கரிம வேளாண்மை, சுற்றுச்சூழல் அடிப்படையிலான பூச்சிக் கட்டுப்பாடுகள் மற்றும் உயிரியல் உரங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தும் விவசாய முறை. இது பெரும்பாலும் விலங்கு மற்றும் தாவரக் கழிவுகள் மற்றும் நைட்ரஜனை நிர்ணயிக்கும் பயிர்கள் ஆகியவற்றில் இருந்து பெறப்படுகிறது. வழக்கமான வேளாண்மையில் இரசாயனப் பூச்சிக் கொல்லிகள் மற்றும் செயற்கை உரங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் தீங்குகளுக்குத் தீர்வாக, நவீனக் கரிம வேளாண்மை உருவாக்கப்பட்டது. இது, ஏராளமான சுற்றுச்சூழல் நன்மைகளைக் கொண்டுள்ளது.
சுற்றுச்சூழல் எந்த வகையிலும் கெடாத வகையில் நமது வருங்கால வேளாண்மை முறைகள் அமைய வேண்டும். இந்த நூற்றாண்டில் வேளாண்மையில் பசுமைப் புரட்சி செய்து நமது தேவைக்கும் அதிகமான விளைச்சலைப் பெற்றுக் கொண்டிருக்கிறோம். வேளாண் உற்பத்தியில் மண்ணும் அதன் வளமும் முக்கிய இடத்தை வகிக்கின்றன. எதிர்காலத்திலும் அதிக விளைச்சலை நிரந்தரமாகப் பெறுவதற்கு மண்வளம் பாதுகாக்கப்பட வேண்டும். இதற்கு இயற்கை சார்பு வேளாண்மை தான் சிறந்தது. இது, மண்வளத்தை உயர்த்துவதுடன் பாதுகாக்கவும் செய்கிறது.
இயற்கை வேளாண்மையை மேற்கொள்வதன் நோக்கங்கள்
மண் வளத்தைப் பெருக்கி, நல்ல உயிருள்ள மண்ணை ஏற்படுத்துதல். எல்லாச் சத்துகளையும், முக்கியமாக, மணி மற்றும் நுண் சத்துகளைப் பயிருக்குக் கிடைக்கச் செய்தல். பல்வேறு கழிவுப் பொருள்களை உரமாகப் பயன்படுத்தி சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல். இயற்கையைப் பதப்படுத்தும் காரணிகளைப் பயன்படுத்துதல். அதிக மகசூலை நிரந்தரமாகப் பெறுவதற்கு வழி வகுத்தல்.
இயற்கை வேளாண்மையில் மண்வளப் பாதுகாப்பு
பல்வேறு கழிவுகள், இயற்கை உரங்கள்: தொழுயெரு, பசுந்தாள் எரு, நுண்ணுயிர் உரங்கள், பாறை மணிச்சத்து போன்றவற்றை இட்டு, மண்வளத்ததைப் பாதுகாத்தல். இதன் மூலம் மண்ணில் பௌதிக, இரசாயன, உயிரியல் மாற்றங்களை ஏற்படுத்தி மண்வளத்தைச் சீராகப் பாதுகாத்தல்.
தமிழகத்தின் மண்வளம்
பேரூட்டங்கள்: தழைச்சத்தானது குறைந்தளவில் உள்ளது. மணற்பாங்கான மண்ணில் மிகக் குறைவாக உள்ளது. மணிச்சத்தானது குறைந்த அளவிலிருந்து மிதமான அளவு வரை காணப்படுகிறது. சாம்பல் சத்தின் இருப்பில் வேறுபாடு உள்ளது. மணற்பாங்கான மண்ணில் குறைந்தது 20 சதம் சாம்பல் சத்து இருக்கும். 40 சதம் நிலங்களில் மிதமான அளவிலும், எஞ்சிய 40 சதம் நிலங்களில், குறிப்பாகக் கரிசல் மண்ணில் அதிகளவிலும் உள்ளது.
நுண்ணூட்டங்கள்: தமிழகத்தில் துத்தநாகம் 52 சதம், தாமிரம் 30 சதம், இரும்புச்சத்து 22 சதம், மாங்கனீசு 8 சதம் ஆகிய அளவுகளில் உள்ளன.
இயற்கை வேளாண்மையில் மண்வளம் காக்க உதவும் உரங்கள், உயிரினங்கள்
இயற்கை உரங்கள்: தொழுவுரம், குப்பையுரம், சாண எரிவாயுக் கழிவு, பயிர்க் கழிவுகள், தென்னைநார்க் கழிவு, பண்ணைக் கழிவு, சாக்கடைக் கழிவு, சர்க்கரை ஆலைக் கழிவு போன்றவை. பசுந்தாள் உரங்கள்: சணப்பை, கொளுஞ்சி, கிளைரிசிடியா, செஸ்பேனியா மற்றும் இதர தழை உரங்கள்.
நுண்ணுயிர் உரங்கள்: ரைசோபியம், அசோஸ்பயிரில்லம், அசட்டோபாக்டர் போன்ற, காற்றிலுள்ள தழைச்சத்தை நிலத்தில் சேர்க்கும் உரங்கள்; பாஸ்போ பாக்டீரியா மற்றும் வாம் போன்ற, பாக்டீரியா மற்றும் பூசணங்களை, மணிச்சத்தைப் பயிர்களுக்கு நிலத்தில் இருந்தும் மற்றும் உரத்தில் இருந்தும் கிடைக்கச் செய்யும் நுண்ணுயிர் உரங்கள். மண்வளம் சீராக உதவும் உயிரினங்கள்: மண்புழு, நச்சுப் பொருள்களை முறிக்க உதவும் நுண்ணுயிர்கள்.
இயற்கை வேளாண்மை நிர்வாகம்
இயற்கை உரங்கள் மற்றும் பல்வேறு கழிவுப் பொருள்களை, பயிர்களின் தேவைக்கு ஏற்ப இடுதல். எக்டருக்கு 12.5 டன் வீதம் இயற்கை உரமிடுதல். 6.25 டன் தழையுரம் இடுதல். காய்கறிகள் மற்றும் மலைப் பயிர்களுக்கு 25-30 டன் இடுதல். அங்கக உரங்களை மட்டுமல்ல, நுண்ணுயிர் உரங்களையும் இடுதல் அவசியம்.
பயிர்ச் சுழற்சியில், காற்றிலிருந்து தழைச்சத்தைக் கிரகிக்கும் திறனுள்ள பயறுவகைப் பயிர்களைப் பயிரிடுதல். இதன் மூலம் கூடுதலான தழைச்சத்தைப் பயிர்களுக்குக் கிடைக்கச் செய்தல் மற்றும் மண் வளத்ததை அதிகரித்தல்.
இயற்கை உரங்களில் மற்றும் கழிவுகளிலுள்ள பேரூட்டங்களின் அளவுகள்
தழை, மணி, சாம்பல் சத்தானது, தொழுவுரத்தில் 0.80 சதம், 0.41 சதம், 0.75 சதம் உள்ளன. இந்தச் சத்துகள் கோழி எருவில் 3.8 சதம், 3.5 சதம், 1.9 சதம் என அதிகமாக உள்ளன. இச்சத்துகள் நிலக்கடலைப் புண்ணாக்கில் அதிகளவிலும், அடுத்தபடியாக வேப்பம் புண்ணாக்கில் 5.2 சதம், 1.0 சதம் 1.4 சதம் அளவிலும் உள்ளன.
இதைப்போல, சோளத்தட்டை, கரும்புத் தோகையில் இருப்பதை விட, வைக்கோலில் சாம்பல் சத்து அதிகளவில் உள்ளது. அதாவது, தழைச்சத்து 1.59 சதம், மணிச்சத்து 1.34 சதம், சாம்பல் சத்து 3.37 சதம் உள்ளன. கரும்புத் தோகையில் 2.73 சதம் தழைச்சத்து, 1.81 சதம் மணிச்சத்து, 1.31 சதம் சாம்பல் சத்து உள்ளன.
சாக்கடைக் கழிவில் 1.5-3.5 சதம் தழைச்சத்து, 0.75-4.0 சதம் மணிச்சத்து, 0.3-0.6 சதம் சாம்பல் சத்து உள்ளன. மண்புழு கம்போஸ்ட்டில் தழைச்சத்து 1.6 சதம், மணிச்சத்து 2.2 சதம், சாம்பல் சத்து 0.7 சதம் உள்ளன. பேரூட்டங்களைத் தவிர, கணிசமான அளவில் நுண் சத்துகளும் உள்ளன.
இயற்கை வேளாண்மையால் ஏற்படும் மாற்றங்கள்
பௌதிக மாற்றங்கள்: இயற்கை உரங்களை, கழிவுகளைப் பயன்படுத்துவதால், மண்ணில் அங்ககப் பொருள்களின் அளவு அதிகரிக்கிறது. இதனால், மண்ணில் பல்வேறு பௌதிக மாற்றங்கள் ஏற்படுகின்றன. மண்ணின் பரும அடர்த்தி குறைந்து, நீரைத் தேக்கி வைக்கும் திறன், நீர் ஊடுருவும் அளவு, நீர் வடியும் அளவு, மண்ணின் கட்டுமானத் திறன் ஆகியன நிலைப்படுத்தப் படுகின்றன.
எடுத்துக்காட்டாக, சர்க்கரை ஆலைக் கழிவை நிலத்தில் இடுவதால் நீர் ஊடுருவும் அளவு, ஒரு மணி நேரத்தில் 1.68 லிருந்து 4.50 செ.மீ. ஆகவும், நீரைத் தேக்கி வைக்கும் திறன் 23.7 லிருந்து 56.3 சதமாகவும் அதிகரிக்கும். ஆனால், மண்ணின் பருமனடர்வு 1.53 லிருந்து 1.13 கி. ஒரு சி.சிக்குக் குறைவதால், பயிருக்கு ஏற்ற பௌதிகத் தன்மை மண்ணில் உண்டாகிறது.
இரசாயன மாற்றங்கள்: இயற்கை எருக்களையும், நுண்ணுயிர் உரங்களையும் பயன்படுத்துவதால், மண்ணில் சத்துகளின் அளவு அதிகமாகிறது. கரும்புத் தோகை மற்றும் அசோட்டோபாக்டரைப் பயன்படுத்திய 15 வாரங்களில் கார்பன் தழை விகிதம் 38 லிருந்து 24.9 க்கு குறைந்தது. மேலும், தழை, மணி, சாம்பல் ஆகிய சத்துகளின் அளவுகள் 1,0, 02.5, 3.20 கி.ஹெ. லிருந்து 166, 8.7, 375 கி.ஹெ.டராக உயர்ந்தது. சாக்கடைக் கழிவை இட்டதால், 25 ஆண்டுகளில் துத்தநாகம், தாமிரம், இரும்பு ஆகிய சத்துகள் 2.5-8.7, 5-379, 14.0-68.7 பிபிஎம் என நான்கு மடங்கு உயர்ந்தது.
மண்ணில் இயற்கை உரங்களை இடுவதன் மூலம், அங்ககத் தழை, மணி, சாம்பல் சத்துகள் மட்டுமல்ல; நுண் சத்துகளும் அதிகரித்து மண்வளம் காக்கப்படுகிறது.
உயிரியல் மாற்றங்கள்: இயற்கை உரங்களை இடுவதால் மண்ணில் நுண்ணுயிர்கள் பெருகுகின்றன. மாட்டு எருவை இடுவதனால், மண்புழுவின் கூட்டுத் தன்மையும், துளையிடும் தன்மையும் நிலை நிறுத்தப்படுகின்றன. பண்ணைக் கழிவுகளை இடுவதால் மண்ணிலுள்ள பூசணங்கள், பாக்டீரியா, ஆக்டினோமைசிடஸ் ஆகியன பெருகுகின்றன.
மண்வளத்தைக் கூட்டும் அசோஸ்பயிரில்லம், அசட்டோபாக்டர், பாஸ்போ பாக்டீரியம் போன்றவற்றின் சேர்க்கை மண்ணில் மிகுவதுடன், பயிர்களின் விளைச்சல் அதிகரிக்க வழி வகுக்கும்.
முனைவர் கா.சிவக்குமார்,
முனைவர் மீ.திலக், முனைவர் கே.இரமா, மண்ணியல் துறை,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் – 641 003.