பசுந் தீவனங்களை, தானியவகைத் தீவனம், பயறுவகைத் தீவனம் என இரு வகையாகப் பிரிக்கலாம். பயறுவகைத் தீவனம், காற்றில் உள்ள தழைச் சத்தைக் கிரகித்து வேரின் மூலம் மண்ணில் செலுத்துகிறது. இதனால், நாம் பயிருக்கு இடும் தழைச்சத்தின் அளவைக் குறைத்துக் கொள்ளலாம்.
பசுந்தீவன உற்பத்தியில் தன்னிறைவை அடைய, உயர் விளைச்சல் இரகங்கள், மறுதாம்புப் பயிர்கள், கால்நடைகள் விரும்பி உண்ணும் பயிர்களைப் பயிரிட வேண்டும்.
கோ.8 தீவனக்கம்பு, கோ.7, கோ.எஃப்.எஸ்.29, கோ.31 தீவனச்சோள வகைகள், ஆப்பிரிக்கன் பால் தீவன மக்காச்சோளம், கோ.4. கோ.5, கோ.சி.என்.4, 8 கம்பு நேப்பியர் புல் இரகங்கள், கோ.ஜி.ஜி.3 கினியாப்புல்,
கோ.1 கொழுக்கட்டைப் புல், கோ.1, கோ2 குதிரைமசால், வேலிமசால், கோ.என்.சி.8 தீவனத் தட்டைப்பயறு, முயல்மசால், கோ.1 சவுண்டல், கிளைரிசிடியா ஆகிய அனைத்தும் தீவனப் பயிர் வகைகளாகும்.
தீவனப் பயிர்கள் அனைத்து மண்ணிலும், பல்வேறு சூழல்களிலும், குறைந்த நீரிலும் வளரும். போதிய வடிகால் வசதி இருந்தால் போதும். மண்ணின் கார அமிலத் தன்மை 6.5-7.5 இருக்க வேண்டும். 30-33 டிகிரி செல்சியஸ் வெப்பம், 60-65 சத ஈரப்பதம் இருக்க வேண்டும்.
முதலில் மண்ணை இருமுறை கலப்பையால் உழ வேண்டும். பிறகு, தொழுவுரம் 12.5 டன் இட வேண்டும். மூன்றாம் முறை உழும் போது, மண் புழுதியாக இருக்க வேண்டும். தீவனப் பயிர்களை ஆண்டு முழுவதும் பயிரிடலாம்.
புரதமுள்ள பயறுவகைத் தீவனங்களைக் கால்நடைகளுக்கு அளித்தால், கிடேரிக் கன்றுகளின் உடல் எடை கூடும். பசுந்தீவனத்தில் வைட்டமின் ஏ நிறைய இருப்பதால், பாலுற்பத்தி அதிகமாகும், கண் குறைபாடு வராது. பருவமடைதல், கருப்பை வளர்ச்சி, சினைப் பிடிப்பு சிறப்பாக இருக்கும்.
சிக்கல் இல்லாமல் சாணம் இளக்கமாக, எளிதாக வெளியேற, நார்ச்சத்து மிகுந்த தீவனத்தைத் தரலாம். பசும்புல்லில் 10-18 சதம் ஈரத்தன்மை உள்ளது. இதனால், கால்நடைகளின் உடலில் உண்டாகும் அதிக வெப்பம் மாறும். பசுந்தீவனம் இருந்தால், மொத்தத் தீவனச் செலவு குறைந்து, இலாபம் அதிகமாகும்.
முனைவர் வி.அரவிந்த், தொழில் நுட்ப வல்லுநர், வேளாண்மை அறிவியல் நிலையம், காரைக்கால்.