கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2019
தமிழகப் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் தேசியப் பசுமைப்படை குறித்து, பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் வி.சி.இராமேஸ்வர முருகனிடம் பேசினோம்.
“தேசியப் பசுமைப்படை, இந்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் நேரடித் திட்டத்தின் கீழ், இந்தியாவில் 250 மாவட்டங்களில் உள்ள 1,20,000 பள்ளிகளில் செயல்படுத்தப்படுகிறது. பள்ளியளவில் மாணவ, மாணவியரிடம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்துவது; பள்ளியளவில் சுற்றுச்சூழல் துறை எதிர்பார்க்கும் திட்டங்களை மாணவர்களைக் கொண்டு செயல்படுத்தி, பள்ளி வளாகத்தைத் தூய்மையாக வைப்பது; சுற்றுச்சூழல் பாதிப்பை மாணவர்களுக்குப் புரிய வைத்து, அதைத் தடுப்பதற்கான வழிமுறைகளை அவர்களுக்குக் கற்றுத் தருவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
இவ்வகையில், ஒரு கல்வி மாவட்டத்தில் 100 முதல் 150 பள்ளிகள் வீதம், தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கல்வி மாவட்டங்களிலும் தேசியப் பசுமைப்படைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் துறையின் நேரடிக் கட்டுப்பாட்டில் கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் இத்திட்டமானது, தன்னார்வத் திட்டமாகத் தொடங்கப்பட்டுப் பல முன்னேற்றங்களை அடைந்த நிலையில், மத்திய அரசின் நிதியுதவியாக, பள்ளிக்கு ரூ.5,000 வீதம், இம்மன்றச் செயல்பாடுகளுக்கு வழங்கப்படுகிறது.
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் செயல்பட்டு வரும் தேசியப் பசுமைப்படைத் திட்டத்துக்கு என, ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் ஒருங்கிணைப்பாளர் ஒருவர் செயல்பட்டு வருகிறார். இந்தப் பொறுப்பை, பள்ளியாசிரியர்கள், தலைமையாசிரியர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைச் சார்ந்தவர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் வகித்து வருகின்றனர். பள்ளியளவிலான மன்றச் செயல்களைப் பள்ளியாசிரியர்கள் கூடுதல் பொறுப்பாகக் கவனித்து வருகிறார்கள். ஒவ்வொரு பசுமைப் படையிலும் 30 மாணவர்களுக்குக் குறையாமல், அதிகளவாக 50 மாணவர்கள் இடம் பெறலாம்.
பள்ளிகளின் செயல்பாடுகள்
பள்ளியளவில் மாணவர்களுக்கு ஆண்டுக்கு 30 மணி நேரம் பசுமைப்படை சார்ந்த பயிற்சிகளும், 40 மணி நேரம் பள்ளி வளாகப் பணிகளும், 50 மணி நேரம் மாணவர்களுக்குச் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் போட்டிகள், சமுதாயப்பணி, பள்ளிக்கு வெளியே துாய்மைப்பணி, பேரணிகள், களப்பயணம் போன்றவையும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
மேலும், சுற்றுச்சூழல் முகாம்களை நடத்துதல், பள்ளியளவில் சுற்றுச்சூழல் சார்ந்த பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, வினாடி வினாப் போட்டிகளை நடத்தி மாணவர்களை ஊக்கப்படுத்தி பரிசுகளை வழங்குதல்; பள்ளியளவில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களை மாவட்ட அளவில் சுற்றுச்சூழல் துறை நடத்தும் விழிப்புணர்வுப் போட்டிகளில் பங்கேற்கச் செய்து, அவற்றில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.2,000, இரண்டாம் பரிசாக ரூ.1,000, மூன்றாம் பரிசாக ரூ.500 மற்றும் சான்றிதழ்களை வழங்குதல்; மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்களை, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஒருநாள் சுற்றுலா அழைத்துச் செல்லுதல் போன்ற பணிகளை, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சுற்றுச்சூழல் துறையின் வழிகாட்டுதல்படி செயல்படுத்தி வருகின்றனர்.
மாவட்டம் ஒன்றுக்கு 250 பள்ளிகள் வீதம் தமிழகத்தின் 32 வருவாய் மாவட்டங்களில் உள்ள 8,000 பள்ளிகளில் தற்போது, தேசியப் பசுமைப்படை மன்றங்கள் இயங்கி வருகின்றன. 69 கல்வி மாவட்டங்களில் உள்ள இந்த மன்றங்களை, சுற்றுச்சூழல் துறை நியமித்துள்ள மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் நிர்வகிக்க, மாவட்டக் கல்வி அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.
தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் துறை இயக்குநரை உறுப்பினர் செயலராகக் கொண்ட தமிழ்நாடு சுற்றுச்சூழல் மேலாண்மை முகமை தான் (Environment management Agency of Tamil Nadu-EMAT) தமிழ்நாட்டின் செயல் (Nodal Agency) முகமையாகும். ஒவ்வொரு பள்ளியிலும் தேசியப் பசுமைப்படையில் 40 மாணவர்களும், ஒருங்கிணைப்பாளராக ஆசிரியர் ஒருவரும் உள்ளனர். பள்ளி வளாகத்தைத் துாய்மையாகவும் பசுமையாகவும் காப்பது இவர்களின் பொறுப்பாகும். பள்ளியளவில் விழிப்புணர்வைப் பெற்ற மாணவர்கள், ஐந்து குழுக்களாகப் பிரிந்து செயல்படுகிறார்கள்.
இவர்களின் பணிகள்
சுற்றுச்சூழலையும் அதன் சிக்கல்களையும் பள்ளிச் சிறுவர்கள் புரிந்துகொள்ளச் செய்வது. சுற்றுச்சூழல் கல்வியைப் பள்ளி மாணவர்களுக்கு அளிப்பது. சமுதாயத்தில் சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பாலமாக இருக்கும் வகையில் குழந்தைகளுக்குப் பயிற்சியளிப்பது. சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி சார்ந்த இலக்கை அடையும் வகையில் குழந்தைகள் பங்கேற்க வழிவகை செய்வது.
தினமும் நாம் சந்தித்து வரும் சுற்றுச்சூழல் சிக்கல்களைப் பற்றி, குழந்தைகள் நேரடியாகத் தெரிந்துகொள்ளச் செய்வது மற்றும் அவற்றுக்குத் தகுந்த தீர்வை நோக்கிய சிந்தனையை அவர்களிடம் ஏற்படுத்துவது. குழந்தைகள் வாழும் பகுதிகளில் சூழல் தொடர்புடைய நற்செயல்களில் அந்தக் குழந்தைகளையே ஈடுபடுத்துவது.
பள்ளிகளின் நடவடிக்கைகள்
மரக்கன்றுகளை நட்டுப் பராமரித்தல். பள்ளி வளாகத்தைத் தூய்மையாக வைத்தல். நெகிழி இல்லாத இடமாக, பள்ளி வளாகத்தையும் சுற்றுப்புறத்தையும் வைத்திருத்தல். மாணவர்களிடம் சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்துதல். பள்ளிகளில் மூலிகைத் தோட்டம், காய், கனித் தோட்டங்களை அமைத்துப் பராமரித்தல். பசுமை நாட்களைப் பள்ளியளவில் கொண்டாடுதல். அருகிலுள்ள சுற்றுச்சூழல் மையங்களைப் பார்வையிடும் வாய்ப்புகளை மாணவர்களுக்கு ஏற்படுத்தித் தருதல். திடக்கழிவு மேலாண்மை, நீர் மேலாண்மை போன்ற பணிகளைப் பள்ளிகளில் செயல்படுத்துதல். சுற்றுச்சூழல் சார்ந்த போட்டிகளில் மாணவர்களைப் பங்கேற்கச் செய்தல்.
பள்ளி ஒருங்கிணைப்பாளரின் செயல்பாடுகள்
இந்தத் திட்டத்தில் மாணவர்களை முழுமையாகப் பங்கேற்கச் செய்தல். பயிற்சி வகுப்புகளை அவற்றுக்கான பாட இடைவேளைகளில் வாரந்தோறும் நடத்துதல். பசுமை நாள், சுற்றுச்சூழல் நாளை, பள்ளியளவிலும், அதைச் சார்ந்த இருப்பிடப் பகுதியிலும், பேரணிகளை நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திட்ட அறிக்கையைத் தயாரித்துச் செயல்படுத்துதல். பசுமைப்படை சார்ந்த மாவட்ட, கல்வி மாவட்ட விழிப்புணர்வுப் பயிற்சிகளில் பங்கு பெறுதல். களப்பயணங்களுக்கு மாணவர்களை அழைத்துச் செல்லுதல். சுற்றுச்சூழல் போட்டிகள், கண்காட்சிகளை நடத்துதல். சுற்றுச்சூழல் சார்ந்த நாளிதழ்கள், வார இதழ்கள், நூல்களை வாங்கி, மாணவர்களைப் படிக்கச் செய்தல்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளரின் செயல்பாடுகள்
பள்ளிகளைப் பார்வையிட்டுச் செயல் திட்டத்தை ஆய்வு செய்தல். மாதந்தோறும் மாவட்ட அளவில் கூட்டம் நடத்துதல். சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் போட்டிகளை நடத்திப் பரிசுகளை வழங்குதல். மாவட்ட, மாநில அளவில் நடத்தப்படும் கருத்தரங்கு, பயிற்சிகள், ஆய்வுக் கூட்டங்களில் பங்கேற்று அவற்றை மாவட்ட அளவில் செயல்படுத்துதல்.
இன்றைய மாணவர்கள் தான் நாளைய இந்தியாவின் குடிமக்களாக இருக்கப் போகிறார்கள். அவர்களுக்கு இப்போதே மரம் வளர்த்தல், மழைநீரைச் சேமித்தல், நிலத்தடி நீரைப் பாதுகாத்தல், நீரைச் சிக்கனமாகச் செலவழித்தல், நெகிழிப் பொருள்களைத் தவிர்த்தல் போன்ற, சுற்றுச்சூழல் சார்ந்த செய்திகளைக் கற்றுத் தந்தால் அவை பசுமரத்து ஆணியைப் போல அவர்களின் உள்ளங்களில் பதிந்து விடும்.
உள்ளத்தில் இருப்பது தான் செயலாக மாறும் என்பதால், அவர்கள் சூழலைக் காக்கும் நல்ல குடிமக்களாக இருப்பார்கள். இந்த அடிப்படையில் இந்தியா முழுவதும் செயல்படுத்தப்படும் தேசியப் பசுமைப்படை தமிழ்நாட்டில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ஆகியோரின் சீரிய ஒத்துழைப்பில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது’’ என்றார்.
மு.உமாபதி