கறவை மாட்டுக்கு மடிவீக்க நோய் வராமலிருக்க, மாட்டுத் தொழுவத்தைச் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். சாணமும் சிறுநீரும் தொழுவத்தில் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பாலைக் கறப்பதற்கு முன், மடியை வெதுவெதுப்பான நீரால் கழுவி, உலர்ந்த, சுத்தமான துணியால் துடைக்க வேண்டும்.
பால் கறவையாளர்கள், கைகளைச் சுத்தப்படுத்திக் கொண்டு பாலைக் கறக்க வேண்டும். ஒருவேளை மடிநோய் தாக்கப்பட்ட மாட்டில் பாலைக் கறக்க வேண்டிய நிலை இருந்தால், அதற்கு முன் மற்ற கறவை மாடுகளில் பாலைக் கறந்துவிட வேண்டும்.
மடியில் பால் தேங்காமல் முழுவதுமாகக் கறந்துவிட வேண்டும். மடிவீக்க நோய் வராமல் தடுக்க, கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி, கன்று போடுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே, காம்பின் வழியாக மருந்தைச் செலுத்தலாம்.
பாதிக்கப்பட்ட காம்பை வம்பாகப் பிடித்து இழுத்துப் பாலைக் கறக்கக் கூடாது. நல்ல பாலோடு மடிநோய்ப் பாலைக் கலக்கக்கூடாது. மடிநோய்ப் பாலில் பாக்டீரியாக்கள் அதிகமாக இருக்கும் என்பதால், அந்தப் பாலை அருந்துவோர்க்கு வயிற்றுப்போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால், மடிநோய்ப் பாலைக் கறந்து பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த வேண்டும்.