வீராணம் ஏரி பிறந்த கதை!

செய்தி வெளியான இதழ்: 2014 அக்டோபர்.

டலூர் மாவட்ட வேளாண்மைக்கும், சென்னை மக்களின் குடிநீருக்கும் ஆதாரமாக விளங்குவது வீராணம் ஏரி. இந்த ஏரிக்கு வீராணம் என எப்படிப் பெயர் வந்தது என்பதையும் இதன் இப்போதைய நிலை குறித்தும் விளக்குகிறது இந்தக் கட்டுரை.

விஜயாலயச் சோழனின் பேரனான முதலாம் பராந்தகச் சோழன், சோழப் பேரரசுக்கு அடித்தளம் அமைத்தவன். தில்லைச் சிற்றம்பலத்துக்குப் பொன்கூரை வேய்ந்து வரலாற்றுப் புகழ் பெற்றவனும், முதலாம் பராந்தகச் சோழன் தான். சோழசிகாமணி, சூரசிகாமணி முதலிய பெயர்களோடு விளங்கிய இவன், வீர நாராயணன் என்னும் பெயரையும் பெற்றிருந்தான்.

இந்தப் பராந்தகனின் காலத்தில், வடக்கே இரட்டை மண்டலத்து இராஷ்டிரக்கூட மன்னர்கள் வலிமை பெற்று விளங்கினர். மானியக் கேடயத்திலிருந்து அவர்கள் படையெடுத்து வரக்கூடும் என்று எதிர்பார்த்த பராந்தகச் சோழன், தன் மூத்த புதல்வனாகிய இராஜாதித்தன் தலைமையில் ஒரு படையை அனுப்பி திருமுனைப்பாடி நாட்டில் (நடுநாடு, தென்னார்க்காடு) இருக்கச் செய்தான்.

அந்தப் படையைச் சேர்ந்த இலட்சக்கணக்கான வீரர்கள், வேலையின்றிச் சும்மா இருக்க நேர்ந்த காலத்தில், இராஜாதித்தன் ஒரு யோசனை செய்தான். குடிமக்களுக்குப் பயனுள்ள வகையிலான பெரும் பணியொன்றைத் தன் வீரர்களைக் கொண்டு செய்ய எண்ணினான். வட காவேரி என்று பக்தர்களாலும், கொள்ளிடம் என்று மற்றவர்களாலும் அழைக்கப்பட்ட பெருநதியின் வழியாக, அளவில்லாத வெள்ளநீர், வீணாகக் கடலில் கலந்து கொண்டிருந்ததைக் கண்ட அவன், தன் வீரர்களை வைத்துக் கடலைப் போல விரிந்த பரப்பில் ஏரியொன்றை அமைத்தான். அந்த ஏரியைத் தன் தந்தையின் பெயரால் வீரநாராயணன் ஏரி என்று அழைத்தான்.

அதாவது, 1011-1037 ஆம் ஆண்டுகளில் அமைக்கப்பட்ட இந்த ஏரி, 16 கிலோ மீட்டர் நீளமும், 4 கிலோ மீட்டர் அகலமும் கொண்டது. தொடக்கத்தில் 74 மதகுகளும் வாய்க்கால்களும் இருந்தன. இப்போது 28 வாய்க்கால்கள் மட்டுமே உள்ளன. 1445 கன அடி நீரைத் தேக்கி வைக்கும் திறன் கொண்ட இந்த ஏரியில் இப்போது 935 கன அடி நீரையே தேக்கி வைக்க முடிகிறது.

ஏரியின் முழுக் கொள்ளளவு 47.50 அடியாகும். ஏரியைத் தூர்வாரிச் செம்மைப்படுத்தினால் இதில் பழைய கொள்ளளவில் நீரைத் தேக்க முடியும். ஏரியைத் தூர்வார வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் அரசுக்குத் தொடர்ந்து கோரிக்கையை வைத்து வருகின்றனர்.

வீராணம் ஏரிக்கு அணைக்கரை என்னும் கீழணையிலிருந்து வடவாறு வழியாகத் தண்ணீர் வருகிறது. ஏரியின் தரை மட்டமும், சிதம்பரம் நடராசர் கோயிலின் கோபுர உச்சியும் ஒரே அளவைக் கொண்டதெனக் கூறப்படுகிறது. கடந்த 2004 ஆம் ஆண்டு முதல், சென்னை மக்களின் குடிநீருக்காக வீராணம் ஏரியிலிருந்து 74 கன அடி தண்ணீர் அனுப்பப்படுகிறது.

கடலூர் மாவட்ட உழவர் சங்கத்தலைவர் இரவீந்திரனிடம் நாம் பேசிய போது அவர் கூறியதாவது: இந்த ஏரியின் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் ஒரு இலட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதியைப் பெற்று வருகின்றன. சென்னைக்கும் இங்கிருந்து குடிநீருக்காகத் தண்ணீர் அனுப்பப்படுகிறது. ஆனால், தற்போது ஏரியின் கொள்ளளவு சுருங்கி வருகிறது. அதனால் ஏரியைத் தூர்வார வேண்டும் என்று நாங்கள் அரசுக்குத் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால், இன்னும் இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இதற்காக 40 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டும் அந்த நிதி பயன்படுத்தப்படவில்லை.

தூர் வாருவதோடு மட்டுமில்லாமல், ஏரியின் மேற்குக் கரையை உயர்த்தவும் வேண்டும். வீராணத்தைச் சுற்றுலாத் தலமாக்கிப் படகு சவாரிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். ஏரியில் மீன்களைப் பிடிக்கும் வாய்ப்பை இந்தப் பகுதியிலுள்ள மீனவர்களுக்குக் கொடுக்காமல், தனியாருக்கு ஏலம் விடுவது, மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது. இவற்றையெல்லாம் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.


கடலூர் விஜயகுமார்

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!