பயிர்க் கழிவுகளை மட்க வைக்கும் நுண்ணுயிர்க் கலவை!

யற்கை நமக்களித்த வளங்களில் ஒன்று மண்வளம். இதைக் காப்பதில் அனைவருக்கும் பங்குள்ளது.

இரசாயன உரங்களைக் குறைத்து, அங்கக உரங்களை நிலத்தில் அதிகமாக இட்டால், மண்வளம் காத்து, தரமான உணவுப் பொருள்களை உற்பத்தி செய்யலாம்.

மேலும், இரசாயன உரங்களால் மண்ணில் படியும் நச்சுத் தன்மையை நீக்கி, நிலையான சாகுபடியை மேற்கொள்ளலாம்.

அங்கக உரங்கள் மகசூலைப் பெருக்கவும், தரமான உணவு உற்பத்திக்கும் உதவும்.

வளமற்ற நிலங்களை வளமான நிலங்களாக மாற்றுவதில் அங்கக உரங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

பயிர்க் கழிவுகளை அங்கக உரங்களாக மாற்ற வேண்டுமெனில், அவற்றை மட்க வைக்க வேண்டும்.

இந்த மட்க வைத்தலில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக நுண்ணுயிர்க் கூட்டுக் கலவையின் பங்கு மகத்தானது.

வைக்கோல், பயிர்க் கட்டைகள், நிலக்கடலைத் தோல், நெல்லுமி, சோளத் தட்டை, கம்மந்தட்டை, மக்காச்சோளத் தட்டை போன்ற பயிர்க் கழிவுகள்,

கால்நடைக் கழிவுகள், வீட்டுக் காய்கறிக் கழிவுகள் ஆகியவற்றை மட்க வைக்க, தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக நுண்ணுயிர்க் கலவை பயன்படுகிறது.

இவ்வகையில், தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 190 இலட்சம் டன் பயிர்க் கழிவுகளை மட்க வைப்பதன் மூலம், ஒரு இலட்சம் டன் தழைச்சத்து, 0.5 இலட்சம் டன் மணிச்சத்து, 2.0 இலட்சம் டன் சாம்பல் சத்துக் கிடைக்கும்.

இந்தக் கூட்டு நுண்ணுயிர்க் கலவையில், விரைவாக மட்க வைக்கும் நுண்ணுயிரிகள் உள்ளன.

மட்கும் கழிவுகளில், இந்த நுண்ணுயிர்க் கலவையைச் சேர்க்காத போது, அந்தக் கழிவுகளில் உள்ள நுண்ணுயிர்கள் தான் மட்க வைக்கும் வேலையைச் செய்யும். இதனால், கழிவுகள் மட்க, நெடுநாட்கள் ஆகும்.

அதே நேரம், பல்கலைக் கழக நுண்ணுயிர்க் கலவையைச் சேர்க்கும் போது, நுண்ணுயிர்கள் பல்கிப் பெருகி, குறுகிய காலத்தில் மட்க வைக்கும்.

எனவே, ஒரு டன் பயிர்க் கழிவை மட்க வைக்க, 2 கிலோ நுண்ணுயிர்க் கலவையைப் பயன்படுத்தினால் போதும்.

இந்தக் கலவையை 20 லிட்டர் நீரில் கலந்து, அங்ககக் கழிவுகளில் தெளித்து விட வேண்டும்.

இப்படிச் செய்தால், குறைந்த நார்ச்சத்து உள்ள பயிர்க் கழிவுகள் 60-75 நாட்களிலும், அதிக நார்ச்சத்து உள்ள கழிவுகள் 90-100 நாட்களிலும் மட்கி விடும்.

இந்த மட்குரத்தை எக்டருக்கு 5 டன் வீதம் அடியுரமாக இடலாம். இதனால், மண்ணின் இயற்பியல், வேதியியல், உயிரியல் பண்புகள் மேம்பட்டு, நிலத்திலுள்ள சத்துகளைப் பயிர்கள் எடுத்துக் கொண்டு நல்ல மகசூலைத் தரும்.


சுற்றுச்சூழல் அறிவியல் துறை, இயற்கை வள மேலாண்மை இயக்ககம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோவை – 641 003.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!