மரங்கள் மற்றும் புல்லிலிருந்து பெறப்படும் கூழான செல்லுலோசை அழுத்துவதன் மூலம் கிடைக்கும் மெல்லிய பொருள் காகிதம்.
இது, எழுத, அச்சிட, சிப்பமிட, சுத்தம் செய்ய, அழகு செய்ய மற்றும் கட்டுமான வேலைகளுக்குப் பயன்படுகிறது.
இன்று காகிதத்தின் தேவை கூடியுள்ளது. அதே நேரத்தில் இதை உற்பத்தி செய்வதற்கான மரங்கள் குறைந்து வருகின்றன.
அதனால், மரங்களை அழித்துச் சுற்றுச்சூழலைக் கெடுக்காமல், மாற்றுப் பொருள்களைக் கொண்டு,
குறிப்பாகக் கழிவுப் பொருள்களைக் கொண்டு, காகிதம் தயாரிக்கும் சிந்தனையும் ஆய்வுகளும் வளர்ந்து வருகின்றன.
இங்கே, காய்கனிக் கழிவுகள் மூலம் மேற்கொண்ட காகிதத் தயாரிப்பு ஆய்வைப் பற்றிப் பார்க்கலாம்.
காகித உற்பத்தியில் பயன்பட்ட பொருள்கள்
வாழை, கரும்பு, காய்கறிக் கழிவுகள், புல், முலாம் பழம், நீர்ப்பழம் மற்றும் மாதுளம் பழம்.
கழிவுப் பொருள்களைச் சேகரித்த இடங்கள்
வாழைத்தண்டு: கிள்ளிக்குளம் வேளாண்மைக் கல்லூரி திசு வளர்ப்புக் கூடம்.
நீர்ப்பழம், மாதுளம் பழம், முலாம் பழத் தோல்: கிள்ளிக்குளம் குளிர்பானக் கடைகள்.
காய்கனிக் கழிவுகள்: உணவு விடுதிகள்.
சாணம்: கிள்ளிக்குளம் மாட்டுத் தொழுவம்.
புல்: கிள்ளிக்குளம் கல்லூரி வயல் வரப்புகள்.
கரும்புச் சக்கை: வல்லநாடு கரும்பு பானக் கடைகள்.
காய்ந்த இலைகள்: மரங்களில் இருந்து உதிர்ந்தவை.
செயல்முறை
வாழைத் தண்டு, கரும்புச் சக்கை, உதிர்ந்த இலைகள், நீர்ப்பழத் தோல், மூலாம்பழத் தோல், மாதுளம் பழத்தோல்,
காய்கனிக் கழிவுகள், மாட்டுச் சாணம், புல் ஆகியன தனித்தனியாகச் சுத்தம் செய்யப்பட்டன.
அடுத்து, இவற்றைக் கூழாக மாற்றுவதற்காக, நீரில் 30 நிமிடங்கள் ஊற வைக்கப்பட்டன. அடுத்து, இவை தனித்தனியாக அரைத்துக் கூழாக்கப்பட்டன.
அடுத்து, ஒவ்வொரு கூழையும் காகிதத் தயாரிப்புக் கருவியில் இட்டுக் காகிதங்கள் உருவாக்கப்பட்டன.
இந்தக் காகிதங்களை எடுத்துச் சூடான காற்றடுப்பில் (Hot air oven) 108 டிகிரி செல்சியசில் 15 நிமிடம் வைத்து, காகிதத் தயாரிப்பின் இறுதி நிலை எட்டப்பட்டது.
இந்தத் தாள்கள் தயாரிப்பில் 50 சதம் காகிதக்கூழ் பயன்படுத்தப்பட்டது.
பிறகு அவற்றின் வேதிப் பண்புகளான, தன்மை, நிறம், கனம், அச்சடிக்கும் தன்மை, இழுவைத் திறன், கிழியும் திறன் அனைத்தும் வெவ்வேறு கருவிகள் மூலம் அறியப்பட்டன.
இவ்வகையில் கிடைத்த சாணித்தாள், முலாம்பழத் தாள், நீர்ப்பழத் தாள், காய்கறித் தாள், சாணித் தாள் ஆகியன சிறப்பானவை.
இந்தத் தாள் வகைகளை இன்னும் ஆராய்ந்து, அனைவரும் பயன்படுத்தும் தாள்களாக மாற்றலாம்.
வருங்காலத்தில் கழிவுப் பொருள்களை மறுசுழற்சி செய்து காகிதமாக மாற்றுவதன் மூலம், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கலாம். மேலும், மரங்களின் பயன்பாட்டைக் குறைக்கலாம்.
முனைவர் சா.செண்பகவள்ளி, முனைவர் த.பிரபு, முனைவர் சா.பொன்மணி, வேளாண்மைக் கல்லூரி, கிள்ளிக்குளம், திருநெல்வேலி மாவட்டம்.