அங்கக இடுபொருள்கள்!

ங்கக இடுபொருள்கள் மண்வளம் காக்கும் தன்மை மிக்கைவை. இங்கே சில அங்கக இடுபொருள்கள் குறித்துப் பார்க்கலாம்.

கோழியெரு: இதில், மற்ற தொழு உரங்களில் இருப்பதை விட, தழை, மணி, சாம்பல் சத்து அதிகமாக உள்ளன.

ஆனால், 30 நாட்களில் 50 சத நைட்ரஜன் வீணாகி விடுவதால், விரைவில் பயிர்களுக்கு இட வேண்டும். அல்லது சீரிய முறையில் சேமிக்க வேண்டும்.

மண்புழு உரம்: இதில், 1-1.5 சதம் தழைச் சத்து, 0.4-0.75 சதம் மணிச் சத்து மற்றும் 0.5-1.5 சதம் சாம்பல் சத்து உள்ளன.

இவற்றின் அளவு, மண்புழுவுக்கு இடும் உணவுப் பொருள்களைப் பொறுத்து வேறுபடும்.

தொழுவுரம்: இதை, குழிகளில் இட்டு முறையாகப் பதப்படுத்துவதால், இதிலுள்ள சத்துகள் எளிதில் பயிர்களுக்குக் கிடைக்கும்.

ஆட்டெரு: இதில், மற்ற தொழு உரங்களில் இருப்பதை விட, அதிகச் சத்துகள் உள்ளன. இதை இரு முறைகளில் நிலத்தில் இடலாம்.

எருவைக் குழிகளில் இட்டு மட்கச் செய்து இடலாம். இதில் அதிகளவில் சத்துகள் வீணாகும்.

அடுத்து, ஆடுகளை வயலில் இரவு தங்க வைப்பது. இதனால், அனைத்துத் திட, திரவக் கழிவுகள் நிலத்திலேயே விழுவதால், சத்துகள் வீணாவதில்லை.

புண்ணாக்குகள்: இவை, தழைச்சத்தை அளிக்கும் முக்கிய அங்கக உரமாகும்.

புண்ணாக்கின் தன்மையைப் பொறுத்து, சத்துகளின் அளவு வேறுபடும். இதிலுள்ள சத்துகள் பயிர்களுக்கு விரைவில் கிடைக்கும். மேலும், எல்லா மண்ணுக்கும் பயிர்களுக்கும் ஏற்றவை.

உயிர் உரங்கள்: அசோஸ் பயிரில்லம், பாஸ்போ பாக்டீரியா போன்றவை, மண்ணில் உள்ள நைட்ரஜனை, காற்றில் உள்ள வளிமண்டல நைட்ரஜனை. நிலை நிறுத்திப் பயிர்களுக்குத் தரும்.

அசோலா, நீலப்பச்சைப் பாசி போன்றவை, எக்டருக்கு 40 கிலோ தழைச்சத்தை அளிக்கும்.

பசுந்தாள் உரங்கள்: இவை, மண்ணின் இயற்பியல், வேதியியல், உயிரியல் பண்புகளை மேம்படுத்தும்.

மணிலா அகத்தி, சணப்பை, கொளுஞ்சி போன்றவை, முக்கியப் பசுந்தாள் உரங்கள்.

ஓர் எக்டரில் இடும் 12-25 டன் பசுந்தாள் உரம், 50-90 கிலோ தழைச்சத்தை அளிக்கும்.

பயறுவகைப் பயிர்கள்: இவை, வேர் மற்றும் தண்டுகளில் தழைச்சத்தை நிலை நிறுத்தும்.

மேலும், காற்றில் உள்ள தழைச்சத்தைக் கிரகிப்பதுடன், அடுத்து வரும் பயிருக்கும் 15-20 கிலோ தழைச்சத்தைத் தரும்.


Pachai Boomi Dr.Tamil selvi

முனைவர் செ.தமிழ்ச்செல்வி, உதவிப் பேராசிரியை, வேளாண்மை அறிவியல் நிலையம், திரூர்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!