மரங்களை வளர்ப்போம்! மழைநீரைச் சேமிப்போம்!

செய்தி வெளியான இதழ்: 2014 அக்டோபர்

னக்கு இப்போ 55 வயசாகுது. இத்தனை வருச வாழ்க்கையில இந்த பூமியில எத்தனையோ மாற்றங்கள். அதையெல்லாம் அப்பிடியே அசை போட்டுப் பாக்குறேன். நான் சின்னப்பிள்ளையா இருந்தப்போ, எங்க ஊருல ரெண்டு கிணறு இருந்துச்சு. ஒண்ணு நல்ல தண்ணிக் கிணறு. இன்னொன்னு உப்புத் தண்ணிக் கிணறு. இதுல இருந்து தான் குடிக்க, குளிக்கன்னு எல்லாத் தேவைக்குமான தண்ணியை எடுத்துக்கிட்டுப் போவாங்க. இதுபோக, எங்க வீட்டுக்குள்ள ஒரு கிணறு இருந்துச்சு. எங்களுக்குச் சொந்தமான கிணறுன்னாலும் கூட, பக்கத்து வீட்டுக்காரங்களும் இங்க வந்து தண்ணிய எடுத்துப் பயன்படுத்துவாங்க.

கல்யாணமாகி ஒரு வீட்டுக்குப் புதுப்பொண்ணு வந்ததும் முதல் வேலையா அந்தப் பொண்ணு கையில குடத்தைக் குடுத்து, எளவட்டப் பொண்ணுகளையும் கூட அனுப்பி, இந்த ஊர்க்கெணத்துல இருந்து தண்ணியை எடுத்து வரச் சொல்லுவாங்க. வயசுப் பொண்ணுக ஒண்ணு சேர்ந்தா கேலிக்கும் கிண்டலுக்கும் சொல்லவா வேணும்? அந்த நேரத்துல பார்த்தா ஒரே கலகலப்பா இருக்கும்.

தண்ணிக்கெணறு எங்க இருக்குன்னு அந்தப் பொண்ணு தெருஞ்சுக்கிறவும், இன்னாரு வீட்டுக்கு இப்பிடியொரு பொண்ணு மருமகளா வந்துருக்குன்னு ஊருக்குள்ள எல்லாருக்கும் தெரியிறதுக்கும், இப்பிடிச் செய்யிறது வழக்கம். மேலும், முதல் முதலா நெறஞ்ச குடத்தோட ஒரு பொண்ணு வீட்டுக்குள்ள வந்தா, அந்த வீடு எல்லாச் செல்வங்களும் நெறஞ்ச வீடா இருக்கும்ங்கிறது ஒரு நம்பிக்கை.

அதைப்போல, ஊரைச் சுத்தி நாலஞ்சு கிணறு. கமலை போட்டுருப்பாங்க. கிணத்துக்குள்ள இருந்து தண்ணியை வெளிய கொண்டு வர்றதுக்கான அமைப்பு தான் இந்தக் கமலைங்கிறது. ரெண்டு காள மாடுகள பயன்படுத்தித் தண்ணிய எறைப்பாக. நெல் விவசாயமெல்லாம் ரொம்ப ரொம்பக் குறைவாத்தான் இருக்கும். ஊருக்குள்ள ஊருணி ஒண்ணு இருக்கு.

அதுல இந்த வருச மழையில நெறஞ்ச தண்ணி அடுத்த வருச மழை வர்ற வரைக்கும் இருக்கும். ஓடியாடி நடக்குற வயசுக்கு வந்துட்ட எல்லாப் புள்ளைகளும் இந்த ஊருணியில விளையாடி விளையாடி நீச்சல் கத்துக்கிருவாங்க. இதுல ஆம்பளப் பசங்க பொம்பளப் பசங்க அப்பிடீங்கிற பேதமெல்லாம் கிடையாது. எல்லாருக்குமே நீச்சல் தெரியும்.

ஊருணியைச் சுத்தியும் சரி, ஊர்ச்சாவடி, பிள்ளையாரு கோயிலு, தொட்டராயன் கோயிலு, கருப்பசாமி கோயிலுன்னு எல்லா எடத்துலயும் நெறையா மரங்கள் இருக்கும். எங்களுக்குன்னு ஒரு கண்மாய் இருந்துச்சு. ரெண்டு ஏக்கர். அதுல மழைக்காலத்துல நெறையிற தண்ணியால, அஞ்சாறு ஏக்கருல நெல் விவசாயம் ஓகோன்னு நடக்கும். அதுக்குள்ள கருவேல மரங்கள் நெறையா இருக்கும். அந்தக் கரையைச் சுத்திப் பாத்தீங்கன்னா, பல வருசங்களான புளிய மரங்கள் அடர்ந்து போயி இருக்கும். பகல்ல கூட ஒத்தையா போகணும்ன்னா பயமா இருக்கும்.

அப்புறம் நூறு பனை மரங்கள் இருக்கும். காலையில அஞ்சு மணிக்கெல்லாம் பதநீரு வீட்டுக்கு வந்துரும். தூங்கி எழுந்ததும் பதநீரைத் தான் குடிப்போம். பகல்ல நுங்கு வந்துரும். இந்தப் பதநீரையும் நுங்கையும் கலந்து சாப்பிட்டா தேவாமிர்தமெல்லாம் அப்புறம் தான். இப்பிடித் தான் என்னோட சின்ன வயசுல நான் பார்த்ததெல்லாம் இனிமையா, பசுமையா, சுகமா, சொர்க்கமா தெரிஞ்சது.

அடுத்துப் பார்த்தீங்கன்னா, ஊர்க்கிணறுகள்லயும் சரி, பாசனக் கிணறுகள்லயும் சரி, தண்ணி குறையத் தொடங்கிச்சு. கிணறுகள ஆழமாத் தோண்டுனாங்க. தொடர்ந்து தோண்டுனாங்க. ஒரு கட்டத்துல ஆழ்துளைக் கிணறுகள் நடைமுறைக்கு வந்துச்சு. ஊர் மக்கள் தேவைக்கு அடிகுழாய்கள அரசாங்கம் அமச்சுக் குடுத்துச்சு. ஊர்ல இருந்த தண்ணிக் கிணறுக தூர்ந்து போச்சு. பாசனத்துக்குப் பயன்பட்ட கமலை மறஞ்சு போச்சு. கரண்டுல இயங்குற மோட்டார்கள் அறிமுகமாகி, கெணத்துல இருக்குற தண்ணி முழுசையும் திபுதிபுன்னு அள்ளியள்ளிக் கொட்டிச்சு.

வேணும்ங்கிற தண்ணி கெடச்சதுனால, பாசனப் பரப்பு அதிகமாச்சு. மழைய நம்பி வெளஞ்ச மானாவாரி பூமியிலயும் கெணறுகளத் தோண்டி விவசாயம் செஞ்சாங்க. இதனால, நிலத்தடி நீர் கிர்ரு கிர்ருன்னு கீழே இறங்க, மேலும் மேலும் கெணறுகள ஆழப்படுத்துனாங்க. ஆழப்படுத்த ஆழப்படுத்த, கெணறுக தான் ஆழமாச்சே தவிர, நீர்ச்சுரப்பு எதிர்பார்த்த அளவுக்கு இல்ல. மழைக்காலத்துல மட்டும் தண்ணி கெடைக்குறதோட சரி. அதுமட்டுமில்லாம, கெணறுகளத் தோண்டித் தோண்டி விவசாயிகள் கடனாளிகளா ஆனாங்க.

நீர் மட்டம் கீழே போகப்போக, அடிகுழாய்கள்ல கையால அடிச்சுத் தண்ணியை எடுக்க முடியல. அதனால குடி தண்ணிய எடுக்குறதுக்கும் மோட்டார்கள் வந்துச்சு. முப்பது கோடி முகமுடையாள் இன்னிக்கு 120 கோடி முகமுடையாளா மாறிட்டா. இப்பிடி ஜனத்தொகையும் பெருகிட்டதால, தண்ணியோட தேவையும் கூடிப்போச்சு. அதனால, நிலத்தடி நீரைப் பெரும்பாலும் வெளியே எடுத்துட்டோம்.

அதே நேரத்துல, நிலத்தடி நீரை நிலை நிறுத்தக்கூடிய ஊருணிக, கண்மாய்க, ஏரிக, குளங்க, சமூக விரோதிகளால வளைக்கப்பட்டு வெவ்வேறான பயன்பாடுகளுக்கு உள்ளாகிக்கிட்டே போறதால, மழைநீர் சேமிப்புங்கிறதும் குறஞ்சுக்கிட்டே வருது. தெளிந்த கண்ணோட்டம் இல்லாம, நீர் நிலைகள அரசாங்கமும் கூட ஆக்கிரமிப்பு செஞ்சிருக்கிறது மறுக்க முடியாத உண்மை.

இப்போ கால நிலைகளும் மாறிக்கிட்டே வர்றதுனால சரியான, முறையான மழைப்பொழிவும் இல்ல. ஒன்னு ரெண்டு நாளைக்குப் புயல் மழைங்கிறதுகூட கடலோரங்கள்ல மட்டுமே இருக்கு. என்னோட சின்ன வயசுல, ஒரு வாரத்துக்குக் கூட தொடர்ந்து அடைமழை பெய்யும். அப்போ, தேக்கி வச்சு நிலத்தடி நீர சேமிக்கிறது ஒருபுறம் இருக்க, பெய்யுற இடமெல்லாம் மழைநீர் சேமிப்பு நடந்து, நிலத்தடி நீர்மட்டம் கூடிக்கிட்டே இருக்கும். நெறைய அளவுல நாம மரங்கள அழிச்சது, நமக்குப் போதுமான மழை இல்லாம போனதுக்கு முக்கியக் காரணம்.

இன்னிக்கு நிலத்தடி நீர் அதலபாதாளத்துக்குப் போனதோட, குடிக்கிறதுக்கு ஏத்ததாவும் இல்ல. அதனால, இன்னிக்குத் தமிழ்நாடு முழுசும் கூட்டுக்குடிநீர்த் திட்டம்ங்கிற பேர்ல, அஞ்சாறு அணைகள நம்பித்தான் இருக்கு. இந்த அணைகளுக்கான நீர்வரத்தெல்லாம் கேரளத்தையும் கர்நாடகத்தையும் நம்பியிருக்கு. இந்த ரெண்டு மாநிலங்களும் இந்தத் தண்ணி விசயத்துல, கெடுபிடியா இருக்காக. அங்க இருக்குற அணையெல்லாம் நெறஞ்சது போக மிச்சத் தண்ணியைத் தான் விடுறாக. இனி, அந்தத் தண்ணியையும் விடமாட்டோம்ன்னு கர்நாடகாவுல இன்னும் அணைகளைக் கட்டப்போறதா சொல்றாங்க.

கேரளாவுல நம்ம அணையை இடிப்போம்ன்னு சொல்றாங்க. இப்போ, நம்மாளுகள சுட்டுக் கொன்னது மட்டுமில்லாம, அதுக்கு நியாயம் கற்பிக்கிற ஆந்திர மாநிலம், என்ன செய்யப் போகுதுன்னு தெரியல. எங்களுக்கே போதல, அதனால கிருஷ்ணா நதி நீரெல்லாம் தரமாட்டோம்ன்னு சொன்னாலும் ஆச்சரியப்படுறதுக்கில்ல.

அப்போ என்னதான் செய்யிறது? இதுக்குத் தீர்வு வேணும்ன்னா, நெறைய அளவுல மரங்கள வளர்க்கணும். ஒவ்வொரு சொட்டு மழையையும் பொன்னா நெனச்சு சேமிக்கணும். அந்தச் சேமிப்பு வீட்டுல இருக்கணும், காட்டுல, அதாவது, வயலுல இருக்கணும். ஏரி குளங்கள்ல இருக்கணும். இப்பிடிச் செஞ்சா, நீச்சடிக்கிற அளவுக்கு நமக்குத் தண்ணி கிடைக்கலேன்னாலும் உயிர் வாழப் போதுமான தண்ணிக்குப் பஞ்சமிருக்காது.


பசுமை

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!