வன்னி மரத்தின் சிறப்புகள்!

ன்னி மரத்தின் தாவரவியல் பெயர் ப்ரஸாபிஸ்ஸ்பைசிஜரா (Prosopis spicigera). இதன் தாவரக் குடும்பம் மைமோசியே. வன்னிமரத்தின் தாயகம் இந்தியாவாகும். வன்னி மரத்தை ஆங்கிலத்தில் கெஜ்ரி (Khejri) என்று அழைக்கின்றனர். இம்மரம், இராஜஸ்தான் மாநிலத்தின் மாநில மரமாகும். வன்னி மரம், பாலைவனங்களில், நீர் அரிதாகக் கிடைக்கும் இடங்களில் கூட ஓங்கி வளரும்.

பல்வேறு சிறப்புகளைக் கொண்ட வன்னிமரம், வன்னியர்களின் அடையாளமாகக் கருதப்படுகிறது. வன்னி மரத்தின் தொன்மையை, மருத்துவக் குணங்களை, தஞ்சைப் பெரிய கோயிலிலும், கங்கை கொண்ட சோழபுரத்திலும் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள் மூலம் அறியலாம்.

இந்தியா மட்டுமல்லாது, மேற்காசிய மற்றும் தெற்காசிய நாடுகளான, ஆப்கானிஸ்தான், ஈரான், ஓமன், பாகிஸ்தான், சவுதி அரேபியா, சவுதி அரபு அமீரகம், எமன், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் வன்னி மரங்கள் உள்ளன. இந்தியாவில், இராஜஸ்தான், அரியானா, பஞ்சாப், குஜராத், உத்திரப்பிரதேசம் மற்றும் தென்னகத்தின் வறண்ட பகுதிகளிலும் இந்த மரங்கள் உள்ளன. ஆண்டுக்கு 500 மி.மீ.க்கும் குறைவாக மழை பெய்யும் இடங்களிலும் வன்னிமரம் வளரும்.

வறண்ட பாலைவனப் பகுதிகளிலும், களர் மண்ணிலும் வளரக் கூடிய பசுமைமாறா மரம் வன்னிமரம். பாலைநிலத்து மணலிலே வளர்ந்து, மிகுந்த ஆழத்திலுள்ள ஈரத்தை உறிஞ்சி வாழும் தன்மையுடையது. வன்னி மரம் மிகவும் வசீகரமான மரம்.

இதன் இலைகள் முதல் அனைத்தும் சிறப்பு வாய்ந்தவை. இந்த மரத்தை நம் இந்திய அரசு அஞ்சல் தலையில் வெளியிட்டுப் பெருமை சேர்த்தது. வன்னி மரத்தின் பெருமையை உணர்ந்த நம் முன்னோர்கள் இதைத் தல விருட்சமாக எண்ணற்ற கோயில்களில் வளர்த்துப் போற்றிப் பாதுகாத்து வந்தனர்.

முள்ளுள்ள இலையுதிர் மரம். மிகச்சிறிய கூட்டிலைகளைக் கொண்டது. சதைப்பற்றுள்ள உருளைவடிவக் காய்களை உடையது. பொதுவாக, வன்னி மரங்கள் கரிசல் நிலங்களில் வளரும். தோட்டங்களில் ஆங்காங்கே முளைக்கும் இந்த மரங்களை யாரும் வெட்டுவதில்லை.

அந்த அளவுக்குப் புனிதமாகக் கருதப்படும் மரமாகும். வன்னி இலைகள் கால்நடைகளுக்குச் சிறந்த தீவனமாகும். வன்னி மரங்கள் கட்டடம் கட்ட உதவும். எல்லா மரங்களையும் கரையான் அரிக்கும். ஆனால், இதை மட்டும் கரையான் தொடுவதில்லை. மேலும், இது விறகாகவும் பயன்படுகிறது.

வளர்ப்பு முறைகள்

மரங்களை வளர்க்க மரக்கிளையை ஆறடி அளவில் வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு சாக்குப்பையில் செம்மண் மற்றும் கறம்பை மணலோடு, மட்கிய குப்பையைக் கலந்து நீர் ஊற்ற வேண்டும். அதற்குப் பிறகு ஆறடி உயரமுள்ள மரக்கிளையை அதில் நட வேண்டும். இப்படிச் செய்தால் 14 ஆம் நாள் துளிர்க்கத் தொடங்கி விடும். முப்பது நாளில் இலைகள் வந்து விடும். எழுபது நாளில் ஒருமரம் நடவுக்குத் தயாராகி விடும்.

நட்டதில் இருந்து அது மரமாக வளரச் சில ஆண்டுகளாகும். அதனால், மரக்கிளைகளை வெட்டி, நடவு செய்து மரங்களாக உருவாக்கலாம். விதை போட்டு வளரக்கூடிய மரக்கன்றுகளில், விதைத்த மூன்று ஆண்டுகளில் மரக்கிளைகளை வெட்டி நட்டால் மரமாக வளர்ந்து விடும். இதில் நோய்த் தாக்குதல் குறைவு. மரக்கன்று வளரும் தொடக்கக் காலத்தில் மட்டும் இலைப்புள்ளி நோய் காணப்படும். இந்நோயைக் கட்டுப்படுத்த, வேப்ப எண்ணெய்யைப் பயன்படுத்தலாம்.

மருத்துவப் பயன்கள்

இயற்கையின் கருணை, உடல்நலப் பாதிப்புகளுக்குத் தீர்வாக, மூலிகைகளைப் பக்குவப்படுத்தி மருந்தாகக் கொள்ளலாம். சில மூலிகைகள் இருக்குமிடம் சென்றாலே, நம்மிடம் உள்ள நோய்களுக்குத் தீர்வு கிடைத்து விடும். அடர்ந்த காடுகளில் ஆன்மிகம் சார்ந்து அல்லது சுற்றுப் பயணமாகச் செல்லும் போது, அங்கே செழித்து வளரும் பல்வேறு மூலிகைகளின் ஆற்றல், காற்றில் கலந்து உடலில் பட்டு நோய்கள் அகலக் காரணமாகிறது. அந்த வகையில், வன்னிமரம் சிறந்த மருத்துவப் பண்புகளை கொண்டுள்ளது.

வன்னிமரப் பட்டைகளை நீரில் கொதிக்க வைத்து, குடிநீராகப் பருகிவர, மகப்பேறின்மைப் பாதிப்புகள் விலகி, கருவுறும் வாய்ப்பு அமையும், இன்றைய காலக்கட்டத்தில், சிசேரியன் என்னும் ஆயுதப் பயன்பாடு இல்லாமல், சுகப்பிரசவம் நிகழ, வன்னிமரப் பட்டையில் உருவாகும் பிசினைச் சேகரித்து, நிழலில் உலர்த்திப் பொடியாக்கி, அதில் சிறிதளவு எடுத்துக் கொதிக்க வைத்துப் பருகிவர, பெண்களுக்குச் சுகப்பிரசவம் ஏற்படும்.

வன்னிக்காயைப் பொடி செய்து சாப்பிட்டால் மாதவிலக்குப் பிரச்சனை, அதிகமான இரத்தப்போக்குப் பிரச்சனை தீரும். அந்தளவில் அதில் மருத்துவக் குணம் இருக்கிறது. விந்தணுக்களின் நீர்ப்புத் தன்மை திடமாகும். ஏனெனில், நல்ல விந்தணு, கருவுறுவதற்கான விந்தணு என்றால், டி.என்.ஏ., ஆர்.என்.ஏ. நல்ல விதத்தில் இருக்க வேண்டும். நீர்த்துப்போன விந்தணுவில் இதெல்லாம் நல்ல விதத்தில் இருக்காது. மிகக் குறைவாகவும் இருக்கும். இந்தப் பொடியைத் தொடர்ந்து சாப்பிட்டால் விந்துக் கட்டும். கருவுறும் தன்மையும் அதிகமாகும்.

வன்னிமரப் பட்டை உடல் செரிமானக் கோளாறுகளைச் சரி செய்யும், அல்சர் பாதிப்புகளைச் சரியாக்கும், விஷக்கடிகளின் மேல், பட்டையை அரைத்து தடவி வந்தால் வலி நீங்கும். உடல் தசைகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் கட்டிகளைக் கரைக்க, வன்னிமரப் பட்டை பயன்படும்.

தொழுநோய்ப் பாதிப்புகளைப் போக்கும் அருமருந்தாகும். தினமும், வன்னி மரத்தின் அருகே சற்று நேரம் அமர்ந்து வந்தால், வன்னிமரக் காற்றானது, சுவாசப் பாதிப்புகளைப் போக்கி, உடல் நோய்களைச் சரி செய்து, உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வை அளிக்கும்.

வன்னிக்காயை நீரில் கொதிக்க வைத்து வாயைக் கொப்பளித்தால், ஈறுகள், பல்வலி, வாய், நாக்கின் இரணம், வலி, வீக்கம் போன்றவை குணமாகும். வன்னிமரப் பட்டை விஷக்கடியை முறிக்கும். தசைப்பிடிப்பு மற்றும் மூல நோயைப் போக்கும். வன்னிமர இலையும் பழங்களும் நரம்புத் தளர்ச்சியைப் போக்கும். வன்னிமரச் சாம்பலைக் கொண்டு பல் துலக்கினால் பற்கள் வலுப்பெறும். வன்னி இலைகளை அரைத்து வலியுள்ள இடத்தில் பற்றாகப் போடலாம்.

வன்னிக்காய்ப் பொடியானது மார்புச் சளியைப் போக்கும். வன்னி இலையை அம்மியில் அரைத்துப் புண்ணில் வைத்துக் கட்டினால் புண் ஆறிவிடும். இவ்வளவு மருத்துவக் குணங்களைக் வன்னிமரத்தை வளர்த்துப் பாதுகாத்து மனிதகுல மேம்பாட்டுக்கு வழிவகை செய்வோம்.


முனைவர் கா.பரமேஸ்வரி, முனைவர் மு.சண்முகநாதன், முனைவர் சே.நக்கீரன், வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,

குடுமியான்மலை, புதுக்கோட்டை மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!