கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2014
வெளியூர் விருந்தினர் எதிர்ப்பட்டதும் கேட்கப்படும் முதல் உபசரிப்பு, ஊரில் எல்லாம் நலமா? எல்லாம் என்றால் ஆடு, மாடு, மரம், செடி கொடி, மக்கள் என்னும் அனைத்து உயிரிகளும் நோய்த் தாக்குதல் ஏதுமின்றி வளமையோடு வாழ்கின்றனவா என்பது தான். இது முதல் உபசரிப்பு.
ஆடு மாடுகள் தோப்பு துரவு எப்படி? இரண்டாவதாகக் கேட்கப்படும் உபசரிப்பு. கால்நடைச் செல்வங்களும் இயற்கையான வனவளமும் செழிப்பாக இருக்கின்றனவா என்னும் உசாவல். வாழ்வு சார்ந்த வளங்கள் செழிப்பாக இருந்தால் தான் மனித வாழ்க்கை செழிப்பாக அமையப் பெறும் என்னும் இயற்கைத் தத்துவத்தின் வெளிப்பாடு.
மாரி, மழை எப்படி? மூன்றாம் நிலையில் கேட்கப்படும் உபசரிப்பு வினா. வள்ளுவர், இரண்டாவது அதிகாரமாக வான் சிறப்பைப் பற்றித்தானே போற்றுகிறார்! மாரி என்றால் சராசரியாகப் பயிர்களுக்குத் தேவையான அளவிலும், மழை என்றால், ஏரி, குளங்கள் நிரம்பி வெள்ளம் ஏற்படக் கூடிய அளவிலும், மழைவளம் எப்படி என்னும் உபசரிப்பு. அடுத்ததாகத் தான் மக்களைப் பற்றிய உபசரிப்பு.
வீட்டில் எல்லாரும் நலமா? நோய் நொடிகள் நெருங்காத திடமான பொது வாழ்க்கை அமையப் பெற்றிருக்கிறதா என்னும் மனித நேயம். தனிப்பட்ட மனிதர்கள், மற்றவர்களை விலக்கி உயர்ந்து விட முடியாத சமூகக் கட்டமைப்பு. மனித வாழ்க்கை என்பதே பொதுவான கூட்டுறவுக் குமுகாய வாழ்க்கை தானேயன்றி, தனி மனித வாழ்க்கை என்பதான குறுகிய நோக்கம் தலையெடுக்காமல் இருந்த காலம்.
பெரியவர் எப்படி? நல்ல நடமாட்டத்தோடு இருக்கிறாரா? முதியவர்களின் நலன் கேட்டறியும் பண்பாடு. அதுவும் பொது நலன் விசாரித்தலுக்கு உள்ளாகவே தனித்தனி உறவினர் நலனும் கலந்து பேசிவிடும் நாகரிகம் கற்றிருந்த பண்பாட்டு உயர்வு நிறைந்திருந்த பொற்காலம், நம் முன்னோர்களின் காலம்.
சென்ற தலைமுறை வரை, ஒரு 60-70 ஆண்டுகளுக்கு முன்புவரை, தமிழ்நாடு முழுவதும் இத்தகைய பண்பாட்டுப் பேச்சைத் தான் கேட்க முடிந்தது. இன்றும் எண்பது வயதைத் தாண்டிய வயோதிகத் தமிழர்கள் இப்படித்தான் நல விசாரணை செய்து வருகிறார்கள் என்பதைப் பட்டி தொட்டிகளில் காண முடிகிறது என்பதே நமக்குப் பெருமை தானே! உறவு என்பது ஆழமான ஆணி வேர், பரவலான பக்க வேர், கிளை வேர்ப் பிடிப்புக் கொண்டு, அத்தனை பந்த, பாசப் பற்றைக் கொண்டிருந்த ஒன்று.
ஆனால் இன்று?
மணம் முடித்துக் கொடுத்தனுப்பிய மகளைக் கண்டு வர தந்தை செல்கிறான். நாய் குரைப்பைத் தாண்டி உள்ளே சென்று சோபாவில் அமர்ந்த பிறகு, மகள் உள்ளிருந்து வருகிறாள். வாங்கிச் சென்ற பூ, பழங்கள், இனிப்பு வகைகளைக் கொடுத்து விட்டு, ஒரு குவளை காபி கொடுத்ததை விழுங்கி விட்டு வெளியேறி விடுகிறான், இவ்வளவு தான் பாசம்!
திருமண உறுதிப்பாட்டைச் செய்தது திருமண மண்டபத்தில். திருமணம் நடந்ததும் மண்டபத்தில். மகள் வீட்டு வரவேற்பு அறையோடு உறவு நிறுத்தப்பட்டு வருவதை, நாகரிக உலகம் வளர்த்துக் கொண்டு வருவது கவலை அளிக்கவில்லையா? இவ்வளவு தான் சமூகமா? மரபுவழிப் பண்பாடா?
அன்பு என்பது எலும்புருக்கி நோய் கொண்டவனைப் போல, நாளுக்கு நாள் இளைத்துக் கொண்டே இருப்பது, ஒடிசலாகிக் கொண்டிருப்பது, சமூகப் பற்றாளர்களுக்குக் கவலையளிக்கிறதே என்ன செய்யலாம்? குடும்ப உறவுகள், சமூக உறவுகள் கடையாணி கழன்ற வண்டியாக ஆபத்தை எதிர்நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் காட்சி தான் நாடு முழுவதும் எதார்த்தமாகக் காணக் கிடைக்கிறது.
பணம் என்பது எப்போது அன்பை அளக்கும் கருவியாகப் பயன்படத் தொடங்கப்பட்டதோ, அன்றைக்கே சமுதாயச் சரிவு தொடங்கி விட்டது என்பது உண்மை. அதாவது, வரதட்சணை என்னும் அளவுகோலால் கணவன் மனைவி உறவை அளக்க என்றைக்குத் தொடங்கினோமோ, அன்றைக்கே குடும்ப உறவு பண வரவால் நிர்ணயம் செய்யப்படும் இழிநிலைக்கு இறங்கி விட்டது என்பது பொருள். மணமகன் வீட்டார் பரிசம் போட்டுப் பெண் எடுத்தது தான் நம்முடைய பண்பாடு.
யாரையோ பார்த்துப் போட்டுக் கொண்ட சூடுதான், வரதட்சணையை மாப்பிள்ளைக்குக் கொடுத்து மணம் செய்விக்கும் கேடுகெட்ட பழக்கம்.
உறவைப் பற்றிய அக்கறை, ஊரைப் பற்றிய கவலை, கூட்டுறவைப் பற்றிய சிந்தனை, சமூகத்தைப் பற்றிய மேம்பாட்டு உணர்வு எங்குமே யாருக்குமே இல்லை. நம் கண்முன் நடந்தேறிய மிகப்பெரிய சமூகப் பூகம்பம் இது. நம் பச்சை பூமி அனுபவித்திராத அயலினக் கலப்படம்; வெளியாரின் இரசாயன உரம். நம்மைச் சீரழித்து வர விட்டு விட்டோமே! எல்லாமே பணத்தாசை இல்லையா?
சுதந்திர இந்தியா, சமூகச் சீரழிவிலிருந்து தொடங்கியுள்ளது என்பது சரியான குற்றச்சாட்டு. மனிதப் பண்பாட்டுத் தேய்மானம், நம்முடைய வேளாண் நுட்பத் தேய்மானம், பாரம்பரியக் குடும்பவியல் இழப்பு, மரபுவழி விவசாய நுட்ப அழிப்பு ஆகியவற்றின் ஒட்டுமொத்தச் செல்லரிப்பு, மக்களின் மனத்தை மட்டுமல்ல, மண்வளத்தையும் சிதைத்து விட்டது என்பதைத் தான் தாங்கிக் கொள்ள முடியவில்லை!
எப்படி மீட்டெடுக்கப் போகிறோம்? எத்தனை காலம் ஆகப் போகிறதோ? எப்படிப் புரிய வைக்கப் போகிறோம்? எப்படியெல்லாம் போராடப் போகிறோம்? எவற்றை யெல்லாம் இழக்கப் போகிறோமோ?
இன்றைய தலைமுறையிலும் இந்த முயற்சி எடுக்கப்படவில்லை என்றால், இனி அடுத்து வரும் தலைமுறைகளால் மீட்டெடுக்க இயலவே இயலாது. இதுதான் சரியான காலம். முயற்சி செய்வோம். முயற்சி இல்லாதவனுக்கு வளர்ச்சியில்லை. நம் பண்பாட்டையும், வேளாண் நுட்பங்களையும், மண்ணுக்கேற்ற மரபையும் மீட்டெடுப்போம்.
மருத்துவர் காசிபிச்சை, தலைவர், இயற்கை வாழ்வியல் இயக்கம், திருமானூர், அரியலூர் மாவட்டம்.