நுண்ணுயிர் நீக்கத்தில் மஞ்சள் பொடி!

ணவுகளில் இறைச்சி மிக முக்கிய உணவாகும். இது, சுவை, உயர்தரப் புரதம் மற்றும் பிற முக்கிய உயிர்த் தாதுகளின் சிறந்த மூலமாகும். அனைத்து மத, பொருளாதார மற்றும் சமூக மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட விலங்குப் புரதத்தின் மலிவான ஆதாரம் கறிக்கோழி இறைச்சி ஆகும். இறைச்சி மூலம் பரவும் ஜூனோடிக் நோய், எப்போதும் மனிதர்களால் அறிந்து கொள்ள முடியாததாகக் கருதப்படுகிறது.

இது, பெரும்பாலும் பாதிக்கப்பட்ட விலங்குகளின் இறைச்சியை உண்ணுதல் அல்லது அசுத்தமான இறைச்சியைக் கையாளுதல் மூலம் பரவும். இறைச்சிக்காக அறுக்கும் செயல் முறையின் போது, இறைச்சிக் கோழியின் உடல் மாசடையலாம். சுகாதாரமான முறையில் இறைச்சியை உற்பத்தி செய்து, நுகர்வோருக்கு வழங்க வேண்டிய முக்கியக் கடமை, இறைச்சி உற்பத்தியாளர்களுக்கு உள்ளது.

இறைச்சிக் கடையில் கையாளப்படும் சுடுநீரில் நனைத்தல், குடல் நீக்கம் செய்தல் போன்றவற்றின் போது, இறைச்சி உடல் நுண்ணுயிரிகளால் மாசுபட வாய்ப்புள்ளது. எனவே, இவற்றைக் குறைக்க, இயற்கை முறையில் நுண்ணுயிரி நீக்கம் செய்ய வேண்டும். மஞ்சள் தூளில் செயல்படும் குர்குமினாய்டுகள், குர்குமின் டெமெத்தாக்ஸி குர்குமின் போன்றவை நுண்ணுயிர் எதிர்ப்பிகளாக, ஆக்சிஜனேற்ற எதிர்ப்பிகளாக, புற்றுநோய்க்கு எதிராகச் செயல்படும்.

கறிக்கோழியின் இறகுகளை, குடல் மற்றும் உள்ளுறுப்புகளை நீக்கிய பிறகு மஞ்சள் தூளைத் தடவ வேண்டும். கறிக்கோழி இறைச்சியில் நுண்ணுயிர் மாசைக் குறைக்கவும், வேதியியல் முறையில் நுண்ணுயிர் நீக்கம் செய்வதால் ஏற்படும் இரசாயன எச்சங்களைத் தவிர்க்கவும், 1.5 விழுக்காடு மஞ்சள் தூளைக் கோழி இறைச்சியில் பூசி, குறைந்தது ஐந்து நிமிடங்கள் வைத்திருந்தால் பயனுள்ளதாக இருக்கும்.


மு.முத்துலட்சுமி, இரா.இராஜ்குமார், கால்நடை உற்பத்திப் பொருள்கள் தொழில் நுட்பத்துறை, கால்நடை மருத்துவக் கல்லூரி, நாமக்கல்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!