அலையாத்திக் காடுகளை உருவாக்கும் விதைகள்!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2019

குளிர் நிறைந்த சுகமான காலை நேரம். விடுமுறை நாள் நடைப் பயிற்சியாளர்கள் கடற்கரை நெடுக உலாத்திக் கொண்டிருந்த நேரம். ஆலாலோ ஐலசா ஆலாலோ ஐலசா என்று கூவிக்கொண்டு, உறவுகளைப் பிரிந்து, இரவுகளில், கட்டுமரங்களில், மீன் வேட்டைக்குச் சென்றவர்கள், தூக்கக் கலக்கத்தில், தூக்க முடியா மீன் சுமைகளுடன், கடற்கரையில் இறங்கிக் கொண்டிருந்த நேரம்.

அந்த மீன்களை வாங்க ஈக்களைப் போல மக்கள் மொய்த்துக் கொண்டிருந்த நேரம். இரவில் தூங்கிய பறவைகள் கூவிக்கூவி ஒன்றுக்கொன்று நலம் விசாரித்துக் கொண்டிருந்த நேரம். உயிர்களைக் காக்கும் சூரியக் குழந்தை மேகப் போர்வையை விலக்கி, அவசர அவசரமாக, கண் சிவக்க விழித்துக் கொண்டிருந்த நேரம். மொத்தத்தில் அந்த நேரம், எப்படிப்பட்ட மன உளைச்சலில் உள்ளோரையும் அமைதிப்படுத்தும் நேரம்.

2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இப்படித் தான் விடிந்திருந்தது. ஆனால், இந்த விடியல் சூழல்கள் மாறுவதற்குள், உலகையே நிலைகுலைய வைக்கும் அந்தக் கொடூரம் சில மணித்துளிகளில் நடந்து முடிந்து போனது. மேரு போல் உருவெடுத்துக் கிளம்பிய ஆழிப்பேரலை ஒன்று, நிலவெளிக்குள் புகுந்து, நடுநடுங்க வைத்து, நல்லுயிர்களைப் பறித்து, அழ வைத்து அலற வைத்து, எண்ணற்றோர் வாழ்வை மீளாத் துயரத்தில் ஆழ்த்தி விட்டுப் போனது. அதை இப்போது நினைத்தாலும் மனம் பதைபதைக்கிறது.

ஆழிப்பேரலையும் பாதிப்புகளும்

இந்தியப் பெருங்கடலில் இந்தோனேசியாவின் சுமத்திரா தீவுக்கருகில் முப்பது கிலோ மீட்டர் ஆழத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தால் உருவானது இந்தப் பேரலை. இதை ஏற்படுத்திய நிலநடுக்கம், நிலநடுக்க வரலாற்றில் இரண்டாவது பெரிய நிலநடுக்கம் என்கிறது அறிவியல். இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா, இலங்கை, இந்தியா, மாலத்தீவுகள் உள்ளிட்ட பதினான்கு நாடுகளைத் தாக்கிய இந்தப் பேரலையால் மாண்டோர் 2,30,000 பேர்கள். இந்தியாவில் 6,400 பேர்கள் எனவும், தமிழகத்தில் 2,758 பேர்கள் எனவும் புள்ளிவிவரம் கூறுகிறது. உயிரிழப்புக் கணக்கு இப்படியிருக்க, தென்னிந்திய அளவிலான பொருளாதார இழப்பில் பாதியை, தமிழகம் சந்தித்தது என்கிறது வணிகவியல் கணக்கு.

ஆழ்மனதில் பதிந்த நிகழ்வு

இலெமூரியாக் கண்டம் கடலில் மூழ்கிப் போனது என்னும் செய்தியைப் படிக்கும் போது அது நமக்குள் தாக்கம் எதையும் ஏற்படுத்துவதில்லை. ஏனெனில், அது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்ததாகச் சொல்லப்படுவது; நாம் அறியாதது. 1964 இல் கடலால் துனுஸ்கோடி அழிக்கப்பட்டது சுமார் ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் நடந்தது; அதுவும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் நிகழ்ந்தது. மேலும், அரை நூற்றாண்டுக்கு முந்தைய நிகழ்வு என்பதால், இன்றைய மக்கள் அதைப் பற்றிக் கவலைப்படுவதற்கு வாய்ப்பில்லை.

ஆனால், 2004 இல் நடந்த ஆழிப்பேரலை அழிவு, தமிழகக் கடற்கரை முழுவதும் நிகழ்ந்தது; ஒரே நேரத்தில் பல நாடுகளில் நிகழ்ந்தது. போக்குவரத்து மற்றும் ஊடக வசதியால் அந்த அவலங்கள் ஒவ்வொன்றும் நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தப்பட்டது; ஆழ்மனதில் பதியப்பட்டது. பாதிப்புக்கு உள்ளான மக்கள் ஆண்டுதோறும் அந்தச் சோக நாளை அனுசரித்து வருகிறார்கள். அதனால், மறவாமல் மனத்துள் கிடக்கும் அந்த நிகழ்வு, எப்போது நினைத்தாலும் வேதனையைத் தருவது.

புயல் வருவதையும் மழை வருவதையும் முன்கூட்டியே அறிவிக்கும் அறிவியலின் ஆந்தைக் கண்ணில், இந்த ஆழிப்பேரலை வருவது தெரியாமல் போனது புதிரானது. அது விஞ்ஞானிகளை வியக்க வைத்தது; அரசுகளைச் சிந்திக்க வைத்தது; சமூக ஆர்வலர்களை உசுப்பி விட்டது.

அலையாத்திக் காடுகளின் சிறப்பு

இடரொன்று வந்தால் அதிலிருந்து மீள்வதற்கான வழியொன்றும் இருக்கும். இது இயற்கையின் படைப்பு. அப்படியிருக்க, எண்ணற்ற உயிரிழப்புக்கும், மிதமிஞ்சிய பொருளாதார இழப்புக்கும் என்ன காரணம் என்று, கவலையுடனும் கவனத்துடனும் இவர்கள் கள ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது தெரிய வந்த உண்மை, கடலோரத்தில் வளரும் மாங்குரோவ் காடுகள் எனக் கூறப்படும் அலையாத்திக் காடுகள் இருந்த பகுதிகளில் பேரலையின் தாக்கம் மட்டுப்பட்டு, சேதங்கள் குறைந்திருந்தன; இக்காடுகள் இல்லாத பகுதிகளில் தாக்கம் அதிகமாகி, சேதங்கள் மிகுந்திருந்தன என்பது தான்.

இதையடுத்து, நாகரிகத்தாலும், மனித நெருக்கடியாலும் அழிந்து போன கடலோரத் தாவரங்களை மீண்டும் உருவாக்கி, அவற்றைக் கடலோர மக்களின் காவல் அரணாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம், அந்த மக்களின் வாழ்வியல் தேவை என்னும் முடிவுக்கு வந்தனர். அதன்படி, அரசும், அரசுடன் இணைந்து தன்னார்வ அமைப்புகளும், இப்பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இவ்வகையில், திண்டுக்கல் விதைகள் அறக்கட்டளை, நாகர்கோவில் பகுதியில் அலையாத்திக் காடுகளை உருவாக்கும் வேலையில் முனைப்புடன் ஈடுபட்டு வருவதையறிந்து, இதன் முழு விவரங்களைச் சேகரிக்க ஏதுவாக அங்கே சென்றோம். அப்போது நம்மை வரவேற்ற இந்த அறக்கட்டளையின் திட்ட இயக்குநர் பி.முத்துசாமி, இந்தப் பணிகள் நடைபெறும் இடத்துக்கே நம்மை அழைத்துச் சென்று பணியின் அனைத்து விவரங்களையும் எடுத்துக் கூறினார்.

விதைகள் அறக்கட்டளை

“SEEDS எனப்படும் விதைகள் அறக்கட்டளையை 1997 ஆம் ஆண்டு தொடங்கினோம். இயற்கையைப் பாதுகாத்து ஒட்டுமொத்தச் சமுதாயத்தையும் மேம்படுத்த வேண்டும் என்பது எங்கள் அமைப்பின் முக்கிய நோக்கம். அந்த அடிப்படையில், கடல் சீற்றங்களில் இருந்து கடற்கரைப் பகுதி மக்களைக் காக்கும் தன்மையுள்ள அலையாத்திக் காடுகளை மீட்டெடுத்தல், கடற்கரை மற்றும் முகத்துவார உயிர்ப் பன்மயச் சூழலைப் பாதுகாத்து, அங்கே வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல் சார்ந்த வேலைகளை இங்கே செய்து கொண்டு இருக்கிறோம்.

இராஜாக்கமங்கலம்

2004 ஆம் ஆண்டு சுனாமியால் பாதிக்கப்பட்ட கடற்கரைப் பகுதிகளைக் கள ஆய்வு செய்து, எங்கள் பணிப்பகுதியாக, கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலுக்குப் பக்கத்திலுள்ள இந்த இராஜாக்கமங்கலம் ஊராட்சியைத் தேர்வு செய்தோம். இதில் அமைந்துள்ள இராஜாக்கமங்கலம் துறை, அண்ணா காலனி, பண்ணையூர், முருங்கைவிளை, தெக்குறிச்சி, சுனாமிக் குடியிருப்பு, அளத்தங்கரைப் பகுதியில் கடல்நீரும் நன்னீரும் கலக்கும் பன்றியாறு கழிமுகப் பகுதி ஆகிய இடங்களில் நாங்கள் அலையாத்தித் தாவரங்களை வளர்க்கும் வேலையைச் செய்து வருகிறோம்.

அலையாத்தித் தாவரங்கள்

உப்புக்காற்றையும் உப்புநீரையும் தாங்கி வளரும் தாவரங்கள் அலையாத்தித் தாவரங்கள் எனப்படும். தில்லை, கண்டல், கருங்கண்டல், அபிசீனியா, புன்னை, தாழை, குருத்தி, முக்குருத்தி போன்றவை இவ்வகையில் அடங்கும். இவற்றை உருவாக்க, முதலில் நமக்குப் போதுமான அளவில் நாற்றுகள் வேண்டும். இதற்காக, கொச்சி, பிச்சாவரம், முத்துப்பேட்டை, மணக்குடி, புன்னைக்காயல் ஆகிய ஊர்களுக்குச் சென்று அங்குள்ள மீனவ மக்களின் உதவியுடன், இந்தத் தாவர விதைகளைச் சேகரித்து வந்தோம். பிறகு நாற்றங்காலை அமைத்து நாற்றுகளை வளர்த்து, முறைப்படி நட்டு வளர்த்து வருகிறோம். மேலும், மற்ற நிலப்பகுதிகளில், வேம்பு, புங்கன், ஆல், அரசு போன்ற மரங்களை வளர்க்கிறோம்.

திட்டப் பரப்பு

2007 ஆம் ஆண்டில், மணல் திட்டு 20 எக்டர், சதுப்பு நிலம் 20 எக்டர் என மொத்தம் நாற்பது எக்டரில் எங்கள் பணியைத் தொடங்கினோம். இதை 2011 ஆம் ஆண்டில் முடித்து விட்டோம். அந்தக் கட்டத்தில் நாங்கள் நட்டு வளர்த்த அலையாத்தி வகை நாற்றுகள் எல்லோரும் பார்த்து வியக்கும் அளவில் மரங்களாக வளர்ந்து நிற்கின்றன. இந்த வெற்றி எங்களுக்கு இன்னும் ஊக்கத்தைக் கொடுத்தது. அதனால், இரண்டாம் கட்டமாக, 2017 ஆம் ஆண்டில், மணல் திட்டு 60 எக்டர், சதுப்பு நிலம் 100 எக்டர் என மொத்தம் 160 எக்டரில், கடலோரத் தாவர வளர்ப்பை மேற்கொண்டு வருகிறோம். இதை, 2022 வரையில், அதாவது, இந்தத் திட்டம் முழுப் பயனுக்கு வரும் வரையில் தொடர்ந்து செய்து கொண்டிருப்போம்.

உதவி

இந்தத் திட்டத்துக்கான நிதியுதவியை, இயற்கை வளங்களைப் பாதுகாக்க உதவும் பன்னாட்டு நிறுவனங்கள் செய்து வருகின்றன. இதைக் கொண்டு, இராஜாக்கமங்கலம் ஊராட்சி மன்றம், கடல்வாழ் ஆராய்ச்சி மையம், வனத்துறை, சுற்றுச்சூழல் துறை, பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு நிறுவனம், இராஜாக்கமங்கலம் கபடிக்குழு ஆகியவற்றுடன் இணைந்து இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறோம்.

தாவரங்களின் நன்மைகள்

கடல்பாசி பாதுகாப்பு: சதுப்பு நிலம் மற்றும் கழிமுகங்களில் வளரும் அலையாத்தித் தாவரங்கள், மழைக்கால வெள்ளத்தில் அடித்து வரப்படும் நெகிழிப் பொருள்கள், வேதிப்பொருள்கள் போன்ற கழிவுகளைக் கடலுக்குள் போக விடாமல் தடுத்து விடும். மேலும் அவற்றைத் தங்களுக்கான உணவாக மாற்றி விடும். கழிவுகள் கடலுக்குள் செல்வது தடுக்கப்படுவதால், கடல்பாசி பாதுகாக்கப்படுகிறது. கடல்பாசி அழிந்தால் கடலில் வாழும் உயிரினங்கள் பாதிப்புக்கு உள்ளாகும். ஏனெனில் கடல்பாசி தான் இந்த உயிரினங்களுக்குத் தேவையான மூச்சுக்காற்றைத் தடையில்லாமல் கிடைக்கச் செய்கிறது.

இனவிருத்திக்கு உதவுதல்: கடலில் வாழும் உயிரினங்கள் வெள்ளக் காலத்தில் கழிமுகத்துக்குள் வந்து, முட்டைகளை இட்டு விட்டுக் கடலுக்குள் சென்று விடும். இவற்றைப் பறவைகள் போன்றவற்றிடம் இருந்து பாதுகாக்க ஏதுவாக, இந்தத் தாவரங்கள் இருக்கும். மேலும், இந்த முட்டைகளில் இருந்து வெளிவரும் குஞ்சுகளுக்கான உணவாக இந்தத் தாவரங்கள் உதிர்க்கும் இலைகள் பயன்படும். இப்படி, கடல் உயிர்களின் இனவிருத்திக்குக் கழிமுகத் தாவரங்கள் உதவுகின்றன.

பறவைகளின் புகலிடம்: பொதுவான கடல் பகுதியைத் தவிர, கழிமுகத்தை ஒட்டியுள்ள கடல் பகுதியில் மீன் உற்பத்தி, குறிப்பாக, விலையுயர்ந்த இறால் போன்றவை அதிகமாகக் கிடைக்கும். இதனால், இந்தப் பகுதி மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும். மேலும், இயற்கைச் சீற்றங்களைத் தடுத்து, கடற்கரை மக்களின் வாழ்க்கைக்குப் பாதுகாப்பாக அமையும். வெளிநாட்டுப் பறவைகள் வந்து தங்கி, இனவிருத்தி செய்து, அவை மீண்டும் தங்களின் நாடுகளுக்குக் கிளம்பும் வரையில் அவற்றின் புகலிடமாக அலையாத்தித் தாவரங்கள் இருக்கும்.

தேனீக்களின் வருகை: இந்தத் தாவரங்கள் கால்நடைகளின் தீவனமாகவும், மருத்துவத்திலும் பயன்படுகின்றன. இவற்றுக்கு உப்புநீரில் சிதையாத தன்மை இருப்பதால் தான், பழங்காலத்தில் இந்தத் தாவரங்களின் மரங்களையே கட்டுமரங்களாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அலையாத்தி மரங்கள் ஆண்டு முழுவதும் பூத்துக்கொண்டே இருக்கும். அதனால், இங்கே வரும் தேனீக்கள் அயல் மகரந்தச் சேர்க்கை சிறப்பாக நடைபெற உதவுவதால், இப்பகுதி வேளாண்மையில் மகசூல் பெருகும். இந்தத் திட்டத்தின் மூலம், முதல் கட்டமாக நாங்கள் வளர்த்த அலையாத்தித் தாவரங்கள் நன்கு வளர்ந்து காய்த்துக் கொண்டிருப்பதால், எங்களுக்குத் தேவையான விதைகள் இப்போது இங்கேயே கிடைக்கின்றன.

திட்டத்தின் பிற பயன்கள்

சுற்றுச்சூழல் மையம்: நாற்றங்கால் அமைத்தல், கன்றுகளை நடவு செய்தல் போன்ற பணிகளைச் செய்வதால் இப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கிறது. தேனீ வளர்ப்பு, கிடுகுகள் தயாரிப்பு, கயிறு திரிப்பு, மண்புழு உரத் தயாரிப்புப் போன்ற பயிற்சிகளை இங்குள்ள மக்களுக்குக் கொடுக்கிறோம். அத்துடன், அவர்கள் எடுத்த பயிற்சி சார்ந்த தொழிலைத் தொடங்குவதற்குத் தேவையான அரசின் நிதியுதவியும் இத்திட்டத்தின் மூலம் செய்து கொடுக்கிறோம்.

மாணவர்களுக்கான சுற்றுச்சூழல் மையமாக இத்திட்டப் பகுதி பயன்படுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம், மாணவர்களுக்குச் சுற்றுச்சூழல் குறித்த கட்டுரைப் போட்டி, பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, விளையாட்டுப் போட்டி போன்றவற்றை நடத்தி, சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இங்கே அலையாத்தி மரங்கள் நன்கு வளர்ந்துள்ளதால், இவற்றைப் பற்றி அறிவதில் மாணவர்கள் ஆர்வமாக உள்ளனர்.

பாதுகாப்புச் சங்கம்: இங்குள்ள கல்வி மையத்தின் மூலம், மாணவர்களுக்குச் சூழல் குறித்த விழிப்புணர்வைக் கொடுத்து, அதற்கான செயல்களில் ஈடுபட வைக்கிறோம். மேலும், இந்தத் திட்டம் செயல்படும் கிராமங்களைச் சேர்ந்த பெண்கள், மீனவர்கள், மாணவர்கள், இளைஞர்களைக் கொண்டு, அலையாத்திக் காடுகள் பாதுகாப்புச் சங்கத்தை அமைத்துள்ளோம். இவர்கள், மரம் வளர்ப்பு, மழைநீர்ச் சேமிப்பு, நிலத்தடி நீர்ப் பாதுகாப்பு உள்ளிட்ட சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் சமூக நலனுக்கான கருத்துகளைப் பகிரவும், செயல்படுத்தவுமான கூட்டங்களை மாதந்தோறும் நடத்தி வருகின்றனர்.

சீமைக்கருவேல் அழிப்பு: நூறு ஏக்கரில் இருந்த சீமைக்கருவேல மரங்களை அழித்துத் தான் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துகிறோம். ஒரு குடும்பத்துக்கு ஐந்து கன்றுகள் வீதம் ஆயிரம் குடும்பங்களுக்குப் பயனுள்ள மரக்கன்றுகளை வழங்கினோம். அவற்றை அவர்களின் வீடுகள், பொது இடங்கள், ஆலயங்கள், பள்ளிகள் போன்ற இடங்களில் நட்டு வளர்த்து வருகிறார்கள்.

மன நிறைவு

நாங்கள் இங்கே வந்து அலையாத்திக் காடுகளை உருவாக்கத் தொடங்கிய பிறகு, இப்பகுதியில் பல்லுயிர்ப் பெருக்கம் மேம்பட்டுள்ளது. இப்பகுதிக்கு வரும் பறவைகள் அதை உறுதி செய்கின்றன. அதனால், சுற்றுலாப் பயணிகள் வருகையும், ஆராய்ச்சி மாணவர்கள் வருகையும் கூடி வருகிறது. இப்பகுதி மக்கள், முக்கிய மனிதர்கள், இளைஞர்கள், மாணவர்கள், அரசு அலுவலர்கள் அளித்து வரும் ஆதரவால், எங்களுக்குக் கிடைத்த சமூகப்பணி வாய்ப்பை மன நிறைவுடன் செய்து வருகிறோம்’’ என்றார்.

இயற்கை வளமே மனித வளம்; இதை எண்ணிட வருமே வாழ்வில் நலம் என்னும் பசுமை மொழிக்கு வடிவம் தரும், சீட்ஸ் அறக்கட்டளையின் சூழல் மேம்பாட்டுப் பணிகள் மேலும் மேலும் தொடர வேண்டும் என்று வாழ்த்தி விடை பெற்றோம்.


துரை.சந்தோசு

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!