நீடித்த, நிலையான வேளாண்மைக்கு மண்வளத்தின் அவசியம்!

பூமியில் மண்ணின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 5 ஆம் தேதி, உலக மண்வள தினம் அனுசரிக்கப்படுகிறது. உலக உணவு நிறுவனம் முதன் முதலில் உலக மண்வள தினத்தைக் கொண்டாட வலியுறுத்தியது. சர்வதேச ஒருங்கிணைந்த மண்ணியல் ஒன்றியம், 2002 இல் உலகளவில் மண் ஆய்வை மேற்கொண்டு, மண் மாசுபாட்டால் சுற்றுச்சூழல் எவ்வாறு பாதிக்கிறது என்பதை, உலக உணவு நிறுவனத்திடம் தெரிவித்ததுடன், இந்த உலக மண்வள நாள் விழாவையும் கொண்டாட வலியுறுத்தியது.

உலக உணவு நிறுவனமானது 2013 ஜூனில் தீர்மானம் நிறைவேற்றி, ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பின், 68 ஆவது அமர்வில் சமர்ப்பித்தது. இதன்படி ஐக்கிய நாடுகள் சபை, உலக மண்வள நாள் விழாவை ஆண்டுதோறும் கொண்டாடும்படி, 2013 டிசம்பரில் தீர்மானம் நிறைவேற்றித் தந்தது.

மண்ணைப் பாதுகாக்கும் முயற்சியை முதன் முதலில் எடுத்தவர் தாய்லாந்து மன்னர் அதுல்ய தேஜ். இவர் பல இலட்சம் மக்களின் வாழ்வாதாரத்தை, நிலைத்த, நீடித்த மண் பாதுகாப்பு மூலம் உறுதி செய்தவர். இவரது பிறந்தநாள் டிசம்பர் 5 ஆகும். எனவே, அன்றைய தினத்தை, உலக மண்வள தினமாக ஒவ்வொரு ஆண்டும் கடைப்பிடித்து வருகிறோம்.

மண்ணில் வேதியியல் உரங்களை அதிகமாகப் பயன்படுத்துவதால், மண் பாதிக்கப்படுகிறது. பரிந்துரைத்த அளவை விடக் கூடுதலாக உரங்களை இடுவதால், ஒரு சதுரடி மண்ணில் இருக்க வேண்டிய கோடிக்கணக்கான நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் அவற்றின் வாழ்வாதாரம் மற்றும் நிலைத்தன்மையை இழக்கின்றன. அந்த நுண்ணுயிரிகள் அழிந்து போவதால் பயிர்களுக்குப் போதியளவில் சத்துகள் கிடைப்பதில்லை. எனவே, சரியான விகிதாச்சாரத்தில் மகசூலை எடுக்க முடிவதில்லை.

அறிவியலின் புரிதலோடு இதைப் பார்த்தால், கரிமச்சத்தும் தழைச்சத்தும் (C:N) 24:1 என்னும் விகிதத்தில் இருக்க வேண்டும். ஆனால், மண்ணில் இவற்றின் விகிதாச்சாரம் மிகக் குறைவாக இருப்பதால், நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையும் குறைகிறது. பரிந்துரைத்த அளவைத் தாண்டி இடப்படும் ஒரு கிராம் வேதி உரமானாலும் சரி, ஒரு மில்லி களை, பூசண மற்றும் பூச்சி மருந்தானாலும் சரி, பயிருக்கும், மண்ணுக்கும், மனிதனுக்கும் மிகுந்த கேட்டையே விளைவிக்கும்.

மேலும், மண்ணில் இறுக்கம் அதிகரித்தல், மண்ணுக்குள் நீர்ப்புகும் திறன் குறைதல், மேல்மண்ணில் உப்புப் படிதல், அமில, காரத்தன்மை வேறுபாடு போன்றவற்றால் மண்ணின் கட்டுமானம் சிதையும்.

இயற்கை உரங்களாகிய தொழுவுரம், பசுந்தாள் மற்றும் தழை உரங்களைப் போதியளவில் இடாமல் விடுவது, சாகுபடி நிலத்தைச் சமப்படுத்தும் போது வளமான மேல்மண் நீக்கப்படுவது, சரியான வடிகால் வசதியில்லாமல், பள்ளக்கால் பகுதிகளில் நீர்த் தேங்குவது, களர், உவர் நிலம் போன்ற காரணங்களாலும், மண்வளம் குறைந்து மகசூல் பாதிக்கப்படுகிறது.

மண் பரிசோதனை செய்து, தேவைக்கேற்ப இரசாயன உரங்களை இட வேண்டும். காற்றிலுள்ள தழைச்சத்தைக் கிரகித்து மண்ணை வளப்படுத்தும் உயிர் விதைநேர்த்தியைக் கடைப்பிடிக்க வேண்டும். அங்கக உரங்களாகிய தொழுவுரம், பசுந்தாள் உரம் மற்றும் தழை உரங்களைப் போதியளவில் இட வேண்டும். மண் பரிசோதனை மூலம், மண்ணிலுள்ள உவர், அமிலத் தன்மையை நீக்கி, மண் மேலாண்மை முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

போதுமான வடிகால் வசதியை ஏற்படுத்த வேண்டும். மண் வகைக்கேற்ப, பயிர்களைத் தேர்ந்தெடுத்து சாகுபடி செய்ய வேண்டும். இப்படியெல்லாம் மண்வளத்தைப் பாதுகாத்துப் பயிரிட்டால், மண்வளம் கெடாமல் இருக்கும். அதனால் தான், மண்ணின் பாதுகாப்பை உறுதி செய்யும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் டிசம்பர் 5 ஆம் தேதி உலக மண்வள தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருத்துப் பின்பற்றப்படுகிறது. இந்த ஆண்டின் கருத்து, மண் மற்றும் நீர், வாழ்க்கையின் ஆதாரங்கள் என்பதாகும். இந்த நாளில், மண்ணில் வாழும் மனிதர்களாகிய நாம் அனைவரும், அதைக் காக்கும் பணியை மேற்கொள்ள உறுதி ஏற்போம்.


முனைவர் சி.பிரபாகரன், முனைவர் வெ.கருணாகரன், முனைவர் து.பெரியார் இராமசாமி,

வேளாண்மை அறிவியல் நிலையம், நீடாமங்கலம், திருவாரூர் மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!