செய்தி வெளியான இதழ் : ஜனவரி 2023
கேமல் என்னும் சொல், அரேபிய மொழியில் இருந்து வந்தது. இந்தச் சொல்லுக்கு அழகு என்று பொருள். ஒட்டகம் பல பெயர்களில் அழைக்கப்பட்டாலும், இறைவனின் பரிசு என்று கூறுவதையே அரேபியர்கள் பெருமையாகக் கொள்கிறார்கள். இதை, அதிசய விலங்கு என்று கூறக் காரணம், நீரின்றி, உணவின்றி, பல மாதங்கள் வாழக் கூடியது. இது, பாலைவனத்தில் வாழும் தாவர உண்ணி. குட்டிகளை ஈன்று பாலூட்டும் வகையைச் சார்ந்த வீட்டு விலங்கு. ஒட்டகம், மக்களுடனான தொடர்பு, சுமார் 5,000 ஆண்டுகளுக்கும் முந்தையது என்று கருதப்படுகிறது.
பாக்ட்ரியன், ட்ரோமெடரி, காட்டு பாக்ட்ரியன் என, மூன்று வகை ஒட்டகங்கள் உள்ளன. காட்டு பாக்ட்ரியன் ஒட்டகங்கள் குறைவாகவே உள்ளன. ஒட்டகங்கள் 30 முதல் 50 ஆண்டுகள் வரை வாழும். உலகில் ஒரு கோடியே 40 இலட்சத்துக்கும் மேற்பட்ட ஒட்டகங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தியாவில் உள்ள ஒட்டகங்களில் 80 சதவீத ஒட்டகங்கள் இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளன.
உதடுகள்
ஒட்டகத்தின் உதடுகள் ரப்பரைப் போன்ற அமைப்பில் இருக்கும். அதனால் தான், குத்தும் முட்கள் உள்ள சப்பாத்திக்கள்ளி, கற்றாழை போன்றவற்றையும் அதனால் உண்ண முடிகிறது. இந்தச் சிறப்பு உதட்டமைப்பு, நாக்கை நீட்டாமலே மேய உதவுகிறது. அவசரமாகச் சாப்பிட்டதை ஆற அமர நிதானமாய் மீண்டும் வாய்க்குக் கொண்டு வந்து அசை போடும்.
உடல் அமைப்பு
முழுமையாக வளர்ந்த ஒட்டகம் 3 மீட்டர் நீளம், 2 மீட்டர் உயரம் இருக்கும். தூசி மற்றும் வெய்யிலில் இருந்து கண்களைக் காப்பதற்காக, ஒட்டகங்களுக்கு மூன்று இமைகள் உள்ளன. பாக்ட்ரியன் ஒட்டகங்கள் 300 முதல் 1,000 கிலோ வரை இருக்கும். ட்ரோமெடரி ஒட்டகங்களின் எடை 300 முதல் 600 கிலோ வரை இருக்கும். மணிக்கு 5 கிலோ மீட்டர் வேகத்தில் ஒரு நாளைக்கு 50 கி.மீ. பயணம் செய்யும். மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் ஓடும். 200 கிலோ எடையைச் சுமந்து கொண்டு 50 கிலோ மீட்டர் வரை நடக்கும். ஒட்டகத்தால் 375 முதல் 600 பவுண்டுகள் வரை சுமக்க முடியும்.
தனித்தன்மை
ஒட்டகங்கள் வாரக்கணக்கில் தண்ணீர் அருந்தாமல் இருக்கும். பிறகு, 100 லிட்டர் நீரைக் குடிக்கும். ஒட்டகத்தின் வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். கடும் வெப்பத்திலும் 8 நாட்கள் வரை நீரின்றி, உணவின்றி வாழும். கடும் குளிர் காலத்தில் உணவின்றி, நீரின்றி ஆறு மாதம் வரையிலும் கூட இருக்கும். பல்லாயிரம் ஆண்டுகளாக மக்களின் போக்குவரத்தில் ஒட்டகங்கள் பயன்படுகின்றன. பெரும்பாலான நாடுகளில் பொதி சுமக்கவும், வண்டி இழுக்கவும் உதவுகின்றன. பாலைவனப் பகுதிகளில் இராணுவத்திலும் பயன்படுகின்றன.
தான் குடிக்கும் நீரில் குறிப்பிட்ட அளவு நீரை முதலில் இரத்தச் சிவப்பு அணுக்களுக்கு அனுப்பும். அதற்காக இரத்தச் சிவப்பணுக்கள் அவற்றின் உண்மையான அளவை விட 2.4 மடங்கு விரிந்து கொடுக்கும். குட்டிகளை ஈன்று பாலூட்டும் எல்லா விலங்குகளுக்கும் இரத்தச் சிவப்பணுக்கள் வட்டமாக இருக்கும். ஆனால், ஒட்டகத்தின் இரத்தச் சிவப்பணுக்கள் முட்டை வடிவத்தில் இருக்கும்.
மாதக்கணக்கில் நீர் அருந்தாமல் இருக்கும் ஒட்டகம், நீரைக் கண்டால் ஒரே மூச்சில் 100 லிட்டர் நீரைக் குடித்து விடும். இப்படிக் குடித்துப் பத்து நிமிடங்களில் அதன் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்துக் கிடைத்து விடும். அப்போது சிவப்பணுக்களின் சவ்வுப்படலம் 240 சதம் வரையில் விரிந்து கொடுக்கும். உடலில் 40 சதம் நீர்ச்சத்துக் குறைந்தாலும், எவ்விதப் பாதிப்பும் இல்லாமல் வாழும் சிறப்பைக் கொண்டது ஒட்டகம்.
பாலைவனச் சூட்டில் கண்கள் காய்ந்து விடாமல் இருப்பதற்காக, ஒட்டகத்தின் கண்ணீர்ச் சுரப்பிகள் அதிகளவில் நீரைச் சுரந்து வைத்துக் கொள்ளும். வயிற்றில் சேமித்து வைத்திருக்கும் நீர் தீரும் நிலைக்கு வந்து விட்டால், தனது மூக்கால் மோப்பமிட்டு நீர் நிலையை அறியும் திறன் மிக்கது ஒட்டகம்.
ஆற்றல் மிக்க சிறுநீரகம்
ஒட்டகத்தின் சிறுநீரகத்தைப் போல ஆற்றல் மிக்க சிறுநீரகம் வேறு எந்த உயிரினத்துக்கும் கிடையாது. நமது சிறுநீரில் அதிகளவாக 8 சதம் தாதுக் கழிவும், 92 சதம் நீரும் இருக்கும். ஆனால், ஒட்டகத்தின் சிறுநீரில் 40 சதத்துக்கும் அதிகமாகக் கழிவும், மிகக் குறைந்த அளவில் நீரும் இருக்கும். இப்படிக் குறைந்த நீரைக் கொண்டு அதிகக் கழிவை வெளியேற்றும் ஆற்றல் மிக்கது ஒட்டகம்.
இராணுவப் பயன்பாடு
பண்டைக் காலத்தில் குதிரைப் படையைப் போல ஒட்டகப் படையும் பல நாடுகளில் இருந்துள்ளது. கி.மு. 1200 இல் முதல் ஒட்டகச் சேணம் கண்டுபிடிக்கப்பட்டது. அன்று முதல் இரட்டைத் திமில் ஒட்டகங்களில் பயணிக்க முடிகிறது. ஒட்டகப்படை, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளின் எல்லைப் பாதுகாப்பிலும், இந்திய எல்லைப் பாதுகாப்பிலும் பயன்படுத்தப்பட்டு வந்தது. மேலும், இராணுவத்தில் குதிரைகள் மற்றும் கோவேறு கழுதைகளுக்கு மாற்றாகச் சுமைகளைத் தூக்கவும் ஒட்டகங்கள் பயன்பட்டன.
பால்
பல நாட்கள் வெய்யிலிலேயே நின்றாலும் கூட, அதனால் பால் கொடுக்க இயலும். கடுமையான கோடையில் கூட, குறைந்தளவு நீரைக் குடித்து விட்டு, தன் குட்டிக்கும் பாலைக் கொடுத்து, வளர்ப்பாளருக்கும் 15-20 லிட்டர் பாலைக் கொடுத்து விடும். தொடர்ந்து பத்து நாட்கள் வரை நீரைக் குடிக்காத நிலையிலும், அதே தரத்தில், அதே அளவில் பாலைக் கொடுக்கும். பசும்பாலை விட ஒட்டகப் பாலில் மூன்று மடங்கு வைட்டமின் சி அதிகமாக இருக்கும்.
ஒட்டகப் பால், பாலைவன நாடோடி பழங்குடி மக்களின் முக்கிய உணவுகளில் ஒன்றாகும். ஒட்டகப் பாலில் வைட்டமின்கள், தாதுகள், புரதம் மற்றும் நோயெதிர்ப்பு ஆற்றல் அதிகமாக இருக்கும். மேலும், பசும்பாலுடன் ஒப்பிடும் போது, கொழுப்பு மற்றும் லாக்டோஸ் குறைவாகவும், பொட்டாசியம், இரும்பு, வைட்டமின் சி ஆகியன அதிகமாகவும் இருக்கும். நீரிழிவு உள்ளோர்க்கு ஒட்டகப் பால் சிறந்தது.
இறைச்சி
ஒட்டக இறைச்சி பல நூற்றாண்டுகளாக உணவாகப் பயன்பட்டு வருகிறது. மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்தோர், ஒட்டக இறைச்சியை உணவாகக் கொள்கின்றனர். அரேபிய நாட்டில் திருமணங்களின் போது, ஒட்டக இறைச்சி வறுவல், சிறப்பு உணவுப் பொருளாகப் பரிமாறப்படுகிறது. மேலும், சோமாலியா, சவூதி அரேபியா, எகிப்து, சிரியா, லிபியா, சூடான், கசகஸ்தான் எத்தியோப்பியா போன்ற நாடுகளில் உள்ள மக்களும் ஒட்டக இறைச்சியை உணவாகக் கொள்கின்றனர்.
முனைவர் சு.உஷா, உதவிப் பேராசிரியர், கால்நடை உற்பத்தி மேலாண்மைத் துறை, சென்னைக் கால்நடை மருத்துவக் கல்லூரி, சென்னை – 600 007.