தமிழ்நாட்டில் முப்பது இலட்சம் எக்டர் நிலத்தில் மானாவாரி சாகுபடி நடக்கிறது. இதில் பெரும்பகுதி செம்மண் நிலமாகும். மானாவாரி விவசாயம், உறுதியில்லாத மழையை மட்டுமே நம்பியுள்ளது.
பருவமழை எல்லா ஆண்டுகளிலும் சீராகப் பெய்வதில்லை. ஆனாலும், கிடைக்கும் மழைநீரைச் சிறிதளவும் வீணாக்காமல் பயிருக்குப் பயன்படுத்தினால் 20% வரை கூடுதல் மகசூல் கிடைக்கும்.
பொதுவாக, மானாவாரிப் பயிர்கள் நன்கு விளைய 250-500 மி.மீ. நீர் தேவை. மானாவாரி நிலங்களில் பெய்யும் மழையில் 10-40% நீர், நிலத்தை விட்டு வெளியேறி வீணாகிறது.
எனவே, மானாவாரி நிலங்களில் மழைநீரை எப்படியெல்லாம் சேமிக்கலாம் என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.
கோடையுழவு
ஆண்டுதோறும் ஏப்ரல், மே-யில் பெய்யும் மழைநீரைக் கொண்டு உழுவது கோடையுழவு. செம்மண் நிலத்தில் மண் பொலபொலப்பாக இருப்பதால், நாட்டுக் கலப்பை, இயந்திரக் கலப்பை மற்றும் சட்டிக் கலப்பையால் உழுகலாம்.
இதனால், மழைநீர் நிலத்தில் இறங்கி ஈரத்தன்மை அதிகமாகும். இப்படி, கோடை மழையில் 15% நீரை மண்ணில் சேமிக்கலாம்.
கோடையுழவால், அறுவடைக்குப் பின் விடப்படும் பயிர்க் கழிவுகள் மண்ணில் புதைந்து மட்கி, பயிர்களுக்கான சத்துகளாக மண்ணில் தங்கும்.
களை விதைகள், கோரைக் கிழங்குகள் மேலே கொண்டு வரப்பட்டு அழிக்கப்படும்.
மண்ணுக்குள் கிடக்கும் பூச்சிகள், அவற்றின் முட்டைகள், கூட்டுப் புழுக்கள், பூசண வித்துகள், நூற்புழுக்களின் கூட்டுப் புழுக்கள் முதலியன, வெளியே கொண்டு வரப்பட்டு அழிக்கப்படும்.
மண்ணரிப்பைத் தடுக்கும் வகையில், சரிவுக்குக் குறுக்கே உழ வேண்டும். இதனால், மழைநீர் சால்களில் தேங்கி நின்று மண்ணுக்குள் செல்லும்.
ஆழச்சால் அகலப்பாத்தி
நிலச்சரிவு 1% உள்ள நிலங்களுக்கு இம்முறை ஏற்றது. இந்த முறையில், 120 செ.மீ. அகலத்தில் பாத்தியையும், 30 செ.மீ. அகலம் 15 செ.மீ. ஆழத்தில் சால்களையும், சரிவுக்குக் குறுக்கே அமைக்க வேண்டும்.
இதனால், நீரோட்டமும் மண்ணரிப்பும் தடுக்கப்படும்; மண்ணின் நீர்ப் பிடிப்புத் தன்மை மேம்படும்.
வடிகால் வாய்க்கால், மழை கொஞ்சமாகப் பெய்யும் போது நீரைச் சேர்த்து வைத்து, அகலப்பாத்தில் உள்ள பயிர்களுக்கு, பக்கவாட்டு ஊடுருவல் முறையில் கொடுக்கும்.
கனமழை பெய்யும் போது கிடைக்கும் அதிகமான நீரைப் பண்ணைக் குட்டையில் வடிக்கவும் உதவும்.
சரிவுக்குக் குறுக்கே உழுதல்
மானாவாரி நிலங்களில் சரிவுக்குக் குறுக்கே உழுவது, சால்களில் ஆங்காங்கே மழைநீர்த் தேங்கி நின்று மண்ணுக்குள் செல்ல ஏதுவாகும். இம்முறையைக் கோடையுழவின் போது கையாண்டால், அதிகமான நீர், மேல் மண்ணுடன் வீணாவது தடுக்கப்படும்.
சரிவுக்குக் குறுக்கே சிறு வரப்புகள்
நிலச்சரிவு 0.5%க்கு அதிகமாக இருக்கும் நிலங்களில், 15-22.5 செ.மீ. கனத்தில், சிறியளவில் குறுக்கு வரப்புகளை அமைக்கலாம். இதனால், மண்ணும் மழைநீரும் நிலத்தை விட்டுச் செல்வது தடுக்கப்படும்; நிலத்தின் ஈரத்தன்மை மேம்படும்.
சம உயர வரப்புகள்
நிலச் சரிவுக்குக் குறுக்கே சம உயர வரப்புகளை அமைப்பது, குறைவான மழையுள்ள பகுதிகளுக்கும், நிலச்சரிவு 2-10% உள்ள இடங்களுக்கும் ஏற்றது.
இவ்வரப்பின் அகலம், உயரம் மற்றும் இடைவெளி நிலச்சரிவுக்கு ஏற்ப மாறுபடும். சத்தான மேல்மண் மற்றும் மழைநீரைப் பாதுகாக்க, 130 செ.மீ. அடிமட்ட அகலம், 30 செ.மீ. மேல்மட்ட அகலம் மற்றும் 40 செ.மீ. உயரத்தில் சமமட்ட வரப்புகள் இருக்க வேண்டும்.
வேளாண் பொறியியல் வல்லுநரின் ஆலோசனைப்படி அமைப்பது நல்லது. இதனால், மழைநீர் நிலத்தில் சிறு வடிகால் வைத்து ஓடுவது தவிர்க்கப்படும். நாளடைவில் நிலம் சமமாக வழிவகுக்கும்.
கிரேடட் வரப்புகள்
களிமண் பகுதிகளில் கிரேடட் வரப்புகளை அமைக்கலாம். குறைவாக மழை பெய்யும் பகுதிகளுக்கும், நிலச்சரிவு 2-10% உள்ள இடங்களுக்கும் ஏற்றது.
இவ்வரப்பின் அகலம், உயரம் மற்றும் இடைவெளி நிலச்சரிவுக்கு ஏற்ப மாறுபடும். இவ்வரப்பு சம உயரக் கோட்டில் இருந்து 0.2-0.3% வெளியே சரிவாக இருக்கும்.
களிமண் வரப்பில் நாளடைவில் விரிசல்கள் ஏற்பட்டுச் சேதமாகும். எனவே, தகுந்த பராமரிப்பு அவசியம்.
தாவரத் தடுப்பு வரப்புகள்
மண் மற்றும் கிரேடட் வரப்புகள், கனமழை மற்றும் வேகமான காற்றால் அழிக்கப் படுவதால், அடிக்கடி சரி செய்ய வேண்டியுள்ளது.
எனவே, நிலச்சரிவு 3%க்கு மேல் இருக்கும் நிலங்களில் சம உயர வரப்புகளை அமைத்து, சரிவுக்குக் குறுக்கே, வெட்டிவேர், கொழுக்கட்டைப் புல், வேலிமசால் போன்றவற்றை வளர்த்தால், மண்ணரிப்பைத் தடுக்கலாம்; நீர்ப்பிடிப்புத் திறன் கூடும்.
களிமண் நிலத்தில் வெட்டிவேரின் வேர்கள் மிக அடர்த்தியாக, ஆழமாக வளரும். இதன் பருத்த சல்லி வேர்கள் தடுப்புச் சுவரைப் போல அமைந்து, மண்ணரிப்பு மற்றும் ஓடைகள் உருவாவதைத் தடுக்கும்.
பண்ணைக் குட்டை
நிலத்தால் உறிஞ்ச முடியாமல் வெளியேறும் மழைநீரை, நிலத்தின் சரிவான இடத்தில் குட்டையை அமைத்து அதில் சேமிக்கலாம்.
இந்நீரை, முக்கிய வளர்ச்சிப் பருவங்களில் பயிர்களுக்குக் கொடுக்கலாம். மேலும், அருகிலுள்ள கிணறுகளில் நீர் ஊறும். கால்நடைகளுக்குக் குடிநீராகவும் பயன்படும்.
கசிவுநீர்க் குட்டை
இது, அதிகமாக மழை பெய்யும் காலங்களில் ஓடிவரும் நீரைத் தடுத்து நிறுத்தி நிலத்தடி நீராக மாற்றும்.
இதை அமைக்கும் போது, தேவையான இடம், கிணறுகளின் எண்ணிக்கை, கிடைக்கும் பயன்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
கசிவுநீர்க் குட்டை, சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரையுள்ள கிணறுகளுக்கும் பயனளிக்கும்.
இதனால், ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளில் வண்டல் படிவது தடுக்கப்படும். இதில் தேங்கும் நீர், கால்நடைகள் மற்றும் மக்களின் இதர தேவைகளுக்கு உதவும்.
கிணறுகளில் நீர்மட்டம் உயர்வதால் பாசனப் பரப்பும், உற்பத்தியும் கூடும்.
சிறிய நீர்ப்பிடிப்புப் படுகை
மானாவாரிச் சரிவு நிலங்களில் குறுக்கே சிறிய நீர்ப்பிடிப்புப் படுகைகளை அமைத்து, பலவகையான மரங்களை அந்த மழைநீரில் வளர்க்கலாம்.
பகுதிப் பாத்தி
விதைப்பதற்கு முன், மண் ஈரத்தைக் காக்கவும், மண்ணரிப்பைத் தடுக்கவும், 2% சரிவுள்ள கரிசல் நிலங்களில் 1-2 சென்ட் அளவில் பகுதிப் பாத்திகளை அமைக்கலாம்.
மானாவாரி நிலங்களில் இந்தப் பாத்திகளை அமைப்பது, சிறந்த மழைநீர்ச் சேமிப்பு முறையாகும். 8×5 மீட்டர் அளவில் பகுதிப் பாத்திகளை அமைக்க வேண்டும்.
இவை, சிற்றணைகளைப் போல இருந்து, மழைநீரை நெடுநாட்கள் தேக்கி வைக்கும். இந்நீர் மண்ணுக்குள் இறங்கி, பயிர்களுக்குப் பயன்படும்.
மேலும், நிலவளம் மேம்படுவதால் விளைச்சலும் 20% கூடும். உழும் போதே இந்தப் பாத்திகளை அமைத்து விடலாம்.
இதற்குப் பாரமைக்கும் கருவியைப் பயன்படுத்தினால் 50% செலவு குறையும். முன்பருவ விதைப்புக்குப் பிறகு, இப்பாத்திகளை அமைத்தால், மழைநீர் முழுவதும் பயிர்களுக்குக் கிடைக்கும்.
முனைவர் பெ.வீரமணி, உதவிப் பேராசிரியர், வேளாண்மை அறிவியல் நிலையம். விரிஞ்சிபுரம், வேலூர் மாவட்டம்.