மண்புழு உரம் தயாரிக்க உதவும் மாடி வீடு, மட்கும் கழிவுகள் இலை தழைகள், தாவரக் கழிவுகள், வேண்டிய அளவில் தாராளமாகக் கிடைக்கும் இடத்தில் இருப்பது நல்லது.
கால்நடைக் கழிவு, குறிப்பாகப் பசுஞ்சாணம் அருகிலேயே கிடைக்க வேண்டும். மண்புழு உரத்தைப் பயன்படுத்த மற்றும் விற்பனை செய்ய, போக்குவரத்து வசதி மிகவும் முக்கியம்.
இடத்தேர்வு
மாடியில் மேடான இடத்தை மண்புழு உரத் தயாரிப்புக்குத் தேர்வு செய்ய வேண்டும். ஏனெனில், நீர்த் தேங்காத இடத்தின் ஈரப்பதம் 40 முதல் 60 சதம் வரை இருக்கும்.
ஆனால், நீர்த் தேங்கும் இடங்களில் 60 சதத்துக்கு மேல் ஈரப்பதம் இருக்கும் என்பதால், புழுக்கள் இறந்துவிட வாய்ப்பு உள்ளது. மண்புழுப் படுக்கைக்கு நிழல் வசதியும் இருக்க வேண்டும்.
கழிவுகளை நொறுக்குதல்
மட்கும் கழிவுகளைச் சிறு சிறு துகள்களாக மாற்ற, சிரட்டர் என்னும் இயந்திரம் இருந்தால் அருமையாக இருக்கும். சிறு துகள்களாகச் சிதறும் போது கழிவுகளின் மேற்பரப்புப் பகுதி அதிகமாகி, நுண்ணுயிரிகள் தீவிரமாகச் செயல்படும்.
மட்கிய கழிவின் அவசியம்
கழிவு மட்கும் போது அதன் வெப்பநிலை 75 டிகிரி செல்சியஸ் வரை உயரும். இந்த வெப்ப நிலையில் மண் புழுக்கள் இறந்து விடும்.
எனவே, மண்புழு உரம் தயாரிக்கப் பயன்படும் கழிவுகளை மட்க வைக்க, மூன்று பங்கு கழிவுக்கு ஒரு பங்கு பச்சைச் சாணம் வீதம் கலந்து, ஒரு மாதம் குவித்து வைத்து மட்க விட வேண்டும்.
அதற்குப் பிறகு, இதை மண்புழு உரத் தயாரிப்புத் தொட்டியில் இட்டு, அதில் மண் புழுக்களை விட வேண்டும்.
மண் புழுக்கள் வளர்ந்து உரத் தயாரிப்பைத் தொடங்கிய பிறகு, உரத் தொட்டியில் இடும் மட்குக் கழிவை, சாணத்தில் கலந்து மட்க வைத்து இட வேண்டும் என்பது கட்டாயம் இல்லை.
முதலில், மட்கிய கழிவு இல்லாமல் மண்புழு உரம் இல்லை என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு கன மீட்டர் கழிவை மண்புழு உரமாக மாற்ற, ஒரு கிலோ மண் புழுக்கள், அதாவது, 1,000 புழுக்கள் தேவைப்படும். இது, இரகத்துக்கு இரகம் மாறுபடும்.
பாதுகாப்பு
மண்புழு உரத் தொட்டிக்கு அருகில் கோழிகளை வளர்க்கக் கூடாது. பூனைகளை வளர்க்கக் கூடாது. எலி மற்றும் பெருச்சாளி அறவே ஆகாது.
நல்ல திடமான மண் புழுக்களை எறும்புகள் எதுவும் செய்யாது. காயம்பட்ட மண் புழுக்களை, எறும்புகள் கூட்டம் கூட்டமாகத் தேடி வந்து சாப்பிடும்.
இதற்குத் தீர்வாக, எறும்புக் கொல்லி மருந்தை வாங்கி, மண் புழுக்களில் படாமல், எறும்புகள் வரும் பாதையில் இடலாம்.
தொட்டியைச் சுற்றி அகழியை அமைத்து, அதில் நீரை நிரப்பியும் வைக்கலாம். மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடியை இட்டாலும், எறும்புகள் வராது என்று சொல்கிறார்கள்.
எறும்புக்கொல்லி மருந்தைக் கடைசி ஆயுதமாக மட்டும் பயன்படுத்த வேண்டும். பிள்ளைப்பூச்சி, மரவட்டை, பூரான் ஆகியனவும் மண் புழுக்களைச் சாப்பிடும். எனவே, அவற்றையும் கட்டுப்படுத்த வேண்டும்.
பறவைகளும் மண் புழுக்களைச் சாப்பிடும். எனவே, அவற்றில் இருந்தும் மண் புழுக்களைப் பாதுகாக்க வேண்டும்,
முதல் படுக்கைத் தயாரிப்பு
நாட்டு மண்புழு அல்லது புதிய மண் புழுக்களின் திறனை அறியும் உரப் படுக்கையை முதலில் தயாரிக்க வேண்டும். இதற்கு, தென்னை நார்க்கழிவு அல்லது கரும்புத் தோகைகளைத் துண்டுகளாக நறுக்கி, மண்புழு உரத் தொட்டியின் அடியில் சுமார் 3 செ.மீ. உயரம் பரப்பலாம்.
அதற்கு மேல், 3 செ.மணலை 3 செ.மீ., செம்மண்ணை 3 செ.மீ. உயரம் பரப்ப வேண்டும். செம்மண் கிடைக்காத நிலையில் தோட்ட மண்ணைப் பயன்படுத்தலாம்.
இப்படித் தயார் செய்த படுக்கையில் நீரைத் தெளிக்க வேண்டும். வணிக நோக்கிலான மண்புழுக்கள் எனில், மட்கிய உரத்தை அப்படியே தொட்டியில் இட்டு மண் புழுக்களை விடலாம். தொட்டியில் இட்ட உரம் சூடாகக் கூடாது.
மண்புழு உரம் மற்றும் மண்புழு அறுவடை
வாரம் ஒருமுறை மண்புழு உரத்தையும், மண் புழுக்களையும் அறுவடை செய்ய வேண்டும். உரப்படுக்கை மேலுள்ள மண்புழுக் கழிவை, மண் புழுக்கள் தெரியும் இடம் வரை சேகரித்து, நிழலில் குவிக்க வேண்டும். இது, மண்புழு இரகத்துக்கு ஏற்ப மாறுபடும்.
மண் புழுக்களை அறுவடை செய்ய, மாட்டுச் சாணப் பந்துகளை உரத் தொட்டியில் ஆங்காங்கே புதைத்து வைக்க வேண்டும்.
அப்போது, மண் புழுக்கள் சாணப் பந்துகளை நோக்கி வந்து விடும். இதையறிந்து சாணப் பந்துகளை எடுத்தால், அவற்றுடன் மண் புழுக்களும் வந்து விடும்.
அறுவடை செய்த மண் புழுக்களை விற்கலாம் அல்லது மீண்டும் உரம் தயாரிக்கப் பயன்படுத்தலாம்.
முனைவர் சி.பிரபாகரன், உதவிப் பேராசிரியர், மகளிர் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருச்சி.