களர் உவர் நிலத்தை விளைநிலமாக மாற்றுவது எப்படி?

மிழகத்தில் 4.7 இலட்சம் எக்டர் பரப்பு, களர் உவர் நிலமாக உள்ளது. குறிப்பாக, காஞ்சிபுரம், திருச்சி, சேலம், தருமபுரி, வேலூர், திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில், களர் உவர் நிலங்கள் அதிகமாகும்.

பயிரிடும் நிலங்களிலும் களர் உவர் சிக்கல்கள் உள்ளன. இதனால், பயிர் எண்ணிக்கையைப் பராமரிக்க முடியவில்லை. நீரையும் சத்துகளையும் வேர்களால் எடுத்துக் கொள்ள இயலவில்லை.

எனவே, பயிர்களின் வளர்ச்சிக் குறைகிறது; கடுமையான மகசூல் இழப்பு ஏற்படுகிறது.

களர் உவர் நிலங்களில் நெல் மகசூல் குறைவாக உள்ளது. களர் உவரை மாற்ற அதிகமாகச் செலவிட வேண்டியுள்ளது.

பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, தானிய மகசூலைப் பெருக்க வேண்டிய கட்டாய நிலையில், களர் உவர் நிலங்களைச் சீர்திருத்திப் பயிரிட வேண்டியதும் அவசியம் ஆகிறது.

களர் நிலம்

மின் கடத்தும் திறன் 4 டெசிமனுக்குக் குறைவாக இருக்கும். ஆனால், அமில காரத் தன்மை 8.5க்கு மேல் இருக்கும். மாறும் தன்மையுள்ள சோடியம் 15%க்கு அதிகமாக இருக்கும்.

களரைத் தாங்கி வளரும் பயிர்கள்: கோ. 43, திருச்சி 1, திருச்சி 3 ஆகிய நெல் இரகங்கள், கரும்பு, பருத்தி, தினை, சாமை, வரகு, பனிவரகு, குதிரைவாலி ஆகிய பயிர்கள் அதிகக் களரைத் தாங்கி விளையும்.

உளுந்து, பாசிப்பயறு, மக்காச் சோளம் ஆகிய பயிர்கள் மிதமான களரைத் தாங்கி வளரும்.

சீர்திருத்தம்: களர் நிலத்தைச் சமப்படுத்தி, 25-30 சென்ட் பகுதிகளாகப் பிரித்து, முக்கிய மற்றும் கிளை வடிகால்களை அமைக்க வேண்டும்.

முதலில் நிலத்தைப் புழுதியாக உழ வேண்டும். அடுத்து, மண்ணாய்வு முடிவின்படி ஜிப்சத்தைச் சீராக இட்டு, நல்ல நீரைப் பாய்ச்சிச் சேற்றுழவைச் செய்ய வேண்டும்.

பிறகு, நான்கு அங்குல உயரத்தில், மூன்று நாட்களுக்கு நீரைத் தேக்கி வைக்க வேண்டும். இந்த நீர் வடிகால் மூலம் வடிந்து வெளியேறும்.

நீர் வடிந்த பிறகு மறுபடியும் நீரைப் பாய்ச்சி வடியவிட வேண்டும். இப்படி 3-4 முறை செய்ய வேண்டும்.

பிறகு நிலத்தில் ஈரம் காய்வதற்குள், சணப்பு அல்லது தக்கைப் பூண்டை விதைத்து, பூக்கும் போது மடக்கி உழ வேண்டும்.

அல்லது எக்டருக்கு 6.25 டன் தக்கைப் பூண்டை இட்டு மடக்கி உழுத பிறகு விதைக்க வேண்டும்.

தொழுவுரம், கம்போஸ்ட், தென்னை நார்க் கழிவு, மண்புழு உரம் ஆகியவற்றை அதிகளவில் நிலத்தில் இட வேண்டும்.

இட வேண்டியதை விட 25% நைட்ரஜனைக் கூடுதலாக இட வேண்டும். ஏக்கருக்கு 2 டன் வீதம் சர்க்கரை ஆலைக்கழிவை நிலத்தில் இட வேண்டும்.

நெல், பருத்தி அல்லது நெல், பாசிப்பயறு அல்லது நெல், தட்டைப்பயறு, உளுந்து என, பயிர்ச்சுழற்சி முறையைக் கையாள வேண்டும்.

உவர் நிலம்

பயிர்களின் வளர்ச்சி மற்றும் மகசூலைப் பாதிப்பதில், உவர்த் தன்மைக்கு மிகப்பெரிய பங்குண்டு.

மண்ணில் உப்புகள் அதிகமாக இருந்தால், பயிர்களுக்குத் தேவையான சத்துகள் கிடைக்காது. இதனால், பயிர்களின் வளர்ச்சித் தடைபடும்.

கால்சியம், மக்னீசியம், சோடியம் மற்றும் சல்பேட், நைட்ரேட், கார்பனேட் மற்றும் கைகார்பனேட், குளோரின் ஆகிய தாதுகள் அதிகமானால், நிலம், உவர் தன்மையை அடையும்.

உவர் நிலத்தில் மின் கடத்தும் திறன் 4 டெசிமனை விட மிஞ்சியிருக்கும். மண்ணின் கார அமிலநிலை 8.5க்கு மிகாமல் இருக்கும்.

மண்ணின் சோடிய அயனிகளின் பரிமாற்றத் திறன் 15%க்குக் கீழே இருக்கும்.

உவரைத் தாங்கி வளரும் பயிர்கள்: பருத்தியும் சோளமும் அதிகமான உவரைத் தாங்கி வளரும்.

கோ. 43, திருச்சி 1, திருச்சி 3 ஆகிய நெல் இரகங்கள், திருச்சி 1 இராகி, மக்காச் சோளம், சூரியகாந்தி ஆகிய பயிர்கள், மிதமான உவரைத் தாங்கி வளரும்.

சீர்திருத்தம்: உவர் நிலத்தைச் சிறிய பாத்திகளாகப் பிரித்து உவரற்ற நீர், மழைநீர் அல்லது வாய்க்கால் நீரைத் தேக்கி வைத்து, வடிகால் மூலம் உப்புகளை வெளியேற்ற வேண்டும்.

சணப்பு அல்லது தக்கைப் பூண்டை விதைத்து, பூக்கும் போது மடக்கி உழ வேண்டும்.

அல்லது எக்டருக்கு 6.25 டன் தக்கைப் பூண்டை வயலில் மடக்கி உழுத பிறகு விதைக்க வேண்டும். தொழுவுரம், கம்போஸ்ட், தென்னை நார்க்கழிவு மற்றும் மண்புழு உரத்தை நிலத்தில் அதிகளவில் இட வேண்டும்.


முனைவர் தி.பாலாஜி, முனைவர் ப.பாலசுப்பிரமணியன், வேளாண்மை அறிவியில் நிலையம், இராமநாதபுரம்.

முனைவர் பெ.வீரமணி, வேளாண்மை அறிவியல் நிலையம், விரிஞ்சிபுரம், வேலூர் மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!