சமச்சீர் உர மேலாண்மை என்பது, இயற்கை உரங்களான, பசுந்தாள் உரம், தொழுவுரம், மண்புழு உரம், மட்கிய தென்னை நார்க்கழிவு போன்றவற்றை,
செயற்கை உரங்களான, யூரியா, சூப்பர் பாஸ்பேட், பொட்டாசு, ஜிப்சம் மற்றும் உயிர் உரங்களான, அசோஸ் பயிரில்லம், பாஸ்போ பாக்டீரியா, பொட்டாஷ் பாக்டீரியா
மற்றும் ஜிங்க் பாக்டீரியா ஆகிய நுண் சத்துகளைச் சேர்த்து, சமச்சீர் உணவாக நெற்பயிருக்கு அளிப்பது ஆகும்.
கோடையில் சணப்பை, தக்கைப் பூண்டைப் பயிரிட்டு மடக்கி உழுவதால், மண்ணில் கரிமச் சத்துகள் கூடுவதுடன், பயிருக்கு வேண்டிய தழைச்சத்தும் கிடைக்கிறது.
மண்ணின் உற்பத்தித் திறனைக் கூட்டும் வகையில், ஏக்கருக்கு 5 டன் தொழுவுரம், 2 டன் மட்கிய தென்னை நார்க்கழிவு அல்லது 2 டன் மண்புழு உரத்தை இட வேண்டும்.
இதனால், மண்ணின் அங்ககத் தன்மையை நிலை நிறுத்தி, அதிக மகசூலைப் பெறலாம்.
இரசாயன உரங்களை, மண் ஆய்வின் முடிவின்படி இட வேண்டும். மண் ஆய்வின் மூலம், மண்ணில் இருந்து பயிருக்குக் கிடைக்கும் சத்துகளை அறியலாம்.
இதனால், குறைவாகவோ, கூடுதலாகவோ இரசாயன உரங்களை இடாமல், தேவையான அளவில் மட்டும் இட்டு, நல்ல மகசூலை எடுக்கலாம்.
இரும்பு மற்றும் துத்தநாகச் சத்துக் குறையுள்ள நிலங்களில், நடவின் போது, ஏக்கருக்கு 20 கிலோ இரும்பு சல்பேட்டையும், 10 கிலோ ஜிங்க் சல்பேட்டையும் நிலத்தில் இட வேண்டும்.
வேளாண்மைத் துறையின் நுண்ணுரக் கலவையை, ஏக்கருக்கு 5 கிலோ வீதம் எடுத்து, 20 கிலோ மணலில் கலந்து வயலில் இட வேண்டும்.
ஒரு ஏக்கருக்கான விதைகளை, 50 மி.லி. திரவ உயிர் உரத்தில் கலந்து, நேர்த்தி செய்ய வேண்டும்.
நாற்றுகளை, 150 மி.லி. திரவ உயிர் உரம் கலந்த கலவையில் நனைத்து நட வேண்டும்.
200 மி.லி. திரவ உயிர் உரத்தை, 10 கிலோ மணலில் கலந்து வயலில் தூவ வேண்டும்.
நடவு முடிந்து 3-5 நாட்களில், ஏக்கருக்கு 100 கிலோ அசோலாவை இட்டு, களை எடுக்கும் போது மிதித்து விட்டு, மண்ணில் மட்கச் செய்ய வேண்டும்.
இதனால், காற்றில் உள்ள தழைச்சத்தை மண்ணில் நிறுத்தி, நெற்பயிரின் வளர்ச்சிக்கு உதவலாம்.
இலைவழி உரமாக, 1 சத யூரியாக் கரைசல், 2 சத டிஏபி கரைசல் மற்றும் 1 சத பொட்டாசிய குளோரைடு கரைசலை,
பயிரில் குருத்து வரும் போது ஒரு முறையும், அடுத்து, 10 நாட்கள் கழித்தும் தெளிக்க வேண்டும்.
இந்த முறைகளை ஒருங்கே கடைப்பிடித்து, அதிக விலையுள்ள இரசாயன உரங்களைச் சரியான முறையில் பயன்படுத்தினால், திட்டமிட்ட நெல் மகசூலை அடையலாம்.
செய்தி: இயக்குநர், மாநில வேளாண்மை விரிவாக்க மேலாண்மை நிலையம், குடுமியான்மலை.