விவசாயிகள் இப்போது பயிர் உற்பத்தியில் நிலவி வரும் நிரந்தரமற்ற வருவாயை மேம்படுத்தவும், கூலியாட்கள் பற்றாக்குறையைத் தவிர்க்கவும் பெரும் பணியாற்றி வருகின்றனர். இதனை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது தான் ஒருங்கிணைந்த பண்ணையம். பயிர்த் தொகுப்பு, கால்நடைப் பராமரிப்பு, மீன் வளர்ப்பு, வனவியல் போன்ற வேளாண்மை சார்ந்த தொழில்கள், வேளாண் பொருளியலில் பெரும் ஆற்றலை வகிக்கின்றன. இவை விவசாயிகளின் வருவாயை மேம்படுத்துவதோடு, வேலை வாய்ப்பையும் உயர்த்தியுள்ளன.
எனவே, ஒருங்கிணைந்த பண்ணைய முறை, வேளாண்மையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி உற்பத்தியை அதிகரித்துள்ளது. இந்த முறையின் மூலம் பண்ணைக் கழிவுகள் மறு சுழற்சிக்கு உட்படுத்தப்பட்டு, பயன்படுத்தப்படுகின்றன. பால் பண்ணை, கோழிப் பண்ணை, மீன் பண்ணை, பட்டு வளர்ப்பு போன்ற வேளாண் தொழில்களின் கலப்பு மூலம் வேளாண்மை செழிப்படைகிறது.
ஒருங்கிணைந்த பண்ணையத்தின் தேவை
விவசாய வளர்ச்சி விகிதம் சரிவு, உணவு உற்பத்தியில் சரிவு, சத்துக் குறைபாடு அதிகரிப்பு, நிகர சாகுபடிப் பரப்பில் சுருக்கம், சுற்றுச்சூழல் மாசுபாடு அதிகரிப்பு, நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருதல், உற்பத்திச் செலவு அதிகரிப்பு, விவசாயத்தில் வருமானம் குறைந்து வருதல் ஆகிய காரணங்களால், விவசாயிகள் அனைவருக்கும் ஒருங்கிணைந்த பண்ணையம் அவசியமாகிறது.
பயன்கள்: அதிக உணவு உற்பத்தியின் மூலம், நாட்டு மக்களின் உணவுத் தேவை சமநிலைப்படுகிறது. மறுசுழற்சி மற்றும் வேளாண் சார் அங்ககம் மூலம் பண்ணை வருவாய் உயர்கிறது. நீடித்த மண்வளம் மற்றும் அங்ககக் கழிவுகளின் மறுசுழற்சி மூலம் உற்பத்தி கிடைக்கிறது. ஒருங்கிணைந்த வேளாண் சார் நுட்பத்தின் மூலம், உணவுகளிலுள்ள புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு, தாதுகள், வைட்டமின்கள் போன்ற சத்துகள் செறிவூட்டப்படுகின்றன.
பன்றி வளர்ப்பு, கோழி வளர்ப்பு, புறா வளர்ப்பு போன்றவற்றிலிருந்து வரும் கழிவுகளை மறுசுழற்சி செய்வதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்படைகிறது. முட்டை, பால், காளான், காய்கறிகள் தேன், பட்டுப்புழு போன்ற ஒருங்கிணைந்த பண்ணை முறை மூலம் நிலையான வருவாய் கிடைக்கிறது. ஒருங்கிணைந்த பண்ணை முறைகளான உயிர் வாயு உற்பத்தி மற்றும் வேளாண் வனவியல் மூலம் ஆற்றல் இழப்புத் தவிர்க்கப்படுகிறது.
தீவனப் பயிர்களை ஊடுபயிராக அல்லது எல்லைப் பயிராகப் பயிரிடுவதால், பசு, ஆடு, பன்றி, முயல் போன்ற கால்நடைகளுக்குத் தேவையான சத்துமிகு உணவு கிடைக்கிறது. வேளாண் வனவியலின் மூலம் மண்ணரிப்புத் தடுக்கப்படுகிறது. விவசாயிகளின் குடும்பங்களில் வேலைவாய்ப்பு அதிகரிக்கிறது.
ஒருங்கிணைந்த பண்ணைய அங்கங்கள்: பயிர்கள், கால்நடைகள், பறவைகள், வனவியல் போன்றவை ஒருங்கிணைந்த பண்ணைய முறையின் அங்கங்களாகும். தானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள், தீவனப் பயிர்கள் போன்றவற்றின், ஒற்றைப்பயிர், கலப்பு மற்றும் ஊடுபயிர், பலப்பயிர் ஆகியன சாகுபடிப் பகுதிகளாகும். பசு, ஆடு, கோழி, தேனீக்கள் போன்றவை கால்நடைகளின் பகுதிகளாகும். தடிமரம், எரிவாயு, தீவனம், பழ மரங்கள் போன்றவை வனவியலின் பகுதிகளாகும்.
பரிசீலனை மிக்க காரணிகள்: மானாவாரிப் பகுதிகளில் ஒருங்கிணைந்த பண்ணை முறையைத் தேர்ந்தெடுக்க, மண் வகைகள், மழை மற்றும் அதன் விநியோகம், பயிரிடப்படும் காலநிலை போன்ற காரணிகள், தகுதியான ஆண்டுப் பயிர்கள், மரங்கள் மற்றும் கால்நடைப் பகுதிகளைத் தேர்வு செய்வதற்கு உதவுகின்றன. விவசாயிகளின் தேவை மற்றும் ஆதாரம் போன்றவையும், ஒருங்கிணைந்த பண்ணைய அங்கங்களைத் தேர்வு செய்ய உதவுகின்றன.
தகுதியான தானியப் பயிர்கள்: கரிசல் மண்: தானியப் பயிரான மக்காச்சோளம், சிறுதானியப் பயிர்களான சோளம், கம்பு; பயறுவகைப் பயிர்களான பச்சைப்பயறு, உளுந்து, துவரை, கொண்டைக்கடலை, சோயா மொச்சை; எண்ணெய் வித்துப் பயிரான சூரியகாந்தி; நார்ப் பயிரான பருத்தி; பிற பயிர்களான மிளகாய், கொத்தமல்லி ஆகியவற்றைப் பயிரிடலாம்.
செம்மண்: சிறுதானியப் பயிர்களான சோளம், கேழ்வரகு, தினை, சாமை, பனிவரகு, வரகு; பயறுவகைப் பயிர்களான அவரை, பச்சைப்பயறு, துவரை, சோயா மொச்சை, தட்டைப்பயறு; எண்ணெய் வித்துப் பயிர்களான நிலக்கடலை, ஆமணக்கு, எள் ஆகியவற்றைப் பயிரிடலாம்.
தகுந்த தீவனப் பயிர்கள்: கரிசல் மண்: தீவனச் சோளம், தீவனக் கம்பு, தீவனத் தட்டைப்பயறு, வேலிமசால், ரோடஸ் புல், மயில் கொண்டைப்புல், எலுசின் இனங்கள், தாம்சன் புல் ஆகியவற்றை வளர்க்கலாம்.
செம்மண்: தீவனச்சோளம், தீவனக் கம்பு, நீலக் கொழுக்கட்டைப் புல், தீவனக் கேழ்வரகு, சங்கு புஷ்பம், தீவனத் தட்டைப்பயறு, முயல் மசால், காட்டுமசால், மார்வல் புல், ஈட்டிப்புல், வெட்டிவேர் ஆகியவற்றை வளர்க்கலாம்.
தகுந்த மரங்கள்: கரிசல் மண்: கருவேல், குடைவேல், வேம்பு, வாகை, ஆயா மரம், மஞ்சநேர்த்தி, செம்பருத்தி, குமல மரம், சவுக்கு, பெருந்தகரை மற்றும் கதம்பு போன்ற மரங்கள் உகந்தவை.
செம்மண்: புளிய மரம், சைமரீபா, வாகை, அரப்பு, கொடைவேல், மான்காது வேல், வேம்பு, ஆச்சா, இலந்தை, நெல்லி, சவுக்கு, இலவம் பஞ்சு போன்ற மரங்கள் உகந்தவை.
தகுந்த கால்நடைகள் மற்றும் பறவைகள்: வெள்ளாடு, செம்மறியாடு, பசு, எருமை, புறா, முயல், காடை மற்றும் கோழி.
பண்ணைய நீடிப்பு மற்றும் உற்பத்தித் திறனைப் பெருக்கும் முறைகள்: மழையளவு மற்றும் மண்ணின் ஈரத்தைப் பொறுத்து மேம்படுத்தப்பட்ட பயிர் முறையை மேற்கொள்ளுதல். ஆண்டு முழுவதும் அல்லது தொடர்ந்து காய்கள், தழைகளைத் தரும் தானியப் பயிர்கள், மரங்களைத் தேர்வு செய்தல். மழைக் காலத்தில் உபரியாக உள்ள தீவனங்கள், பயிர்க் கழிவுகள் போன்றவற்றை, கோடைக்காலத் தேவைக்காகப் பாதுகாத்து வைத்தல்.
முனைவர் வே.எ.நேதாஜி மாரியப்பன்,
முனைவர் மு.புனிதாவதி, முனைவர் வி.சங்கீதா, வேளாண்மை அறிவியல் நிலையம், பெரம்பலூர்.
முனைவர் பெ.மோகனா, சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி, சென்னை.