பால் பண்ணை வளர்ச்சியில் கறவை மாடுகள் தேர்வின் பங்கு!

Cow fooder

வனத்துடன் செயல்பட்டால், பால்பண்ணைத் தொழில் நல்ல வருமானத்தைத் தரும் தொழிலாகும். அதனால், விவசாயிகள் மட்டுமின்றி, வாழ்வாதாரத் தொழிலாகப் பால்பண்ணைத் தொழிலைப் பலரும் மேற்கொண்டு வருகின்றனர்.  பால் பண்ணையின் வளர்ச்சியில் கறவை மாடுகளின் பங்கு மிக முக்கியமாகக் கருதப்படுகிறது.  அதனால், தரமான கறவை மாடுகளைத் தேர்வு செய்வது அவசியமாகும்.

பால் பண்ணைத் தொழில் முன்னேற்றமடைய, பண்ணையில் வளர்க்கப்படும் கறவை மாடுகள் தரம் வாய்ந்தவையாக இருக்க வேண்டும். ஜெர்சி, பிரிசியன் போன்ற கலப்பின மாடுகளாகவும்  முதல் அல்லது இரண்டாம் ஈத்து மாடுகளாகவும் பார்த்து வாங்க வேண்டும். ஏனெனில், கறவை மாடுகளில் பால் உற்பத்தி, இரண்டாம் ஈத்திலிருந்து நான்காம் ஈத்து வரை அதிகமாக இருக்கும். அதற்கடுத்த ஈத்துகளில் பாலின் அளவு குறையும். மேலும், ஐந்து அல்லது ஆறு ஈத்துகளைத் தாண்டும் போது கறவை மாடுகளின் வயது எட்டுக்கு மேற்பட்ட ஆண்டுகளைக் கடந்திருக்கும் என்பதால், அவற்றைப் பரமரிப்பது இலாபம் தருவதாக இருக்காது.

கன்றைப் போட்ட பதினைந்து நாள்களுக்குள் மாட்டை வாங்கிவிட வேண்டும். கறவை மாட்டின் கண்கள் ஒளி மிக்கவையாக இருக்க வேண்டும். மாடு சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். வெளி உறுப்புகளில் இருந்து எவ்விதத் திரவமும் சீழும் வரக்கூடாது. புண்கள், காயங்கள் இருக்கக் கூடாது. கால்கள் நன்றாகவும் வலுவாகவும் இருக்க வேண்டும். மேல் உதடு ஈரமாக வியர்வையுடன் இருக்க வேண்டும். அசை போட்டுக் கொண்டிருக்க வேண்டும்.

பால்மடி நான்றாக விரிந்து உடலோடு ஒட்டியிருக்க வேண்டும். பாலைக் கறந்தவுடன் மடி சுத்தமாகச் சுருங்கிவிட வேண்டும். நான்கு காம்புகள் இருக்க வேண்டும். அவை சம அளவாகவும், சம இடைவெளியிலும் அமைந்திருக்க வேண்டும். வயிற்றின் அடிப்பகுதியில், பால் மடிக்கு முன் இருக்கும் பால் நரம்புகள், நன்றாகத் தடித்தும் வளைந்தும் நல்ல இரத்த ஓட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும். நெஞ்சுப் பகுதியைவிட மாட்டின் வயிற்றுப் பகுதி அகன்றிருக்க, கால் முட்டிகளுக்கு இடையேயான இடைவெளி அதிகமாக இருக்க வேண்டும். வயிற்றுப்பகுதி அகலமாக இருந்தால் தான், அதிகமான தீவனத்தை உட்கொண்டு அதிகமான பாலை உற்பத்தி செய்யும்.

கறவை மாடுகளைச் சந்தைகளில் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். வளர்ப்பிடங்களுக்குச் சென்று இரண்டு மூன்று முறை பாலைக் கறந்து பார்த்து வாங்க வேண்டும். மாட்டை விற்பவரிடம், மாட்டுக்கு இதுவரை தரப்பட்ட தீவன விவரங்களைக் கேட்டறிந்து அதே முறையைக் கையாள வேண்டும். தீவனத்தைத் திடீரென மாற்றக் கூடாது. அப்படிச் செய்தால், செரிமானக் கோளாறு ஏற்பட்டு, பால் உற்பத்திக் குறையக் கூடும். அதேபோல, கறவை மாடுகளுக்கு முறையாகத் தடுப்பூசிகள் போடப்பட்ட விவரத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும்.


தொகுப்பு: பசுமை

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!