குளம்பு அழுகல் நோய் என்பது, மாடுகளின் கால் குளம்புகளில் தீவிர அல்லது மிகத் தீவிரத் திசுச்சிதைவை ஏற்படுத்தும் தொற்று நோயாகும். இது, குளம்பிடைப் பகுதியில் வீக்கம் மற்றும் துர்நாற்றமுள்ள திசு அழுகலை உண்டாக்கும். இதனால், மாடுகள் நொண்டி நொண்டி நடக்கும். முடக்கு வாதமும் ஏற்படும்.
சிகிச்சையளிப்பதில் தாமதம் ஏற்படும் போது, இந்நோய், நாட்பட்ட தீவிர நிலையை அடைந்து, குளம்புகளின் உட்புறத் திசுக்களைப் பாதிக்கும். எளிதில் பரவும் இந்நோய்த் தொற்று, மந்தையில் உள்ள பெரும்பாலான மாடுகளைத் தாக்கி, உடல் எடை மற்றும் பால் உற்பத்தியில் பேரிழப்பை ஏற்படுத்தும்.
நோய்க் காரணிகள்
பாக்டீரியாய்டஸ் மெலனோஜெனிக்கஸ், ஃப்யூசோபாக்டீரியம் நெக்ரோஃபோரம் போன்ற நுண்ணுயிரிகள் இந்நோய்க்கான காரணிகள் ஆகும். இவை, எல்லா வயது மாடுகளையும் தாக்கும். குறிப்பாக, வயதான மாடுகளை அதிகமாகத் தாக்கும். மழைக்காலம் மற்றும் ஈரமான சதுப்பு நிலப்பகுதிகளில் பரவலாகத் தாக்கும்.
நோய் ஊக்குவிப்புக் காரணிகள்
கரடுமுரடான நிலப்பரப்பில் மாடுகள் நடப்பதால் அல்லது ஈரமான மண் தரையில் அதிக நேரம் நிற்பதால், கால்களில் ஏற்படும் காயங்கள் மூலம் திசுக்களுக்குள் நுழையும் நுண்ணுயிரிகள் நோயை ஏற்படுத்தும். அதிக வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தால் நோய்த் தாக்கம் தீவிரமாகும். காப்பர், ஜிங்க், செலினியம் போன்ற தாதுப்புகள் குறைபாடு, இந்நோய்ப் பாதிப்பை அதிகமாக்கும்.
நோய் பரவும் விதம்
நெக்ரோஃபோரம், ஃப்யூசோபாக்டீரியம், போர்பைரோமோனாஸ் லெவி போன்ற நுண்ணுயிரிகள், மாடுகளின் இரைப்பை மற்றும் சாணத்தில் சாதாரணமாக இருக்கும். இவை, சாணத்தின் மூலம் சுற்றுப்புறத்தை மாசுபடுத்துவதால், மற்ற மாடுகளுக்கு எளிதில் பரவும். குளம்புகளில் காயம் ஏற்படும் போது, நுண்ணுயிரிகள் எளிதில் திசுக்களில் நுழைந்து பல்கிப் பெருகி, நச்சுப் பொருள்களை உற்பத்தி செய்யும்.
நோய் அறிகுறிகள்
நோயானது தீவிர நிலையில் இருக்கும் போது, கால் குளம்புகளில் கடுமையான வலி உண்டாவதால் முடக்குவாதம் ஏற்படும். குளம்பிடைப் பகுதி மற்றும் கரோனரி வளையத்தைச் சுற்றியுள்ள திசுக்கள் சிவந்து வீங்கி விடும். குளம்புகளைச் சுற்றியுள்ள திசுக்கள், கடுமையாக வீங்குவதால், குளம்புகள் தசைப்பகுதியை விட்டுப் பிரிந்து விடும்.
குளம்பிடைப் பகுதியில் திசுச்சிதைவு, துர்நாற்றத்துடன் கூடிய சீழ் வடிதல் நிகழும். பாதிக்கப்பட்ட காலைத் தரையில் ஊன்ற முடியாமல் போவதால், முடக்குவாதமும், தீவனம் உண்ண முடியாத நிலையும் ஏற்படும். இதனால், மாட்டின் உடல் எடையும், பால் உற்பத்தியும் குறையும். சிகிச்சையளிக்கத் தாமதமானால், நோய் தீவிரமடைந்து, காலிலுள்ள உட்புறத் தசைகள், தசை நாண்கள் மற்றும் எலும்புகளைப் பாதிக்கச் செய்யும்.
நோய்க்குறி அறிதல்
கால்கள் மற்றும் குளம்புகளை முழுமையாகப் பரிசோதித்தல். திடீர் முடக்குவாதம், உடல் வெப்பநிலை மிகுதல், குளம்பிடைப் பகுதியில் வீக்கம், தோல் உரிதல், துர்நாற்றத்துடன் சீழ் வடிதல்.
சிகிச்சை முறைகள்
குளம்பு அழுகல் நோய்க்கு, தொடக்க நிலையிலேயே சிகிச்சை அளிப்பதன் மூலம், நோய் தீவிரமாகாமல் தடுத்து, மாடுகளை விரைவாகக் குணப்படுத்த முடியும். மிதமான நோய்த்தொற்று உள்ள மாடுகளில் புற மருந்துப் பூச்சு அளித்தல் மட்டுமே போதுமானது. எனினும், பெரும்பாலான நேரங்களில் ஊசி மூலம் செலுத்தப்படும் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளை அளிக்க வேண்டும்.
காயங்கள் குணமாகும் வரை, பாதிக்கப்பட்ட மாடுகளை, உலர்ந்த தரையில் கட்ட வேண்டும். ஒரு சத பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசல் மூலம் குளம்புகளைச் சுத்தம் செய்ய வேண்டும்.
மூன்று, நான்கு நாட்களில் சிகிச்சையினால் எந்த முன்னேற்றமும் இல்லாவிடில், ஆழமாகப் பாதிக்கப்பட்ட திசுக்களை நீக்கி, காயங்களை அடிக்கடி சுத்தம் செய்து, நுண்ணுயிர் எதிர் மருந்தைப் புறப்பூச்சாக இட்டுக் கட்டுப் போட வேண்டும். மிகத் தீவிர நிலையில் பாதிக்கப்பட்ட மாடுகளை, மந்தையிலிருந்து நீக்கிவிட வேண்டும். அல்லது பாதிக்கப்பட்ட குளம்பை, அறுவை சிகிச்சை மூலம் நீக்கி விடலாம்.
தடுப்பு முறைகள்
மாடுகள் ஈரமான நிலத்தில் அதிக நேரம் நிற்பதைக் குறைத்தல் மற்றும் காலில் காயம் ஏற்படுவதைத் தடுத்தல். பாதிக்கப்பட்ட மாடுகளைத் தனிமையில் வைத்தல். பத்து சத ஜிங்க் சல்பேட் அல்லது காப்பர் சல்பேட் உள்ள கால் நனைப்பு மருந்துக் கலவையைப் பயன்படுத்தி, மாடுகளின் கால்களைச் சுத்தம் செய்தல். எலும்பும் தசையும் நன்றாக இருக்க, சரிவிகிதச் சத்துகளை மாடுகளுக்கு அளித்தல். தோல் மற்றும் குளம்புகளின் வளர்ச்சி மற்றும் நிலைத் தன்மைக்கு, போதியளவில் ஜிங்க் மற்றும் அயோடின் தாதுப்பை அளித்தல்.
மாடுகளில் முடக்குவாதம் ஏற்படுவதற்குக் குளம்பு அழுகல் நோய் முக்கியக் காரணமாகும். இதனால், மாடுகளில் பால் உற்பத்தி மற்றும் இனப்பெருக்கத் திறன் பாதிக்கப்படும்.
எனவே, முன்கூட்டியே நோயைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பது அவசியம். முறையான நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம், குளம்பு அழுகல் நோயைத் தடுத்துப் பண்ணைப் பொருளாதாரத்தை மேம்படுத்தலாம்.
மருத்துவர் ம.சிவக்குமார், முனைவர் மூ.தாஸ்பிரகாஷ், கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், திண்டுக்கல் 624 004.