ஊடுபயிர்களைத் தேர்வு செய்வது எப்படி?

டுபயிர்கள் பல்வேறு வகைகளில் விவசாயிகளுக்குப் பயன்களைத் தரும். அதாவது, கூடுதல் வருவாயைத் தரும், களைகளைக் கட்டுப்படுத்தும், முக்கியப் பயிர்களைத் தாக்கும் பூச்சி மற்றும் நோய்களைத் தடுக்கும், பசுந்தாள் உரமாகவும் அமையும். இப்படி இருந்தாலும், எந்தப் பயிருக்குள் எந்தப் பயிரை ஊடுபயிராக இட வேண்டும் என விதிகள் உள்ளன. அவற்றைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

கருத்தில் கொள்ள வேண்டியவை

பிரதானப் பயிரின் மகசூலைப் பாதிக்கும் வகையில் ஊடுபயிர் இருக்கக் கூடாது. மேலும், முக்கியப் பயிருடனான போட்டி, பூச்சி, நோய் மற்றும் களைகளின் தாக்கம் குறைவாகவும், நன்மைகள் அதிகமாகவும் இருக்க வேண்டும்.

வளர்ச்சிக் காலம், வேரின் அமைப்பு, சூரியவொளி மற்றும் சத்துக்கான உச்ச நேரம் ஆகியன, இரண்டு பயிர்களிலும் வெவ்வேறு சமயங்களில் ஏற்படும் வகையில் இருக்க வேண்டும்.

நீண்டகாலப் பயிருடன் குறுகியகாலப் பயறுவகைப் பயிர்களை ஊடுபயிராக இடும் போது, அந்த ஊடுபயிர்கள், முக்கியப் பயிருக்குச் சத்துகள் மிக எளிதாக கிடைப்பதற்கு உதவும். ஊடுபயிரானது, பிரதானப் பயிரின் காலத்தை விடக் குறுகிய அல்லது நீண்ட காலப் பயிராக இருக்க வேண்டும்.

சில பயிர்களுக்குக் குறைந்த சூரியவொளியும், அதிக ஈரப்பதமும் தேவைப்படும். இத்தகைய பயிருடன் உயரமாக வளரும் பயிரை ஊடுபயிராக இடலாம். மேலும், உயரமான பயிர்களுக்கு இடையே ஏறக்கூடிய பயிரை ஊடுபயிராக இட்டால், ஏறக்கூடிய பயிர்களுக்கு ஆதரவு கிடைக்கும். எடுத்துக்காட்டாக, தென்னை மரங்களுடன், மஞ்சள், இஞ்சி, கருமிளகு ஆகியவற்றைப் பயிரிடலாம்.

வெவ்வேறு வேர் அமைப்புள்ள பயிர்கள் மற்றும் தீவிர வளர்ச்சியுள்ள பயிருடன், குறைவாக ஆதிக்கம் செலுத்தும் பயிர்களை ஊடுபயிராக இடலாம். பல்வேறு சத்துகள் அதிகளவில் தேவைப்படும் பயிர்கள் மற்றும் இரண்டு பயிர்களின் உச்சச் சத்துத் தேவை வெவ்வேறு வளர்ச்சிக் காலங்களில் தேவைப்படுவதாக இருந்தால், பயிர்களுக்கு இடையே சத்துக்கான போட்டியைக் குறைக்கலாம். எடுத்துக்காட்டாக, பயறு வகைகளுக்கு அதிக மணிச்சத்தும், தினைக்கு அதிகத் தழைச்சத்தும் தேவை.

சில பயிர்களின் வேரிலிருந்து நச்சுப் பொருள்கள் வெளியாகும். அந்த நச்சு மற்ற பயிரின் வளர்ச்சியைப் பாதிக்கும். இத்தகைய பயிர்களை ஊடுபயிராகத் தேர்வு செய்தால் மகசூல் குறையும். எடுத்துக்காட்டாக, வெள்ளரி வேரிலும், தைல மர இலைகளிலும் நச்சுப் பொருள்கள் வெளியாவதால், இவற்றை ஊடுபயிராகத் தேர்ந்தெடுக்கக் கூடாது. சில வகைப் பயிர்களை ஊடுபயிராக வளர்க்கும் போது, குறிப்பிட்ட பூச்சி, நோய் மற்றும் களைகளின் தாக்கம் அதிகமாகி, முக்கியப் பயிரின் மகசூலைப் பாதிக்கச் செய்யும். எனவே, இவ்வகையான பயிர்களை ஊடுபயிராக இடக்கூடாது.

ஊடுபயிரின் பயன்கள்

பிரதானப் பயிரிலிருந்து இயல்பான மகசூலையும், ஊடுபயிரிலிருந்து கூடுதல் மகசூலையும் பெறலாம். இரண்டு பயிர்களைத் தனித்தனியாகப் பயிரிடும் போது கிடைக்கும் மகசூலை விட, ஊடுபயிர் மூலம் குறைந்த காலத்தில் அதிக மகசூலைப் பெறலாம்.

ஊடுபயிருக்கான இரகங்களைத் தேர்வு செய்வது, அதிக மகசூலைப் பெறுவதற்கு வழி வகுக்கும். ஒரு பயிரின் அனைத்து இரகங்களும் ஊடுபயிர் சாகுபடிக்கு ஏற்றவையாக இருக்காது. ஏனெனில், குறிப்பிட்ட இரண்டு பயிர்களை ஒரே வயலில் இடும்போது, அந்தப் பயிர்களுக்கு இடையே வளர்ச்சிப் போட்டி ஏற்படும். இதைத் தடுக்கும் வகையில் பயிர் மற்றும் பயிரின் இரகங்களைத் தேர்ந்தெடுத்தால் சிறந்த பலனைப் பெறலாம்.


முனைவர் இர.இராஜபிரியா, சு.சுகுணா, இரா.சிவக்கலை, ரோவர் வேளாண்மைக் கல்லூரி, பெரம்பலூர்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!