செய்தி வெளியான இதழ்: 2014 மே.
மண்ணையும் மனிதனையும், மற்றுமுள்ள உயிர்களையும் வாழ வைக்கும் வல்லமை கொண்டவை மரங்கள். இந்த மரங்களில் சிலவகை மலைகளில் வளரும் தன்மை மிக்கவை. சிலவகை மரங்கள் நீர்வளம் உள்ள இடங்களில் வளரும். சிலவகை மரங்கள் நீர்வளம் குறைந்த தரிசு நிலங்களில் வளர்ந்து பயன் தரும்.
தரிசு நிலங்களில் மூங்கில், சவுக்கு, முள்ளில்லா மூங்கில், குமிழ், கருவேல், வேம்பு, இலவம், தீக்குச்சி மரம், புளியமரம், முந்திரி, சவுண்டல் போன்ற மரங்கள் நன்கு வளரும்.
இவற்றில், மூங்கில் மரத்தின் சாகுபடி குறித்தும் அதன் சிறப்புகள் குறித்தும் முதலில் காண்போம். இது, மற்ற மரங்களை விட வேகமாக வளரக் கூடியது. நடவு செய்த நாளில் இருந்து நான்கைந்து ஆண்டுகளிலேயே பலனுக்கு வரக்கூடியது. குறைந்த முதலீடு போதுமானது. சாதாரண நிலங்களிலும் நன்றாக வளரும். மண்ணரிப்பைத் தடுக்கும். வேளாண் காடுகளுக்கு ஏற்ற மரம். மூங்கிலின் எல்லாப் பாகங்களுமே பயன் மிக்கவை.
இதை சாகுபடி செய்யும் முறையைப் பற்றிப் பார்ப்போம். பருவமழை தொடங்குவதற்கு முன் நிலத்தை நன்றாக உழ வேண்டும். பிறகு, பயிருக்குப் பயிர் மற்றும் வரிசைக்கு வரிசை 5 மீட்டர் அல்லது 6 மீட்டர் இடைவெளியில் குழிகளை எடுக்க வேண்டும். குழியின் அளவு நீளம், அகலம், ஆழம் ஒரு அடி இருக்க வேண்டும். அடுத்து, ஒவ்வொரு குழியிலும் 10 கிலோ தொழுவுரம், 50 கிராம் பாஸ்போ பாக்டீரியா, 50 கிராம் வேம், 25 கிராம் அசோஸ்பயிரில்லம், 50 கிராம் டிஏபி, 50 கிராம் பொட்டாஷ் ஆகியவற்றைக் கலந்து நிரப்ப வேண்டும். மழை பெய்து குழிகள் நன்றாக நனைந்ததும் மூங்கில் நாற்றுகளை நட வேண்டும்.
மூங்கில் நாற்றுகள் வளரத் தொடங்கியதும் ஆண்டுதோறும் குழிக்கு 15 கிலோ தொழுவுரம், 100 கிராம் டிஏபி, 50 கிராம் பொட்டாஷ் உரங்களைத் தூரைச் சுற்றி இட்டு வந்தால் நிறையப் போத்துகளுடன் நன்கு வளரும். மூங்கில் தூர்களை முதல் ஆண்டிலிருந்தே பராமரிக்கத் தொடங்க வேண்டும். பராமரிப்புச் சரியாக இருந்தால் கழிகள் நேராக வளர்ந்து நமக்கு அதிகமான இலாபத்தைத் தரும். பக்கக் கிளைகளையும் வளைந்த கிளைகளையும் அகற்றி விட வேண்டும். மண்ணரிப்பு ஏற்படும் பகுதிகளில் தூர்களில் மண் அணைத்தால் அதிகமான கழிகள் உண்டாகும். மேலும், முதல் ஆண்டில் மூன்று முறையும் இரண்டாம் ஆண்டில் இரண்டு முறையும் களை நிர்வாகம் செய்ய வேண்டும்.
இப்படி, மூங்கில் வளர்ப்பில் சரியான கவனத்தைச் செலுத்தினால், மூன்றாம் ஆண்டுக்குப் பிறகு அறுவடை செய்யத் தொடங்கலாம். 3-4 ஆம் ஆண்டில் ஒரு தூரிலிருந்து 5-6 கழிகளையும், 7-8 ஆம் ஆண்டில் ஒரு தூரிலிருந்து 8-10 கழிகளையும், பத்தாம் ஆண்டிலிருந்து ஒரு தூரிலிருந்து 15 கழிகளையும் அறுவடை செய்யலாம்.
இனி, குமிழ் மர சாகுபடியைப் பற்றிப் பார்ப்போம். இது, கடல் மட்டத்திலிருந்து 1,500 மீட்டர் உயரத்தில், 30-40 டிகிரி வெப்ப நிலையில் வளரும் தன்மை கொண்டது. இதற்குத் தேவையான நாற்றுகளை நாமே உற்பத்தி செய்ய முடியும். ஏப்ரல் – ஜூலைக் காலத்தில் விதைகளைச் சேகரிக்க வேண்டும். பிறகு, 10 மீட்டர் நீளம் 1 மீட்டர் அகலம் 15 செ.மீ. உயரப் பாத்திகளை அமைத்து, குமிழ் விதைகளை விதைத்தால் 10-12 நாட்களில் முளைத்து விடும். பிறகு, இந்த நாற்றுகளை நெகிழிப் பைகளுக்கு மாற்ற வேண்டும். இப்படி, 3-4 மாதம் வளர்ந்த நாற்றுகளை நடவுக்குப் பயன்படுத்தலாம்.
இதற்கு, செடிக்குச் செடி, வரிசைக்கு வரிசை 3 மீட்டர் இருக்கும் வகையில், ஒரு மீட்டர் நீளம், அகலம், ஆழத்தில் குழிகளை எடுக்க வேண்டும். குழிக்கு வேம் 50 கிராம், அசோஸ்பயிரில்லம் 25 கிராம், பாஸ்போபாக்டீரியா 25 கிராம், தொழுவுரம் 15 கிலோ ஆகியவற்றை இட வேண்டும். 15-30 நாட்களுக்கு ஒருமுறை பாசனம் செய்ய வேண்டும். குமிழ் 12 மீட்டரிலிருந்து 30 மீட்டர் உயரம் வரை வளரும். 5-6 ஆண்டுக்கு மேல் அறுவடை செய்யலாம். குமிழ் மரத்தின் இலைகள், கால்நடைத் தீவனமாகவும், மரம் தீப்பெட்டி மற்றும் தீக்குச்சிகளைத் தயாரிக்கவும் பயன்படும்.
இனி, சவுக்கு சாகுபடி குறித்துப் பார்க்கலாம். சாகுபடிக்கு ஏற்ற இரகம் எம்.டி.பி.சி.ஏ-1 ஆகும். இது, கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், தஞ்சாவூர், இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் சிறப்பாக வளரக்கூடியது. மேலும், கடல் மட்டத்திலிருந்து 1,500 மீட்டர் உயரத்தில் உள்ள இடங்கள், மழையளவு 700-2,000 மி.மீட்டர் பெய்யும் பகுதிகள், வெப்பநிலை 10-33 டிகிரி செல்சியஸ் உள்ள இடங்கள், சவுக்கு வளருவதற்கு ஏற்றவை.
சூழ்நிலைக்கு ஏற்ப, செடிக்குச் செடி, வரிசைக்கு வரிசை, ஒரு மீட்டர் இடைவெளியிலும், அல்லது இரண்டுக்கு இரண்டு மீட்டர் இடைவெளியிலும் நடவு செய்யலாம். ஒரு மீட்டருக்கு ஒரு மீட்டர் இடைவெளியில் நடவு செய்தால், நான்கு ஆண்டுகளில் ஒரு எக்டர் நிலத்தில் இருந்து 25 டன் சவுக்கையும், 2 மீட்டருக்கு 2 மீட்டர் இடைவெளியில் நடவு செய்தால், 8 ஆண்டுகளில் 80-100 டன் சவுக்கையும் அறுவடை செய்யலாம்.
மண்வளத்தை மேம்படுத்துதல், மண்ணரிப்பைத் தடுத்தல், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல், மண்ணில் அங்கக உரத்தை அதிகப்படுத்துதல், பயிர்களுக்குத் தேவையான தட்ப வெட்பத்தைக் கொடுத்தல், கால்நடைகளுக்குப் பசுந்தீவனத்தைத் தருதல், வீட்டுப் பொருள்களைத் தயாரித்தல், காகிதம் தயாரித்தல் போன்றவற்றுக்கு மரங்கள் பயன்படும்.
நீர்வளம் குறைந்து வருவதால், சாகுபடியில் இருக்கும் நிலங்களெல்லாம் கூட, தரிசு நிலங்களாக மாறி வருகின்றன. அங்கெல்லாம் குறைவான பராமரிப்பில் மனநிறைவான வருமானத்தைத் தரும் மரங்களை வளர்த்தால், நாமும் பயனடையலாம். இந்தச் சமூகமும் பயனடையும்.
முனைவர் மு.சுகந்தி, முனைவர் பெ.முருகன், முனைவர்.பா.குமாரவேல், வேளாண்மை அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம்.