செய்தி வெளியான இதழ்: 2014 அக்டோபர்
கால்நடைகளுக்குக் கொடுக்கும் பசுந்தீவனத்தில் மூன்றில் இரண்டு பங்கு, தானியவகை மற்றும் புல் வகையாகவும், மீதமுள்ள ஒரு பங்கு, பயறுவகை மற்றும் மர இலைகளாகவும் இருக்க வேண்டும்.
உதாரணமாக, ஒரு கறவை மாட்டுக்கு 15 கிலோ பசுந்தீவனத்தைக் கொடுக்க வேண்டுமென்றால், அதில் 10 கிலோ, தானியவகை அல்லது புல் வகையாகவும், 5 கிலோ, பயறுவகை அல்லது மர இலைகளாகவும் இருக்க வேண்டும்.
மேலும், இந்தப் பசுந்தீவனத்தைச் சிறுசிறு துண்டுகளாக, அதாவது, 2 அங்குல நீளமுள்ள துண்டுகளாக நறுக்கிப் போட வேண்டும். இதனால், செரிக்கும் தன்மை அதிகமாகும்.
தீவனம் வீணாகாமலும் இருக்கும். ஆனால், அரை அங்குலத்துக்கும் குறைந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படிக் குறைந்தால், பாலில் கொழுப்புச் சத்தின் அளவு குறையும்.
சுமார் 7 லிட்டர் வரை கறக்கும் மாடுகளுக்கு, அடர் தீவனத்தைத் தவிர்த்து விட்டுப் பசுந்தீவனத்தை மட்டும் கொடுத்தாலே போதும். இதனால், அடர்தீவனச் செலவு குறைந்து வருமானம் அதிகரிக்கும்.
பசுந்தீவனத்தின் நன்மைகள்: உலர் தீவனங்களை விட பசுந்தீவனத்தையே கால்நடைகள் விரும்பி உண்கின்றன. இதனால், தீவனத்தை உட்கொள்ளும் அளவும் அதிகரிக்கிறது. மேலும், பசுந்தீவனங்கள் எளிதில் செரிக்கக் கூடியவை.
அதனால், சத்துகள் அதிகளவில் உடலுக்குக் கிடைக்கும். பசுந்தீவனங்களில் புரதம் மற்றும் தாதுப்புகள் அதிகளவில் உள்ளன. இவை, கால்நடைகளின் வளர்ச்சிக்கும் அதிகப் பால் உற்பத்திக்கும் தேவை.
பசுந்தீவனங்களில் உயிர்ச் சத்துகள், முக்கியமாக, பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. இது, வைட்டமின் ஏ-யின் தேவையைச் சரி செய்வதோடு, கால்நடைகளில் கருமுட்டை உற்பத்தி மற்றும் இனப்பெருக்கம் நிகழப் பெரிதும் உதவும்.
பசுந்தீவனத்தைக் கொடுப்பதால் பசுக் கிடேரிகள் 15-18 மாதங்களில் பருவமடைந்து, 200-250 கிலோ வரை உடல் எடையும் கூடி, 28-30 மாதங்களில் முதல் கன்றை ஈனவும், அடுத்தடுத்து 12-14 மாத இடைவெளியில் மீண்டும் கன்றுகளைப் பெறவும் ஏதுவாகும்.
ஏனெனில், கறவை மாடு ஆண்டுக்கு ஒரு கன்றை ஈன்றால் தான் பண்ணை இலாபகரமாக இருக்கும்.
பசுந்தீவனம் உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். இதனால், உடல் நலம் மேம்படுவதோடு, கால்நடைகளின் வாழ்நாளும் அதிகமாகும்.
உலர் தீவனத்துடன் பசுந்தீவனத்தைச் சேர்த்துக் கொடுக்கும் போது, உலர் தீவனத்தை உண்ணும் அளவு கூடுவதுடன், செரிமானத் தன்மையும் கூடும். கால்நடைகளில் மலச்சிக்கல் தவிர்க்கப்படும். அடர்தீவனச் செலவு 20 விழுக்காடு வரை குறையும்.
இறவையில் பயிரிட ஏற்றவை
தானிய வகையில், தீவனச்சோளம் கோ-29, பயறு வகையில் குதிரைமசால், வேலிமசால் ஆகியன அடங்கும். புல் வகையில், கினியாப்புல், கம்பு நேப்பியர் புற்களான கோ-1, கோ-2, கோ-3 மற்றும் கோ-4 நீர்ப்புல் ஆகியன அடங்கும்.
தீவனச்சோளம் கோ-29: விதைக்கச் சரியான பருவம் ஆடி மாதம். ஏக்கருக்கு 5 கிலோ விதைகள் தேவை. 7-10 நாட்களுக்கு ஒருமுறை பாசனம் செய்ய வேண்டும்.
விதைத்த 70-75 நாட்களில் முதல் அறுவடையையும், பிறகு, 60-65 நாட்கள் இடைவெளியில் அடுத்த அறுவடையையும் மேற்கொள்ள வேண்டும். ஓராண்டில் 5-6 முறை அறுவடை செய்யலாம். ஏக்கருக்கு 70 டன் மகசூல் கிடைக்கும்.
குதிரை மசால்: விதையளவு எக்டருக்கு 15-20 கிலோ தேவை. இதிலுள்ள புரதச்சத்தின் அளவு 20-22 விழுக்காடு. மகசூல் எக்டருக்கு 80-100 டன் கிடைக்கும்.
வேலிமசால்: விதையளவு எக்டருக்கு 20 கிலோ தேவை. புரதச்சத்து 18-20 விழுக்காடு உள்ளது. இதன் மகசூல் எக்டருக்கு 125 டன்களாகும்.
கோ-3: கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் வகையில் கோ-1, கோ-2 ஐ விட கோ-3 மிகவும் சிறந்தது. இதில் தூர்கள் அதிகமாகவும் தண்டுப்பகுதி சிறுத்தும், இலைகள் அதிகமாகவும் இருப்பதால் கால்நடைகள் விரும்பி உண்ணும்.
இது எளிதில் செரிக்கும். இதில் கணுக்கள் குறைவாக இருப்பதோடு வெட்டுவதற்கும் எளிதாக இருக்கும். இந்தப்புல் ஒரு பல்லாண்டு இறவைப் பயிர். ஆண்டு முழுவதும் பயிரிடலாம்.
எக்டருக்கு 40,000 தண்டுகள் அல்லது வேர்க்கரணைகள் தேவை. அதாவது, ஏக்கருக்கு 16,000 கரணைகள் தேவை.
வரிசைக்கு வரிசை, கரணைக்குக் கரணை 50 செ.மீ. இடைவெளியில் நட வேண்டும். முதல் அறுவடை, நட்ட 75 நாட்களிலும், பின்பு 45 நாட்களுக்கு ஒருமுறையும் என, ஆண்டுக்கு 7-8 முறை அறுவடை செய்யலாம். மகசூல் எக்டருக்கு 400-450 டன் கிடைக்கும்.
மானாவாரியில் பயிரிட உகந்தவை
தானிய வகையில் சோளம், மக்காச்சோளம், கம்பு, இராகி ஆகியன அடங்கும். பயறு வகையில், முயல் மசால், டெஸ்மோடியம், சிராட்ரோ சங்கு புஷ்பம் ஆகியன அடங்கும்.
புல் வகையில் கொழுக்கட்டைப்புல், நீலக் கொழுக்கட்டைப்புல், ஊசிப்புல், ரோட்ஸ் புல், ஆஸ்திரேலியா புல், மார்வல் புல், தீனாநாத் புல் ஆகியன முக்கியமானவை.
முயல் மசால்: இது, மானாவாரியில் நன்கு வளரக்கூடிய சிறந்த தீவனப் பயிராகும். இதைக் கொழுக்கட்டைப் புல்லுடன் 1:3 வீதம் மானாவாரியில் பயிரிடலாம். முதலாண்டில் வளர்ச்சிக் குறைவாக இருக்கும். பிறகு, பயிர் நன்கு வளர்ந்து விதை உற்பத்தியாகும் போது அதிக மகசூலைக் கொடுக்கும்.
வைகாசி ஆனியில் எல்லா மண் வகைகளிலும் பயிர் செய்யலாம். விதையளவு 10 கிலோ தேவைப்படும். 30×15 செ.மீ இடைவெளியில் பயிரிட வேண்டும்.
முதல் அறுவடை விதைத்த 80 நாளிலும், அடுத்தடுத்த அறுவடைகளை 40-45 நாட்கள் இடைவெளியிலும் செய்ய வேண்டும். ஓராண்டில் 7-8 முறை அறுவடை செய்யலாம். எக்டருக்கு 30-50 டன் தீவனம் மகசூலாகக் கிடைக்கும்.
மரு.அ.யசோதா, மரு.மு.மலர்மதி, முனைவர் சி.வெண்ணிலா, மரு.வ.செ.வடிவு, கால்நடை மருத்துவக் கல்லூரி, சென்னை – 600 007.