தொற்று நோய் என்பது, ஒரு மாட்டிலிருந்து மற்ற மாடுகளுக்கு நேர்முகமாக அல்லது மறைமுகமாகப் பரவி அதிகளவில் பொருளாதார இழப்பு மற்றும் இறப்பை ஏற்படுத்துவது ஆகும்.
தொற்று நோய்கள் வெவ்வேறு வகையான கிருமிகளால் ஏற்படுகின்றன. ஒரு தொற்று நோய் ஏற்படும் போது பொதுவான சில நோய் அறிகுறிகள் தென்படும்.
ஒவ்வொரு தொற்று நோயைப் பற்றியும் தெரிந்து கொள்வதற்கு முன், பொதுவான நோய் அறிகுறிகளைத் தெரிந்து கொள்வது அவசியமாகும்.
அவைகளாவன:
நோயுற்ற கறவை மாடுகளில் அதிகளவில் காய்ச்சல் இருக்கும். மாடுகள் மிகவும் சோர்ந்து, ரோமம் சிலிர்த்துக் காணப்படும். அசை போடாது, தீவனம் எடுக்காது, பால் வெகுவாகக் குறைந்து விடும். கண்கள் சிவந்தும், நீர் வடிந்து கொண்டும் இருக்கும்.
சில சமயம் மூச்சுத் திணறல் ஏற்படும். மூக்கு வறண்டு இருக்கும். சில சமயம் வெடிப்பு ஏற்படும்.
மூக்கு, வாய் போன்றவற்றில் நீர் வடியும். சில சமயம் துர்நாற்றத்துடன் கூடிய சளி வடியும். சாணம் இறுகிக் கட்டிக் கட்டியாகவோ அல்லது இளகிக் கழிச்சலாகவோ வெளிவரும். அடிக்கடி சிறுநீர் கழிக்கும். அதிக எண்ணிக்கையில் பண்ணையிலுள்ள மாடுகள் ஒரே சமயத்தில் பாதிக்கப்படும்.
கோமாரி நோய்
கால் காணை, வாய்க் காணை என்றும், கால் சப்பை வாய்ச் சப்பை என்றும், இந்நோய்க்கு வேறு பெயர்களும் உண்டு. இதை உருவாக்கும் வைரஸ், அதிக நாட்கள் உயிருடன் வாழும். இந்நோய்க் கிருமியில் ஏழு வகைகள் உள்ளன.
அவற்றுள் நான்கு வகைகள் நம் நாட்டில் உள்ளன. இவை வெவ்வேறு விதங்களில் நோயை ஏற்படுத்தும்.
இப்போதுள்ள தடுப்பூசி மருந்து முழு நோய் எதிர்ப்புத் திறனை அளிப்பதில்லை. நோயெதிர்ப்புத் திறன் காலமும் நான்கு மாதங்கள் தான். எனவே, நான்கு மாதத்துக்கு ஒருமுறை தடுப்பூசியைப் போட வேண்டும்.
கோமாரியால் அதிகளவில் உயிரிழப்பு இல்லை யென்றாலும், பொருளாதார இழப்பு ஏற்படும். இந்நோய், தீவனம், நீர், காற்று மூலம் பரவும். காற்று வீசும் திசையில் காற்றுத் துகள்கள் மூலம் சுமார் 300 கிலோ மீட்டர் வரை இந்நோய் பரவும்.
நோய் அறிகுறிகள்
தொடக்கத்தில் 41 டிகிரி செல்சியஸ் வரை காய்ச்சல் இருக்கும். வாயிலிருந்து சளி போன்ற நுரையுடன் கெட்டியான உமிழ்நீர், கயிற்றைப் போலத் தொங்கிக் கொண்டு இருக்கும். நோயுற்ற மாடுகள், தொடர்ந்து வாயைச் சப்பியபடி இருக்கும்.
வாயைத் திறந்து பார்த்தால் நாக்கின் மேல்புறம், மேலண்ணம், வாயில் உட்பகுதி முதலியவற்றில் மெல்லிய, நீர்க் கோர்த்த கொப்புளங்கள் இருக்கும். ஓரிரு நாட்களில் ஆங்காங்கே கொப்பளங்கள் தொங்கிக் கொண்டிருக்கும். இதனால் உண்ண முடியாத நிலை ஏற்படும்.
கால் குளம்புகளுக்கு இடையிலுள்ள தோல் மற்றும் குளம்புகளுக்குச் சற்று மேலேயுள்ள தோலில் புண்கள் உண்டாகும். வலிப்பதால் மாடுகள் நடக்க அஞ்சும்.
நாளடைவில் குளம்புகள் கழன்று விழவும் நேரிடும். நோயுற்ற பசுக்களில் பாலருந்தும் கன்றுகள் இறந்து போகும். மடி, காம்புகளில் கொப்புளங்கள் தோன்றிப் புண்களாக மாறும்.
தடுப்பும் பாதுகாப்பும்
கன்றுகளுக்கு 8 வாரத்தில், 12 வாரத்தில், 16 வாரத்தில் என மூன்று முறை கோமாரி நோய்த் தடுப்பூசியைப் போட வேண்டும். பின்பு, நான்கு மாதத்துக்கு ஒருமுறை கோமாரித் தடுப்பூசியைத் தவறாமல் போட வேண்டும். நோய் ஏற்படும் காலத்துக்கு ஒரு மாதத்துக்கு முன்பு தடுப்பூசியைப் போட வேண்டும்.
சோடியம் ஹைட்ராக்சைட் மற்றும் பொட்டாசியம் ஹைட்ராக்சைட் கிருமி நாசினியை 3-4% கரைசலாக்கித் தரையில் தெளிக்க வேண்டும். சோடியம் சல்பனேட் பொடியைத் தரையில் தூவலாம். பிளீச்சிங் பொடியையும் தரையில் தூவி இக்கிருமிகளைக் குறைக்கலாம்.
நோயுற்ற மாடுகளைத் தனியாக வைத்துச் சிகிச்சையளிக்க வேண்டும். நல்ல மாடுகளுடன் தொடர்பு இருக்கக் கூடாது. நோயுற்ற மாட்டின் பாலை, கன்றுகளுக்குத் தரக்கூடாது. தொழுவத்தில் நோய்க் கிருமிகள் நெடுநாட்கள் உயிருடன் இருக்கும் என்பதால், கிருமி நாசினியால் சுத்தம் செய்வதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும்.
நோய்ப் பரவல் காலத்தில், மாடுகளைச் சந்தையில் வாங்கவோ விற்கவோ கூடாது.
மூலிகை மருத்துவம்: வாய்வழி மருந்து
தேவையான பொருள்கள்: சீரகம் 10 கிராம், வெந்தயம் 10 கிராம், மிளகு 10 கிராம், மஞ்சள் தூள் 10 கிராம், பூண்டு 4 பல், தேங்காய்த் துருவல் முழுத் தேங்காய். இந்தப் பொருள்கள், ஒரு மாடு அல்லது நான்கு வெள்ளாடு அல்லது செம்மறி ஆடுகளுக்கானவை.
செய்முறை: சீரகம், வெந்தயம், மிளகு ஆகியவற்றை ஒரு மணி நேரம் ஊற வைத்து அரைக்க வேண்டும். பின்பு, மஞ்சள் தூள், பூண்டு, வெல்லம் சேர்த்து மீண்டும் நன்றாக அரைத்து, தேங்காய்த் துருவலைச் சேர்த்து நன்றாகக் கலந்து, தினமும் 3 முறை வீதம் 5 நாட்களுக்கு வாயில் நிதானமாகத் தடவி விட வேண்டும்.
பூச்சு மருந்து
தேவையான பொருள்கள்: நல்லெண்ணெய் 1 லிட்டர், பூண்டு 10 பல், மஞ்சள் தூள் 10 கிராம், துளசி இலைகள் 10, குப்பைமேனி இலைகள் 10, மருதாணி இலைகள் 10, வேப்பிலைகள் 10.
செய்முறை: நல்லெண்ணெய் தவிர மீதமுள்ள பொருள்களை நன்கு அரைக்க வேண்டும். பிறகு இதை நல்லெண்ணெயில் கொதிக்க வைத்து ஆற விட்டு, கால்களில் உள்ள புண்கள் ஆறும் வரை தடவி வர வேண்டும்.
மரு.ச.இளவரசன், முனைவர் தா.லூர்து ரீத்தா, மரு.அ.ஷீபா, மரு.ரா. ஜோதிபிரியா, தானுவாஸ் மண்டல ஆராய்ச்சி மற்றும் கல்வி மையம், புதுக்கோட்டை.