கரும்பு விவசாயிகள் ஆண்டுக் கணக்கில் காத்திருந்து வருமானத்தை எடுக்க வேண்டிய சூழல் உள்ளது.
மேலும், பருவமழை பொய்த்தல், வேலையாள் பற்றாக்குறை மற்றும் கரும்புக்கு உரிய விலை கிடைக்காமல் இருத்தல் போன்ற சிக்கல்கள் உள்ளதால்,
கரும்புத் தோகையைத் தீவனமாகக் கொடுத்து, கன்றுகளை வளர்த்தால், விவசாயிகள் கூடுதல் வருமானத்தைப் பெறலாம்.
தீவனச் செலவைக் குறைக்கும் கரும்பு
கன்று வளர்ப்பில் தீவனச் செலவு 50-60 சதமாகும். கரும்பிலிருந்து கிடைக்கும் காய்ந்த மற்றும் பசுந் தோகைகளைச் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கன்றுகளுக்குத் தரலாம்.
இந்தத் தோகையில் 8-9 சதம் புரதம், 80 சதம் நீர்ச்சத்து இருப்பதால் கன்றுகள் விரைவாக வளரும். இதனால், தீவனச் செலவு பாதியாகக் குறையும்.
கரும்பில், புரதம் மிகுந்த பசுந்தீவனமான வேலிமசாலை ஊடுபயிராக இடலாம்.
வேலிமசால் 35-40 நாட்களில் அறுவடைக்கு வரும் சிறு செடியாகும். 24 சதம் வரை புரதமுள்ள இந்தப் பயறுவகைச் செடியைக் கன்றுகளுக்குக் கொடுத்தால், புண்ணாக்கைக் கொடுக்கத் தேவையில்லை.
கரும்பு மற்றும் வேலிமசாலை 3:1 எனப் பயிரிட்டால், தீவனத் தட்டுப்பாடே இருக்காது.
ஒரு ஏக்கரில் பயிரிட்டால் பத்துக் கன்றுகளுக்கு ஓராண்டுக்குத் தேவையான தீவனம் கிடைக்கும்.
தினமும் கன்றுக்கு 2 கிலோ வேலிமசால் வீதம் எடுத்து, கரும்புத் தோகையுடன் கொடுத்து வந்தால், தீவனச் செலவே இல்லாமல் கன்றுகளை வளர்க்கலாம்.
இன்றைய கன்றே நாளைய பசு என்பதால், கன்றுகளைக் கவனமாக வளர்க்க வேண்டும்.
இளங்கன்று பராமரிப்பு
சீம்பால் அளித்தல்: கன்று பிறந்ததும் தாயின் மடியிலிருந்து கெட்டியான, சற்று மஞ்சளான பால் சுரக்கும். இதுவே சீம்பால்.
பொதுவாக, நான்கு நாட்கள் வரையில் பசுக்களில் சீம்பால் சுரக்கும். இதில், சாதாரணப் பாலை விட, ஏழு மடங்கு புரதம், இரண்டு மடங்கு மொத்தத் திடப்பொருள்கள் இருக்கும்.
இதில், நோயெதிர்ப்பு சக்தி அதிகம். இது, கன்றுகளுக்கு மலச்சிக்கல் வராமல் தடுக்கும்.
கன்று பிறந்த 10-15 நிமிடத்தில் முதற்கட்ட சீம்பாலும், அடுத்து, 10-12 மணி நேரத்தில் இரண்டாம் கட்ட சீம்பாலும் தரப்பட வேண்டும்.
சீம்பாலைக் குடித்து வளரும் கன்று, பிற்காலத்தில் நோயெதிர்ப்புத் திறனுள்ள மாடாக இருக்கும்.
தாய்ப்பசு இறந்து விட்டாலோ, மடிவீக்க நோய் இருந்தாலோ, சீம்பால் கிடைக்காத நிலை ஏற்படும். இந்நிலையில், மற்ற பசுக்களின் சீம்பாலை அளிக்கலாம்.
சீம்பாலை, இளம் சூட்டில் எட்டு மணி நேர இடைவெளியில் கன்றுக்குத் தர வேண்டும். 2-3 நாட்களுக்குப் புட்டி மூலம் பாலைத் தரலாம்.
தலையை உயர்த்திப் பாலைக் குடிக்க வைக்க வேண்டும். 2-3 வாரத்தில் பசும்புல்லை, தீவனக் கலவையை உண்ணத் தொடங்கும்.
அடர் தீவனக் கலவை மாதிரி
மக்காச்சோள மாவு: 30 சதம்,
கரும்புத்தோகை: 17 சதம்,
கம்பு மாவு: 10 சதம்,
கோதுமைத் தவிடு: 20 சதம்,
வேலிமசால்: 20 சதம்,
தாதுப்புக் கலவை: 3 சதம்.
இந்தக் கலவையுடன், சாதாரண உப்பு 25 கிராம், எதிருயிரி மருந்து 5 கிராம், வைட்டமின் கலவை 100-250 மி.கி. சேர்த்துத் தரலாம்.
ஊறுகாய்ப்புல் அளித்தல்: சத்துகள் அழியாமல் சேமித்து வைக்கப்படும் பசுந்தீவனம் ஊறுகாய்ப் புல் எனப்படும். ஆறு மாதத்துக்கு மேற்பட்ட கன்றுகளுக்கு மட்டுமே ஊறுகாய்ப் புல்லை அளிக்க வேண்டும்.
குழி முறையில் ஊறுகாய்ப் புல் தயாரிப்பு: சரியான பருவத்தில் அறுவடை செய்த தீவனப் பயிர்களைச் சிறிய துண்டுகளாக நறுக்க வேண்டும்.
இப்படி நறுக்கும் போது, அந்தத் தீவனத்தில் உள்ள கரையும் மாவுச்சத்து வெளிவந்து நொதித்தலுக்குத் துணை புரியும்.
இந்தத் தீவனத்தை, கொஞ்சம் கொஞ்சமாகக் குழியில் இட்டுக் காற்று வெளியேறும் வகையில் காலால் அழுத்தி மிதிக்க வேண்டும்.
ஏனெனில், தீவனப் பயிர்கள் நொதிக்க, காற்றில்லாச் சூழ்நிலை அவசியம்.
இப்படித் தயாராகும் ஊறுகாய்ப் புல்லை ஆறு மாதத்துக்கு மேற்பட்ட கன்றுகளுக்குச் சிறிது சிறிதாகக் கொடுக்க வேண்டும்.
ஒருமுறை எடுத்த தீவனத்தை உடனே பயன்படுத்தி விட வேண்டும். இந்தப் புல்லில் விரும்பத் தகாத வாசமோ நிறமோ இருந்தால், கன்றுகளுக்குத் தரக் கூடாது.
குடற்புழு நீக்கம்: கன்றுகளுக்கு முறையாகக் குடற்புழு நீக்க மருந்தை அளிக்க வேண்டும்.
மாதம் ஒருமுறை குடற்புழு நீக்க மருந்தை அளிப்பது நல்லது. தொடக்க மருந்தை 45 நாட்களில் கொடுக்க வேண்டும்.
அடிக்கடி சாணத்தைச் சோதித்து, உரிய குடற்புழு நீக்க மருந்தைக் கொடுத்தால் குடற்பு ழுக்கள் அகலும்.
உண்ணும் தீவனம் முழுதாகக் கிடைப்பதால், கன்றுகள் விரைவாக வளரும். உடல் எடை கூடி விரைவில் பருவத்துக்கு வரும்.
நோய்த் தடுப்பூசி அட்டவணை
தொற்று நோய்கள் மற்றும் உயிர்க்கொல்லி நோய்களால் கன்றுகள் பாதிக்காமல் இருக்க, தடுப்பூசிகளை முறையாகப் போட வேண்டும்.
2-4 மாதம்: கோமாரி நோய்,
8-9 மாதம்: தொண்டை அடைப்பான்,
10-12 மாதம்: மீண்டும் தொண்டை அடைப்பான்,
ஓராண்டுக்கு மேல், நோயுள்ள பகுதியில் வளர்க்கப்படும் கன்றுகளுக்கு மட்டும் அடைப்பான் தடுப்பூசி.
ஆகவே, கரும்புத் தோகையை வேலிமசாலுடன் சேர்த்துத் தினமும் அளித்து வந்தால்,
ஓராண்டு முடிவில் 8-10 கன்றுகள் மூலம் ஒரு இலட்சம் ரூபாய் வரை உபரி வருமானம் உறுதியாகக் கிடைக்கும்.
முனைவர் பூ.புவராஜன், இரா.மாணிக்கம், கால்நடை நுண்ணுயிரியல் துறை, கால்நடை மருத்துவக் கல்லூரி, ஒரத்தநாடு, தஞ்சை – 614 625.