முள் கத்தரிக்காய், குண்டு மிளகாய்க்குப் புவிசார் குறியீடு!

வேலூர் மாவட்டத்தில் விளையும் முள் கத்தரிக்காய் மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்தில் விளையும் குண்டு மிளகாய்க்கு, புவிசார் குறியீடு வழங்கப்பட்டு உள்ளது.

வேலூர் மாவட்டம், அணைக்கட்டுப் பகுதியில் உள்ள இலவம்பாடி, ஒடுக்கத்தூர், குருவ ராஜபாளையம் ஆகிய ஊர்களில், முள் கத்தரிக்காய் பயிரிடப்பட்டு வருகிறது.

இந்தக் கத்தரிக்காயின் காம்புடன் கூடிய பச்சை இதழ்களில் ஆங்காங்கே முட்கள் இருப்பதால், இது முள் கத்தரிக்காய் எனப்படுகிறது.

இது சமைத்து உண்பதற்கு மிகவும் ருசியாக இருக்கும். குறிப்பாக, பிரியாணி போன்ற இறைச்சி வகை உணவுகளில், தொட்டுக் கொள்ள, இந்தக் காயைத் தொக்காகத் தயாரித்து வைப்பார்கள்.

எனவே, இந்தக் கத்தரிக் காய்க்குப் புவிசார் குறியீடு வழங்க வேண்டுமெனக் கேட்டிருந்த நிலையில், 25.02.2023 அன்று, இதற்குப் புவிசார் குறியீடு வழங்கப்பட்டு உள்ளது.

அதைப்போல, இராமநாதபுரம் மாவட்டத்தின் ஆர்.எஸ்.மங்களம், பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி மற்றும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சில கிராமங்களில் விளையும், இராமநாதபுரம் முண்டு வற்றல் எனப்படும், காரமான குண்டு மிளகாய்க்கும் புவிசார் குறியீடு வழங்கப்பட்டு உள்ளது.

குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் விளையும் அல்லது உற்பத்தி செய்யப்படும், தனித்தன்மை மிக்க பொருள்களின் அடையாளங்களைப் பாதுகாக்கும் வகையில், இந்தியாவில் 1999 ஆம் ஆண்டு புவிசார் குறியீடுகள் மற்றும் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது.

இது, 2003 ஆண்டில் நடைமுறைக்கு வந்தது. இப்படிப் புவிசார் குறியீடு பெற்றிருக்கும் பொருள்களை மற்ற பகுதிகளில் உற்பத்தி செய்து விற்பதைத் தடுக்க முடியும்.

மதுரை சுங்குடிச் சேலை, மதுரை மல்லி, காரைக்குடி கண்டாங்கிச் சேலை, காஞ்சிபுரம் பட்டு, சேலம் மாம்பழம், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, மாமல்லபுரம் சிற்பங்கள், தஞ்சாவூர் பாணி ஓவியங்கள், பழனி பஞ்சாமிர்தம், கோவில்பட்டி கடலை மிட்டாய் என, இந்தியாவில் சுமார் 420 பொருள்களுக்குப் புவிசார் குறியீடு வழங்கப்பட்டு உள்ளது.

இவ்வகையில், இப்போது வேலூர் மாவட்டத்தில் விளையும் முள் கத்தரிக்காய்க்கு, இராமநாதபுரம் மாவட்டத்தில் விளையும் குண்டு மிளகாய்க்கு, புவிசார் குறியீடு வழங்கப்பட்டு உள்ளது.


பசுமை

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!