சுண்ணாம்பு மண் என்பது, கால்சிய கார்பனேட் அதிகமுள்ள மண்ணாகும். இந்த மண், பயிர்கள் விளைவதில் சிக்கலை ஏற்படுத்தும்.
இவ்வகை மண், சுண்ணாம்புப் பாறைகள் மற்றும் சிதைந்த பாறை இடுக்குகளில் இருந்து உருவாகும். இம்மண்ணின் கார, அமிலத் தன்மை 7.6 முதல் 8.3 வரை இருக்கும்.
இதை நல்ல நிலமாக மாற்ற, பசுந்தாள் உரத்தை அதிகமாக இட வேண்டும். தக்கைப் பூண்டைப் பயிரிட்டு, அது பூக்கும் போது மடக்கி உழ வேண்டும்.
ஏக்கருக்கு 5 டன் வீதம் கரும்பாலைக் கழிவை இட வேண்டும். பாசனநீர் தேங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
பரிந்துரை அளவில் கந்தக உரத்தை இட வேண்டும். கந்தகம் கலந்துள்ள உரங்களை மட்டும் பயன்படுத்த வேண்டும்.
எடுத்துக் காட்டாக, பாக்டம்பாஸ் மற்றும் பாரம்பாஸ் உரங்களை, பயிருக்கேற்ப, பரிந்துரை அளவில், பிரித்து இட வேண்டும்.
நுண் உரங்களான துத்தநாகம், தாமிரம், இரும்பு போன்றவை, பயிர்களுக்குக் கிடைக்கும் வகையில், நுண்ணுரக் கலவையை இட வேண்டும்.
தழைச்சத்தை, அம்மோனிய சல்பேட், அம்மோனிய பாஸ்பேட் சல்பேட்டாக இட வேண்டும்.
மணிச்சத்தை, அம்மோனிய பாஸ்பேட் சல்பேட், டிஏபி, காம்பளக்சாக இட வேண்டும்.
சாம்பல் சத்தை, பொட்டாசிய சல்பேட்டாக இட வேண்டும். இப்படி இடுவதால் உரப்பயனும், பயிர் விளைச்சலும் அதிகமாகும்.
தொகுப்பு: பசுமை