செய்தி வெளியான இதழ்: 2014 அக்டோபர்.
இந்திய விவசாயத்தில் கால்நடைகள் மற்றும் கால்நடை சார்ந்த தொழில்கள் முக்கியப் பங்கை வகிக்கின்றன. தமிழ்நாட்டுக் கிராமங்களின் ஏழை மக்கள், கால்நடைகள் மற்றும் கோழிகளையே பெரும்பாலும் நம்பி வாழ்கின்றனர். கால்நடைகளில், குறிப்பாகக் கறவை மாடுகள் மற்றும் ஆடுகள், கிராம மக்களுக்கான நடமாடும் வங்கிகளாகத் திகழ்கின்றன.
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் கால்நடை மருந்தகங்கள் மற்றும் மருத்துவமனை வசதிகள் இருப்பினும், குக்கிராமங்களில் வசிக்கும் கால்நடை வளர்ப்போர், தங்களின் நோயுற்ற கால்நடைகளுக்குத் தக்க சமயத்தில் சிகிச்சை அளிப்பதற்குச் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால், அவர்களுக்குப் பொருளாதார இழப்புகள் ஏற்படுகின்றன.
எனவே, இத்தகைய விவசாயிகள், தங்களுடைய கால்நடைகளை நோய்களில் இருந்து காப்பாற்ற, மரபுசார் மூலிகை மருத்துவம் முதலுதவி மருத்துவமாக விளங்குகிறது. ஊர்களிலேயே கிடைக்கக்கூடிய மூலிகைத் தாவரங்கள் மற்றும் நறுமணப் பயிர்களைக் கொண்டு, கால்நடைகளுக்கான மூலிகை மருந்துகளை எளிய முறையில் அவ்வப்போது தயாரித்துக் கால்நடைகளுக்கு வழங்கலாம்.
தோல் சொரசொரப்பாக இருத்தல், மடி மற்றும் தோல் பகுதியில் தடிப்பான கொப்புளங்கள் உண்டாதல், கண்கள் சிவந்து காணப்படுதல், கண்களில் நீர் வடிதல், மூக்கும் நாசித்துளையும் காய்ந்திருத்தல், சுவாசம் தடைபடுதல், இருமல், சளி, துர்நாற்றத்துடன் கழிச்சல் போன்ற அறிகுறிகள் கால்நடைகளில் தென்பட்டால், அந்தக் கால்நடைகளுக்குத் தாமதிக்காமல் மூலிகை மருந்துகளைக் கொண்டு முதலுதவிச் சிகிச்சை அளித்தல் மிகவும் நல்லது. பிறகு, நோயின் தன்மைக்கு ஏற்ப, கால்நடை மருத்துவர் மூலம் சிகிச்சையைத் தரலாம்.
மூலிகை மருத்துவத்தின் நன்மைகள்: எளிதில் தயாரித்துக் கால்நடைகளுக்கு வழங்கலாம். செலவு மிகவும் குறைவு. கிராமங்களிலேயே மூலிகைச் செடிகள் கிடைக்கும். சுற்றுப்புறச் சூழலுக்குக் கேடு விளைவிக்காது. விவசாயிகளின் மரபுக்கேற்ற வழிமுறையாகும்.
மரபுசார் மூலிகை மருத்துவத்துக்குப் பெரும்பாலும் தாவரங்களே பயன்படுகின்றன. இலைகள், பட்டைகள், பழங்கள், பூக்கள், விதைகள் ஆகியன மூலிகை மருத்துவத்தில் பயன்படுகின்றன. சுமார் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாவரங்கள் மூலிகைக் குணத்தைக் கொண்டுள்ளன. எறும்பு மற்றும் கரையான் புற்று மண்கூட மூலிகை மருத்துவத்தில் பயன்படுகிறது. அதைப்போல, மண்ணுக்குள் இருந்து கிடைக்கும் கிழங்குகள், வேர்கள் ஆகியனவும் மூலிகை மருத்துவத்தில் பயன்படுகின்றன.
மருத்துவ நோக்கில் பறிக்கப்பட்ட தாவரங்களை, வெய்யிலில் காய்ந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சோற்றுக் கற்றாழை, சிறியாநங்கை, நாயுருவி, ஆடாதொடை, கறுப்புக் குண்டுமணி, முடக்கத்தான், உசிட்டகரை, வேம்பு, வெள்ளெருக்கு, அவரை, பிரண்டை, ஈட்டிமரம், ஊமத்தை, கல் மூங்கில், சிறுகுறிஞ்சான், உதியமரம், தும்பை, தொட்டால் சிணுங்கி, துளசி, பெருநெருஞ்சி, புங்கம், நாவல், கடுக்காய், நொச்சி, பெருங்குறிஞ்சான் போன்றவை தோல் நோய்கள், காய்ச்சல், பூச்சிக்கடி, சளி, இருமல், கழிச்சல், பசியின்மை போன்ற சிக்கல்களுக்குப் பயன்படுகின்றன.
இவை மட்டுமின்றை, வெங்காயம், பூண்டு, கடுகு, புளி, மிளகாய், தேன், கொத்தமல்லி மற்றும் அதன் தழை, மஞ்சள், குறுந் தானியங்கள், சோயா, வாழை, கரும்பு மற்றும் அதன் தோகை, உளுந்து, மக்காச்சோள மாவு, இஞ்சி, பசும்பால், உப்பு போன்றவையும் கால்நடைகளுக்கு ஏற்படும் பல்வேறு நோய்களைத் தீர்க்கப் பயன்படுகின்றன. அவ்வகையில், கால்நடைகளுக்கு வரும் சில நோய்களுக்கான மூலிகை மருத்துவத்தைப் பற்றிப் பார்ப்போம்.
கழிச்சல்
தேவையான பொருள்கள்: கலவை முறை1: கசகசா 15 கிராம்,
மஞ்சள் 5 கிராம்,
பெருங்காயம் 5 கிராம்,
வெந்தயம் 15 கிராம்,
மிளகு 5,
சின்னச் சீரகம் 10 கிராம்.
கலவை முறை 2: வெங்காயம் 10 பல்,
பூண்டு 6 பல்,
புளி 200 கிராம்,
கருப்பட்டி (பனை வெல்லம்) 250 கிராம்.
தயாரிப்பு: இது ஒரு வேளைக்கான அளவாகும். இந்த இரு கலவைகளில் நமக்கு வசதிப்படும் கலவையைத் தேர்ந்தெடுத்து, அதில் கூறப்பட்டுள்ள பொருள்களை அரைத்துச் சிறிய உருண்டைகளாக்கி, அவற்றை 100 கிராம் கல் உப்பில் தோய்த்து வாய்மூலம் கொடுக்க வேண்டும்.
மடிவீக்க நோய்
தேவையான பொருள்கள்: சோற்றுக்கற்றாழை 15 கிராம்,
மஞ்சள் பொடி 50 கிராம்,
சுண்ணாம்பு 5 கிராம்.
தயாரிப்பு: இவற்றை உரலில் இட்டுக் கட்டியாக அரைத்துக்கொள்ள வேண்டும். பிறகு, இதனுடன் சிறிதளவு நீரைச் சேர்த்து, மாட்டின் மடிப்பகுதியில் தடவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்குப் பத்து முறை செய்தால் மடிவீக்கம் குறையும்.
கோமாரி வாய்ப்புண்
தேவையான பொருள்கள்: சீரகம் 50 கிராம்,
வெந்தயம் 30 கிராம்,
மஞ்சள் பொடி 10 கிராம்,
பனை வெல்லம் 20 கிராம்,
தேங்காய்த் துருவல் ஒரு தேங்காய் அளவு.
தயாரிப்பு: இந்தப் பொருள்களை அரைத்துத் தேங்காய்த் துருவலுடன் கலந்து நோயுற்ற மாடுகளுக்குத் தினமும் இரண்டு வேளையாக, மூன்று நாட்களுக்குக் கொடுக்க வேண்டும்.
கோமாரி கால்புண்
தேவையான பொருள்கள்: குப்பைமணி 100 கிராம்,
பூண்டு 10 பல்,
மஞ்சள் 100 கிராம்,
இலுப்பை எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் 250 கிராம்.
தயாரிப்பு: முதல் மூன்று பொருள்களை நன்றாக இடித்து இலுப்பை அல்லது நல்லெண்ணெய்யில் கலந்து காய்ச்சி ஆற வைக்க வேண்டும். பிறகு, உப்பு, மஞ்சள் கலந்த நீரால் கால் புண்ணை நன்றாகக் கழுவி விட்டு, இந்த மருந்துக் கலவையைத் தினமும் இரண்டுவேளை புண்ணில் இட வேண்டும்.
கோழிகளைத் தாக்கும் வெள்ளைக் கழிச்சல்
தேவையான பொருள்கள்: சின்னச் சீரகம் 10 கிராம்,
மிளகு 5 கிராம்,
மஞ்சள் தூள் 50 கிராம்,
கீழாநெல்லி இலை 50 கிராம்,
வெங்காயம் 5 பல்,
பூண்டு 5 பல்.
தயாரிப்பு: சீரகத்தையும் மிளகையும் இடித்துப் பிற பொருள்களுடன் கலந்து சிறு உருண்டைகளாக்கி, அரிசிக் குருணையுடன் கோழிகளுக்குக் கொடுக்க வேண்டும்.
இதைப்போல, கன்றுகள், வெள்ளாடுகள், செம்மறியாடுகள் மற்றும் கோழிகளுக்குப் பல்வேறு மூலிகை மருந்துகளைத் தயாரித்து முதலுதவிச் சிகிச்சையை அளிக்கலாம்.
முனைவர் பா.குமாரவேல், முனைவர் ந.புண்ணியமூர்த்தி, முனைவர் பெ.முருகன்.