வெய்யில் காலத்தில் நிலவும் கூடுதல் வெப்பம் மற்றும் ஈரப்பதத்தின் கூட்டு விளைவால், கால்நடைகளின் உடல் இயக்கத்தில் மாற்றம் ஏற்பட்டு வெப்ப அயர்ச்சி உண்டாகும்.
ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையில் ஏற்படும் வெப்ப அயர்ச்சியால், கால்நடைகளில் உற்பத்தியும் இயக்கமும் வெகுவாகப் பாதிக்கப்படும்.
இதனால், கால்நடைகளின் நலம், வேளாண் பெருமக்களின் பொருளாதாரம் பாதிக்கப்படும்.
வெப்பத் தாக்கத்தின் விளைவுகள்
பாலின் அளவும் தரமும் குறையும். சினைக்கு வருவதும், காலத்தே சினைப் பிடிப்பதும் தாமதம் ஆகும். ஆர்வமாக உண்பது குறையும்.
நோய் எதிர்ப்பு சக்தி குறையும். எளிதில் மடிநோய்க்கு உள்ளாகும். மூச்சுத் திணறல் சார்ந்த சுவாசக் கோளாறுகள் தீவிரமானால் இறப்பும் கூட நேரிடும்.
இளங் கன்றுகளின் வளர்ச்சிப் பாதிக்கும்; இறப்பும் ஏற்படும். செரிமானச் சிக்கல் உண்டாகும்.
கோடையில் காலை 9 மணிக்கு முன்பும், மாலை 4 மணிக்குப் பிறகும் தீவனத்தைத் தரலாம்.
பகலில் 40 சதம், இரவில் 60 சதம் அளவில் தீவனத்தைக் கொடுப்பது நல்லது.
அடர் தீவனத்தைப் பிரித்துக் கொடுப்பது நல்லது. எந்த நிலையிலும் 2.5 கிலோவுக்கு மேல் கொடுக்கக் கூடாது.
அதிக எண்ணெய் அல்லது கொழுப்புப் பொருள்கள் அடங்கிய தீவனத்தை வெய்யில் நேரத்தில் தரக் கூடாது. தரமான பசுந்தீவனம் மிகவும் சிறந்தது.
வெப்பத் தாக்கத்தில் இருந்து பசுக்களைக் காக்க, தீவனத்தில் சில கரிமத் தாதுப் பொருள்கள் மற்றும் இ, சி உயிர்ச் சத்துகள் நிறைந்த பொருள்களைச் சேர்த்துத் தரலாம்.
செரிமானச் சிக்கலைத் தவிர்க்க, அடர் தீவனத்தில், ஒரு நாளைக்கு 50 கிராம் சமையல் சோடா உப்பைச் சேர்த்துக் கொடுக்கலாம்.
கொட்டிலின் ஈரப்பதம் 40 சதம் இருக்க வேண்டும். குளிர்ந்த நீர் எப்போதும் மாடுகளுக்குக் கிடைக்க வேண்டும்.
வெப்பப் பகுதியில், கொட்டிலின் நீளவாட்டம் கிழக்கு மேற்காக இருக்க வேண்டும். போதியளவில் மைய மற்றும் பக்கவாட்டு உயரம் அமைய வேண்டும்.
கொட்டிலில் நல்ல காற்றோட்டம் வெளிச்சம் இருக்க வேண்டும். பண்ணைக் கழிவை அவ்வப்போது நீக்க வேண்டும்.
அனைத்து மாடுகளுக்கும் போதுமான இடவசதி கொடுப்பது அவசியம்.
பகல் 11-12 மற்றும் 2-3 மணியளவில் கொட்டிலில் நீரைத் தெளித்து, வெப்பத் தாக்கத்தைக் குறைக்கலாம். கொட்டிலைச் சுற்றி, நல்ல நிழல் தரும் மரங்களை வளர்க்கலாம்.
கூரையின் வெப்பக் கடத்தல் திறனைக் கருத்தில் கொண்டு, கூரைக்கான பொருளைத் தேர்வு செய்ய வேண்டும்.
கூரையின் மேல் சுண்ணாம்பு அல்லது வெள்ளை வார்னீசைப் பூசலாம். அல்லது வெள்ளைத் தகரங்களைக் கூரையாக இடலாம்.
பக்கவாட்டில் சணல் சாக்குகளை நீரில் நனைத்துத் தொங்க விட்டால், குளிர்ந்த சூழல் உருவாகும்.
சிறந்த பராமரிப்பு
ஏழு மாதச் சினைமாடு கறவையில் இருந்தால், வயிற்றில் வளரும் கன்றின் வளர்ச்சி மற்றும் பராமரிப்புக்கு என, 1-1.5 கிலோ அடர் தீவனத்தைச் சேர்த்துத் தர வேண்டும்.
இந்தக் காலத்தில் சரியான, போதுமான தீவனத்தை அளிக்க வேண்டும். பால் வற்றிய பிறகு, கன்று ஈனும் வரை உள்ள இரண்டரை மாதச் சினைக் காலத்தில் தான் கரு வேகமாக வளர்கிறது.
ஏறக்குறைய மொத்த வளர்ச்சியில் 80 சதம் இந்தக் காலத்தில் தான் நடக்கிறது. எனவே, கரு வளர்ச்சிக்கு தீவனம் அதிகமாகத் தேவைப்படும்.
மேலும், முந்தைய கறவையில் இழந்த உடல் திசுக்களைப் புதுப்பித்துக் கொள்ள, கிடேரிகளில் எலும்பு வளர்ச்சி மாற்றத்துக்கு, இது மிகவும் அவசியம்.
அவரையினத் தீவனம் இரண்டு பங்கு, புல்லினத் தீவனம் மூன்று பங்கு வீதம் கலந்து, மாடு தின்னும் அளவு அல்லது
குறைந்தது ஒரு நாளைக்கு ஒரு மாட்டுக்கு 25 கிலோ பசுந்தீவனம் மற்றும் அடர் தீவனத்தை அளிக்க வேண்டும்.
கடைசி 10 நாட்களில் கொடுக்கும் தீவனம் மலமிளக்கும் தன்மையில் இருக்க வேண்டும். ஒரு நாளைக்கு 1.5 கிலோ கோதுமைத் தவிட்டைக் கொடுக்கலாம்.
நார்ச்சத்து மிகுந்த தீவனத்தை அதிகமாகக் கொடுக்கக் கூடாது. குடிப்பதற்கு வெதுவெதுப்பான நீரைத் தரலாம்.
ஈனுவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன், 450 கிராம் எப்சம் உப்பு, ஒரு தேக்கரண்டி இஞ்சி விழுதை, முக்கால் லிட்டர் நீரில் கலந்து உண்ணத் தரலாம்.
சினையூசி போட்ட நாளுடன் 280 நாளைக் கூட்டி அல்லது அட்டவணை மூலம், மாடு ஈனும் நாளை அறியலாம்.
ஈனும் காலம் நெருங்கும் போது, சினை மாட்டைத் தனியாகப் பிரித்து, தூய்மையான, காற்றோட்டமான, நல்ல வைக்கோல் பரப்பப்பட்ட இடத்தில் கட்ட வேண்டும்.
கருச்சிதைவு ஏற்பட்ட மாடுகளுடன் சேர்க்கக் கூடாது. பெரிய பண்ணையில் 12 ச.மீ. இடமுள்ள ஈனுதல் அறையை அமைக்கலாம்.
மாட்டை அதிக தூரம் நடக்க விடுவது, விரட்டுவது, பயமுறுத்துவது மற்றும் மேடு பள்ளமான இடத்தில் மேய விடுவதைத் தவிர்க்க வேண்டும்.
சினைமாடு மேடு பள்ளத்தில் திரிந்தால் கருப்பைச் சுழற்சி ஏற்படும். சமதளத்தில் மேய்வது நல்ல உடற் பயிற்சியாக இருக்கும்.
கடைசி இரண்டு மாதங்களில் மாட்டின் எடை 60-80 கிலோ கூடி, விலா எலும்புகள் தெரியாமல் இருக்க வேண்டும்.
இந்தக் காலத்தில் கலப்புத் தீவனத்துடன் தாதுப்புக் கலவையையும் அளிக்க வேண்டும்.
ஏழு மாதச் சினைக்குப் பிறகும் பால் கறந்தால், கறவை நேரத்தைத் தள்ளிப் போடுதல், தீவனம் மற்றும் நீரைக் குறைத்து, பாலை வற்றச் செய்ய வேண்டும்.
முந்தைய ஈற்றில் பால் காய்ச்சல் வந்த மாடுகளுக்கு, அதைத் தடுக்கும் நோக்கில், சினைக்காலக் கடைசியில், கால்சிய ஊசியைப் போடக் கூடாது.
பொதுநல நிர்வாகம்
வெப்பக் காலத்தில் கால்நடைகளைத் தொந்தரவு செய்யக் கூடாது. சுத்தமான மற்றும் குளிர்ந்த குடிநீரைத் தேவையான அளவில் கொடுக்க வேண்டும்.
தீவனம் தரமாக இருக்க வேண்டும். வெப்பம் குறைவாக இருக்கும் போது பாலைக் கறக்கலாம்.
இதனால், அதிகக் கறவையுள்ள பசுக்களின் உடலில் இருந்து வெளியாகும் வெப்பம் குறையும்.
குளிர்ந்த நீரில் மாடுகளைக் குளிக்க வைக்கலாம். பண்ணையில் நோய்த் தொற்று இல்லாத சூழலை உருவாக்க வேண்டும்.
வெய்யில் நேரத்தில் மாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பவோ, வெளியே ஓட்டிச் செல்லவோ கூடாது.
போதுமான அளவில் பசுந்தீவனத்தை உற்பத்தி செய்து கொடுக்க வேண்டும்.
இது, நன்கு செரிக்க, அதிக உற்பத்திக்கு உதவும். முளைக்கட்டிய தானிய வகைத் தீவனங்களைப் பயன்படுத்துவது மிகவும் நல்லது.
பண்ணையைச் சுற்றிப் பசுமையான புல் தரையை உருவாக்க வேண்டும்.
இதனால், பண்ணையின் வெப்பத் தாக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும். அவரவர் சூழலுக்கு ஏற்ப, மாடுகளைத் தேர்வு செய்து வளர்ப்பது அவசியம்.
முனைவர் கோ.கலைச்செல்வி, உதவிப் பேராசிரியை, கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம், சென்னை – 600 051.