கால்நடை மருத்துவத்தில் ஆவாரை!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2019

வாரைப் பூத்திருக்கச் சாவாரைக் கண்டதுண்டோ என்னும் பழமொழி இதன் சிறப்பை உணர்த்தும். பழங்காலம் முதல் பல்வேறு காரணங்களுக்காக இதன் இலை, தண்டு, பட்டை, வேர், உலர் பூ, உலர் இலை மற்றும் பழுக்காத இளம் காய்கள் மக்களுக்குப் பயன்பட்டு வருகின்றன. முக்கியமாக, இதன் மருத்துவக் குணங்களுக்காக, ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தில் ஆவாரை பயன்படுத்தப்படுகிறது.

சாகுபடி முறை

பொதுவாக இச்செடி சாகுபடி செய்யப்படுவதில்லை. தரிசு நிலங்களில் தானாகவே வளர்ந்து கிடக்கும். செம்மண், சரளை மண், களிமண், வண்டல் மண் போன்ற அனைத்து மண்ணிலும் வளரும். மண்ணின் கார அமிலத் தன்மை 7 முதல் 8.5 வரை இருக்கலாம்.  ஆனால், நீர் தேங்கியுள்ள நிலத்தில் இதன் முளைப்பும் வளர்ச்சியும் பாதிக்கும். அதிக மழை மற்றும் அதிகக் குளிருள்ள பகுதிகளிலும் இது சரியாக வளர்வதில்லை. மிதமான, வறண்ட வெப்ப நிலையில் நன்கு வளரும். நன்கு முதிர்ந்து உலர்ந்த விதைகளை விதைக்கலாம். முறையான விதைப்புக்கு ஒரு எக்டருக்கு 2 கிலோ விதைகள் போதும்.

நிலத் தேர்வு  

அதிக மழை மற்றும் நீர் தேங்காத இடத்தைத் தேர்வு செய்து நன்கு உழ வேண்டும். கடைசி உழவுக்கு முன் 2-4 டன் தொழுவுரத்தை இட வேண்டும். எக்டருக்கு 80:40:40 கிலோ தழை, மணி, சாம்பல் சத்தை இடலாம். மணிச்சத்தையும் சாம்பல் சத்தையும் கடைசி உழவுக்கு முன் முழுமையாக இட வேண்டும். தேவையானால் கடைசி உழவின் போது 5% அல்டிரின் மருந்தைத் தூவினால், இளம் செடிகளை எறும்புத் தொல்லையில் இருந்து காக்கலாம்.

விதைத்தல்

சனவரி பிப்ரவரி அல்லது ஜுன் ஜுலையில் விதைக்கலாம். 3.5க்கு 2.5 மீட்டர் பரப்பில் பாத்திகளை அமைத்து 45 செ.மீ. இடைவெளியில் விதைக்க வேண்டும். விதைக்கும் போது நிலத்தில் ஈரமிருக்க வேண்டும். இல்லையெனில் பாசனம் செய்து விதைக்க வேண்டும். விதைகளை 8-10 மணி நேரம் குளிர்ந்த நீரில் ஊற வைத்து, ஒரு கிலோ விதைக்கு 25 கிராம் திரம் அல்லது அக்ரசான் வீதம் கலந்து விதைக்க வேண்டும். இதனால், முளைப்புத் திறன் கூடும்.

பாசனம்

ஆவாரைக்கு அடிக்கடி பாசனம் தேவைப்படாது. விதைத்ததும் ஒருமுறையும், மண்ணின் தன்மையைப் பொறுத்து மூன்றாம் நாளும் பாசனம் செய்ய வேண்டும். பின்பு  வாரம் ஒருமுறை பாசனம் கொடுக்க வேண்டும். செடிகளின் பின்பருவ வளர்நிலையில் வேர்கள் ஆழமாகச் சென்ற பிறகு 15-20 நாட்களுக்கு ஒருமுறை பாசனம் செய்தால் போதும். வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் நீர் தேங்காமல் பாதுகாக்க வேண்டும்.

பயிர்ப் பாதுகாப்பு

பொதுவாக, ஆவாரையில் பயிர்ப் பாதுகாப்பு அவ்வளவாகச் செய்யப்படுவதில்லை. சாற்றை உறிஞ்சும் பூச்சிகள் தென்பட்டால் வேப்பங்கொட்டைக் கரைசலைத் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

அறுவடை

90 நாளில் அறுவடை செய்யலாம். அடுத்த இரண்டு அறுவடைகளை 30-35 நாளில் மேற்கொள்ளலாம். இறவையில் ஒரு எக்டரில் 2,000 கிலோ உலர் இலைகள் மற்றும் 800 கிலோ விதைகள் கிடைக்கும். அறுவடை செய்த இலை மற்றும் விதைகளை 7-10 நாட்கள் நிழலில் உலர்த்தி, 20% ஈரப்பதத்தில் சேமிக்க வேண்டும்.

கால்நடைகளுக்கான பயன்பாடு

அசைபோடும் விலங்குகளில் செரிமானச் சக்தியைத் தூண்டவும், கழிச்சல் நோயைக் கட்டுப்படுத்தவும் ஆவாரை பயன்படுகிறது. பொதுவாகக் கால்நடைகளில் நோயெதிர்ப்புச் சக்தியைத் தூண்டும் மூலிகையாக ஆவாரை உள்ளது. ஆடு மாடுகள் செரிமானச் சிக்கலால் பாதிக்கப்படும் போது, இளம் ஆவாரை இலைகளைச் சிறிதளவு சுண்ணாம்புடன் சேர்த்து அரைத்து, தீவனத்தில் கலந்து கொடுக்கலாம். 

மாடுகளைத் தாக்கும் வெப்ப அயர்ச்சியைப் போக்க, ஆவாரம் பூக்களுடன் வல்லாரை, வெள்ளறுகு, சீரகம் ஆகியவற்றைக் கலந்து இடித்து, புல் அல்லது மற்ற பசுந்தீவனத்துடன் சேர்த்துக் கொடுக்கலாம். ஆவாரம் தண்டின் பட்டையை எடுத்து, நீரிலிட்டுக் கொதிக்க வைத்துக் கொடுத்தால், மாடுகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்குக் கட்டுப்படும்.

குறிப்பாக, தென் மாவட்டங்களில் உள்ள பழங்குடி மக்கள், பட்டையைக் காய்ச்சிக் கசாயத்தை எடுத்து, பூண்டு, மிளகுப் பொடியுடன் கலந்து மாடுகளுக்குக் கொடுக்கின்றனர். இது மாடுகளில் மலச்சிக்கல் ஏற்படும் போது சிறந்த பேதி மருந்தாகப் பயன்படுகிறது. மேலும், இதன் இலையை அரைத்துத் தோலில் தடவினால், ஆடு மாடுகளில் இருக்கும் வெளிப்புறப் புண்கள் ஆறிவிடும்.

மேலும், உருண்டைப்புழு, நாடாப்புழு, தட்டைப் புழுக்களைக் கட்டுப்படுத்தும் மருந்தாகவும், கல்லீரல் தொடர்பான நோய்களைக் கட்டுப்படுத்தி, அதன் இயக்கத்தைக் கூட்டும் மூலிகை மருந்தாகவும் ஆவாரை பயன்படுகிறது.

எனவே, மருத்துவக் குணமுடைய ஆவாரையைக் கொண்டு நாம் வளர்க்கும் கால்நடைகளுக்கு முதலுதவிச் சிகிச்சையைச் செய்யப் பழகிக் கொள்ளுதல் அவசியம்.


DAISY

முனைவர் மா.டெய்சி,

முனைவர் ந.அகிலா, வேளாண்மை அறிவியல் நிலையம்,

முனைவர் கி. செந்தில்குமார், மருத்துவர் எம்.சக்திப்பிரியா,

கால்நடை மருத்துவக் கல்லூரி, நாமக்கல்-637002.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!