளோடுகள் (Pen) போன்றவை கைட்டின் உற்பத்திக்கான மூலப் பொருளாக அமைகின்றன.

இந்தக் கழிவுகளை மதிப்புமிக்க பொருள்களாக மாற்றுவதற்கு, செலவு குறைந்த மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பல வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்று, ஓட்டுக் கழிவுகளை கைட்டின் மற்றும் கைட்டோசனாக மாற்றுவது ஆகும். இந்தியாவில், ஆண்டுதோறும் இறால் ஓட்டுக் கழிவிலிருந்து 7,000 டன் கைட்டினை உற்பத்தி செய்வதற்கு வாய்ப்பு உள்ளது. இருப்பினும், 20% மட்டுமே உற்பத்தி செய்யப் படுகிறது.

கைட்டின் மற்றும் கைட்டோசன் தொழிலை வணிக நோக்கில் நிறுவினால், வேலை வாய்ப்புக் கிடைக்கும். மேலும், சுற்றுச் சூழலைப் பாதிக்கும், பெரியளவிலான மேலோட்டுக் கழிவைத் திறம்படப் பயன் படுத்தவும் முடியும். ஆனால், உற்பத்திக்குப் பயன்படும் இரசாயனங்களை அகற்றுவதில், இத்தொழில் எதிர் கொள்ளும் சிக்கல்கள் கவலை யளிப்பதாக உள்ளன.

கணுக்காலி தோடுகளின் கலவை

கணுக்காலிகளின் ஓடு, 30-40% புரதம், 25-35% சாம்பல் (கால்சியம் கார்பனேட் மற்றும் கால்சியம் பாஸ்பேட்) மற்றும் 20-30% கைட்டினைக் கொண்டுள்ளது. கைட்டின் (C8H13O5N) இறால் ஓட்டின் முக்கியக் கூறுகளில் ஒன்றாகும். இது, நைட்ரஜனைக் கொண்ட நீண்ட சங்கிலி பாலி சாக்கரைடு ஆகும்.

இதில், மோனோமர், சூ-அசிடைல் குளுக்கோசமைன் (1-4) கிளைகோசிடிக் ஒன்றாக இணைக்கப்பட்டு உள்ளன. இறால் ஓட்டுக் கழிவிலிருந்து எதிர்பார்க்கும் உற்பத்தி, உலர் எடை அடிப்படையில் 14-27% ஆகும். நண்டு ஓட்டுக் கழிவில் இருந்தும் கைட்டினைத் தயாரிக்கலாம். அவ்வாறெனில், அதன் உற்பத்தி 13-15% இருக்கும்.

தேவையான பொருள்கள்

இறால் ஓட்டுக் கழிவு, நீர், சோடியம் ஹைட்ராக்ஸைடு, ஹைட்ரோ குளோரிக் அமிலம், கொள்கலன்கள், தட்டுகள், கார-அமிலக் காகிதம், மீட்டர், தராசு, மின்னடுப்பு.

செய்முறை

இறால் ஓட்டுக் கழிவை எடையிட்டு, அதிலுள்ள அழுக்கை நீரில் நன்கு கழுவ வேண்டும். அடுத்து, புரதத்தை நீக்க, ஒரு பங்கு ஓட்டுக்கு 5 பங்கு கரைப்பான் வீதம், 4% சோடியம் ஹைட்ராக்சைடு கரைசலோடு சேர்த்து 80 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் ஒரு மணி நேரம் சூடாக்க வேண்டும். அடுத்து, காரத்தை நடுநிலையில் வைக்க, சோடியம் ஹைட்ராக்சைடை வடிகட்டி, நீரில் பலமுறை கழுவ வேண்டும்.

அடுத்து, கனிமத்தை நீக்க, இறால் ஓடுகளை 3% ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் ஒரு மணி நேரம் வைக்க வேண்டும். பிறகு அமிலத்தை வடிகட்ட வேண்டும். ஒரு பங்கு ஓட்டுக்கு 5 பங்கு கரைப்பான் வீதம் பயன்படுத்த வேண்டும். அடுத்து, PH-ஐ பெறுவதற்கு, ஓடுகளை ஓடும் குழாய் நீரில் பலமுறை கழுவ வேண்டும்.

அடுத்து, ஓடுகளை வெளிரச் செய்ய 1% பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசலில் முப்பது நிமிடம் வைக்க வேண்டும். மீண்டும் 1% ஆக்சாலிக் அமிலத்தில் முப்பது நிமிடம் வைக்க வேண்டும். இப்படிச் சுத்திகரித்த கைட்டின் மென்மையாக, 65 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் ஒரு மணி நேரம் காய வைக்க வேண்டும்.

கைட்டினைப் பொதிகம் செய்தல்

நூறு கேஜ்க்குக் குறைந்த அடர்த்தியுள்ள பாலித்தீனில் லேமினேட் செய்யப்பட்ட கைட்டினை, அதிக அடர்த்தியுள்ள பாலித்தீன் கஸ்ஸட் பையில் அடைத்து வைக்க வேண்டும். இதை அப்படியே கைட்டினாக விற்பனை செய்யலாம். அல்லது கைட்டினில் இருந்து கைட்டோசனைத் தயாரிக்கலாம்.

கைட்டினிலிருந்து கைட்டோசனைத் தயாரித்தல்

இறால் ஓடுகளில் இருக்கும் புரதம் மற்றும் கனிமங்களை நீக்கிய பிறகு கிடைக்கும் வேதிப்பொருள் கைட்டின் எனப்படுகிறது. இதிலிருந்து அசிட்டைல் தொகுதியை நீக்கி, கைட்டோசன் உற்பத்தி செய்யப் படுகிறது.

கைட்டோசன் என்பது, நேரியல் பாலி சாக்கரைடு ஆகும். இது, அசிடைலேட் அல்லாத டி-குளுக்கோசமைன் மற்றும் அசிடைலேட்டட் தொகுதி நீக்கப்பட்ட என்-அசிடைல் குளுக்கோமைன் ஆகியவற்றால் ஆனது.

கைட்டினிலிருந்து நீக்கப்படும் அசிட்டைலின் அளவைப் பொறுத்து, கைட்டோசனின் தரம் மாறுபடும். உலர்ந்த இறால் மேலோட்டில் இருந்து 20%, உலர் நண்டுக் கழிவில் இருந்து 12% கைட்டோசன் கிடைக்கும்.

தேவையான பொருள்கள்: கைட்டின், சோடியம் ஹைட்ராக்ஸைடு, நீர், கொள்கலன்கள், தட்டுகள், கார – அமிலக் காகிதம், மீட்டர், தராசு, அடுப்பு.

செய்முறை: மேலே கூறியுள்ள முறைகளைப் பின்பற்றி, இறால் ஓட்டுக் கழிவிலிருந்து கைட்டினைத் தயாரித்துக் கொள்ள வேண்டும். அடுத்து, இந்தக் கைட்டினை 40% சோடியம் ஹைட்ராக்சைடு கரைசலில், 80-100 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில், இரண்டு மணி நேரம் வைக்க வேண்டும். ஒரு பங்கு கைட்டினுக்குப் பத்துப் பங்கு கரைசல் வீதம் பயன்படுத்த வேண்டும்.

சரியான கார, அமிலத் தன்மையைப் பெற, காரத்தை வடிகட்டிப் பலமுறை நீரில் கழுவ வேண்டும். அடுத்து, இந்தக் கைட்டோசனை 65 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் நான்கு மணி நேரம் உலர்த்தினால், உலர்ந்த கைட்டோசன் கிடைக்கும்.

கைட்டோசானைப் பொதிகம் செய்தல்

நூறு கேஜ்க்குக் குறைவான அடர்த்தியுள்ள பாலித்தீனில் லேமினேட் செய்யப்பட்ட கைட்டோசனை, அதிக அடர்த்தியுள்ள பாலித்தீன் பையில் இட்டு வைக்க வேண்டும்.

குறிப்பு: ஒவ்வொரு நிலையிலும் உற்பத்தி அளவைக் கணக்கிட்டு, உலர் எடை மற்றும் ஈரமான எடை அடிப்படையில், இறுதி உற்பத்தி அளவை முடிவு செய்ய வேண்டும்.


மு.முருகானந்தம், பா.பார்த்திபன், கு.கவிநேசன் மீன்பதனத் தொழில்நுட்பத் துறை, மீன்வளக் கல்லூரி, தூத்துக்குடி – 628 008.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!