கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2020
வெப்ப வானிலை மற்றும் சுற்றுச்சூழல் மாசால் கால்நடைகளில் வெப்ப அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் கால்நடைகளின் உடல் வெப்பநிலை சீரமைவதில் மாற்றங்கள் நிகழ்கின்றன.
கடும் வெப்ப அழுத்தமானது, உடல் வெப்ப அதிகரிப்பு, இதயத்துடிப்பு மற்றும் இரத்த ஓட்டம் மிகுதல், உமிழ்நீரை கூடுதலாகச் சுரத்தல், தலைச்சுற்றல், உணர்வற்ற நிலை, போதியளவில் உண்ண முடியாமை, நீரை மிகுதியாகக் குடித்தல் போன்ற சிக்கல்களுக்கு வழி வகுக்கிறது.
இதனால், பசுக்களின் வளர்ச்சி, பாலுற்பத்தி, கருவுறுதல், பொருளாதாரம் ஆகியன பாதிக்கப்படுகின்றன.
வெப்ப அழுத்தம், 20% அல்லது அதற்கும் கூடுதலான உற்பத்தி இழப்பையும், 10-20% கருத்தரிப்புப் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது. மேலும், பசுக்களின் ஹார்மோன்களிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன.
சுற்றுப்புற வெப்பம், பசுவின் வெப்ப நடுநிலை மண்டலத்தைவிடக் கூடினால் வெப்ப அழுத்தம் ஏற்படும். இந்த மண்டலத்தின் வெப்பநிலை 10-24 டிகிரி சென்டிகிரேட் வரையில் உள்ளது. வளிமண்டல வெப்பநிலை, ஒப்பு ஈரப்பதம், காற்று இயக்கம், சூரியக்கதிர் வீச்சுப் போன்றவை, உடல் வெப்பநிலையைப் பாதிக்கச் செய்கின்றன.
பொருளாதார முக்கியத்துவம்
வெப்ப அழுத்தத்துடன் தொடர்புள்ள எல்லா மாற்றங்களும் உற்பத்தி இழப்புக்கு வழிவகுக்கும், இதனால், பால் உற்பத்தியில் கடுமையான இழப்பு ஏற்படும். வெப்ப அழுத்தத்தால் இனப்பெருக்கத் திறன் குறைவதோடு, உயிரிழப்பும் கூட நிகழும்.
மேலும், சினைப்பருவ வெளிப்பாடு, கருத்தெண் விகிதம் குறைதல் மற்றும் கறவை இல்லாக் காலம் மிகுதல் என, இனப்பெருக்கச் சிக்கல்கள் ஏற்படுகின்றன.
வெப்பச்சூழலில், கால்நடைகள் குறைவாகவே உண்ணும். இதனால் ஏற்படும் பாலுற்பத்திக் குறைவு மற்றும் இனப்பெருக்கத் திறனைச் சமாளிக்க, சிறிய விதானம் அமைத்தல், கொட்டிலில் காற்றோட்டத்தை ஏற்படுத்துதல், நீர்த்தெளிப்பான் அல்லது மின்விசிறியைப் பொருத்துதல், உணவுப் பழக்கத்தை மாற்றுதல் ஆகியவற்றைச் செய்யலாம். வெப்பத்தைக் குறைக்கும் கருவிகளை நிறுவுமுன், பொருளாதார நன்மையை முடிவு செய்ய வேண்டும். வெப்ப அழுத்த விளைவுகளைக் குறைத்தல்
சுற்றுச்சூழலில் மாற்றம், மேம்பட்ட உணவு முறைகள், வெப்பச் சகிப்புத் தன்மை, இனத்தின் மரபியல் வளர்ச்சி ஆகியவற்றின் மூலம் வெப்ப அழுத்த விளைவுகளைக் குறைக்கலாம்.
தேர்ந்தெடுக்கப்பட்ட இனப்பெருக்கம் மூலம் கறவை மாடுகளை, சூடான மற்றும் ஈரமான வானிலையைத் தாங்கும் தன்மைக்கு மாற்றலாம். ஜெர்சி மற்றும் பழுப்பு சுவிஸ் இனங்கள் வெப்பத்தைத் தாங்கி வாழும். ஜெர்சி இனம் வெண்ணெய், கொழுப்பு மற்றும் புரத உற்பத்திக்கு மிகவும் ஏற்றது.
ஆனால், அதற்கு உயர் தரமான தீவனம் தேவை. ஹோல்ஸ்டைன் மாடுகள் எளிதில் வெப்பத்தால் பாதிக்கப்படும்.
பராமரிப்பு முறைகள்
நீர்த்தெளிப்பான், மின்விசிறியைப் பொருத்துதல்: முதலில் அதிக வெப்ப நிலையைத் தாங்கிக் கொள்ளும் சூழலைப் பசுக்களுக்கு வழங்க வேண்டும். மாடுகளின் வெப்பநிலையை முடிந்தவரை குறைப்பதற்காக, கொட்டிலில் காற்று வெப்பநிலையைக் குறைப்பதே குளிரூட்டும் முறையின் முக்கிய நோக்கம்.
இரண்டு வழிகளில் நீராவி மூலம் குளிரூட்டலாம். முதலில், பசுக்களின் தோலிலிருந்து நேரடியாக ஆவியாதலைத் தடுத்தல். அதாவது 10-30 நிமிட இடைவெளியில் 1-5 நிமிடங்களுக்கு மாட்டின் உடலில் நீரைத் தெளிக்கலாம்.
அடுத்து, மறைமுகமாக ஆவியாதலைத் தடுக்க, குளிர்ச்சியூட்டும் மின்விசிறி, குளிர்விப்பானைக் கொண்டிருக்கும் மின்விசிறி, மினி பம்புகள் மற்றும் சுழலும் தானியங்கித் தெளிப்பான் ஆகியவற்றைக் கொட்டிலில் பொருத்தலாம். இதனால், பாலுற்பத்தி 11% கூடுகிறது.
கொட்டிலின் அமைப்பு: கொட்டிலின் நீளவாட்டம் கிழக்கு மேற்கில் அமைய வேண்டும். இதனால் சூரியவொளி கொட்டிலைத் தாக்குவது குறையும். நல்ல காற்றோட்டம் இருக்க வேண்டும். கூரைக்கு வெள்ளையடித்து, சூரியவொளிப் பிரதிபலிப்பைக் கூட்டலாம்.
இதனால், கூரையால் உறிஞ்சப்படும் வெப்பம் குறையும். மரங்கள், புல், மற்றும் புதர்கள் நிறைந்த பகுதியில் வெப்ப அழுத்தம் குறைவாக இருக்கும்.
விதானம் அமைத்தல்: பகலில் சூரியனின் நேரடித் தாக்கத்தில் இருந்து பசுக்களைக் காக்க வேண்டும். கொட்டிலைச் சுற்றி மரங்களையும் மற்ற தாவரங்களையும் வளர்த்தால் அங்கே குளிர்ச்சியான சூழல் நிலவும்.
மாடுகள் இளைப்பாற ஏற்ற மரங்கள் இல்லையெனில் ஒன்பதடி உயரத்தில் ஓலைக் கூரையை அமைக்க வேண்டும். ஓலை, ஈரமான சாக்குகளைக் கொண்டு வெப்பக் காற்றைத் தடுக்கலாம்.
மேம்பட்ட உணவுமுறை: வெப்பத்தைத் தவிர்க்க அதிகாலையிலும் மாலையிலும் மாடுகளை மேய்ச்சலுக்கு விடலாம். அதிகாலை, மாலை அல்லது இரவில் தீவனத்தை வழங்க வேண்டும். வெப்பக் காலத்தில் பொட்டாசியம் நிறைந்த கனிமக் கலவையைத் தர வேண்டும்.
ஏனெனில், இக்காலத்தில் பொட்டாசியத் தேவையைச் சமாளிக்க, கல்லீரலில் சேமித்து வைக்கப்பட்ட வைட்டமின் ஏ-யில் 30% வீழ்ச்சி ஏற்படுகிறது.
ஆவியாக்கம் மற்றும் வெப்பக் கடத்தல் மூலம் பயனுள்ள வெப்ப இழப்பைக் குறைக்க, புற உறுப்புகளில் இரத்த ஓட்டம் கூடும். இதனால், குடலிலுள்ள சத்துகளை உறிஞ்சுவதில் பாதிப்பு ஏற்படுவதுடன், பசுவின் பராமரிப்பு மற்றும் உற்பத்திக்கு வேண்டிய ஆற்றல் மற்றும் புரதத் தேவையின் அளவும் கூடும்.
எனவே, ஆற்றலும் புரதமும் நிறைந்த தீவனத்தைக் கூட்டித் தர வேண்டும்.
உணவில் கொழுப்புச் சத்தைச் சேர்த்துக் கொடுப்பது எரிசக்தியைக் கூட்டும் சிறந்த வழி. பெரும்பாலும் கோடையுணவில் கச்சாப் புரதம் மற்றும் தரமான நார்ச்சத்துள்ள உணவைத் தர வேண்டும்.
தீவனத்தில் சோடியம் பைகார்பனேட்டின் அளவைக் கூட்டுவது, பசுவின் முதல் இரைப்பை அமிலப் பராமரிப்புக்கு உதவும். தேவையான குடிநீரைத் தருதல் அவசியம். வைட்டமின் ஈ போன்ற எதிர்ப்பு ஆக்ஸிஜனேற்றிகளின் பயன்பாடு, ஆக்ஸிஜனேற்றச் சமநிலையில் வெப்ப அழுத்தத் தாக்கத்தைக் குறைக்கும்.
உகந்த பாலுற்பத்தியை அடைவதில் கவனமான நிர்வாகம், உணவு உத்திகள் முக்கியம். வெப்ப அழுத்தத்தைக் குறைப்பதற்கு வழிகள் பல இருந்தாலும், உள்ளூர்ப் பருவநிலை, விவசாயிகளின் கல்விநிலை மற்றும் முதலீடு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, சரியான உத்தியைப் பயன்படுத்த வேண்டும்.
மின்விசிறியைப் பொருத்துதல், குளிரூட்டுதல், நிழல் மற்றும் முறையான கொட்டில் மூலம், மாடுகளைத் தாக்கும் வெப்பத்தைத் தணிக்கலாம்.
மா.பரமேஸ்வரி,
இரா.ஜெயந்தி, கால்நடை மருத்துவக் கல்லூரி, சென்னை-07.
மரு.ம.பூபதிராஜா, கால்நடை மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி-627358.