பாம்புகள் கடித்து இறப்போரின் பட்டியலில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஐம்பதாயிரம் பேர்கள் பாம்புக் கடியால் இறக்கிறார்கள்.
பெரும்பாலான பாம்புக்கடி இறப்புக்கு, மூட நம்பிக்கை வைத்திய முறைகளே காரணமாகும்.
தவறான வைத்திய முறைகள்
பாம்பு கடித்த இடத்தில் இருக்கும் தசையை வெட்டி எடுக்க வேண்டும், அல்லது கடிபட்ட இடத்துக்கு மேல் கயிறால் இறுக்கமாகக் கட்ட வேண்டும் என்பது.
பாம்பு கடித்த உடனே அந்த இடத்தில் வாயை வைத்து இரத்தத்தை உறிஞ்சி வெளியே எடுத்து விட்டால் பிழைத்து விடலாம் என்பது.
இயற்கை மருத்துவம் என்னும் பெயரில், பாம்பு கடித்த இடத்துக்கு அருகில் கிடைக்கும் பச்சையிலைச் சாற்றை ஊற்ற வேண்டும் என்பது.
எவ்வகைப் பாம்பு கடித்தது என்பதை மருத்துவரிடம் தெரியப்படுத்த, அந்தப் பாம்பின் வகையைக் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும் என்பது.
முடிந்தால் அதை அடித்துக் கொன்று மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பது.
இவையெல்லாம் தேவையற்றவை. இத்தகைய செயல்களால் நேரம் வீணாகி, பாம்புக்கடிக்கு ஆளானவர் உயிரிழக்கும் சூழல் தான் அதிகமாகும்.
சரியான சிகிச்சை முறைகள்
பாம்பு கடித்த இடத்தினருகே கயிறால் இறுக்கமாகக் கட்டுவதால் எந்தப் பயனும் இருக்காது.
ஒருவேளை அப்படிக் கட்டினால், அந்தக் கட்டை, நல்ல மருத்துவ வசதி மற்றும் மருத்துவர்கள் உள்ள மருத்துவ மனையில் வைத்து அகற்றுவதே நல்லது.
ஏனெனில், இறுக்கமான கட்டைப் பிரிக்கும் போது அந்த இடத்தில் இருந்து இரத்த ஓட்டம் அதிகமாகும். இதனால், உடலின் பிற பாகங்களுக்கும் சென்று பாதிப்பும் அதிகமாகும்.
கடித்த பாம்பைப் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டு நேரத்தைக் கடத்துவதை விட, கடிபட்டவரை மருத்துவமனைக்கு விரைவாகக் கொண்டு செல்வதில் தான் கவனத்தைச் செலுத்த வேண்டும்.
ஏனெனில், எந்தப் பாம்பு கடித்தாலும் வழங்கப்படுவது ஒரே மருந்து தான்.
கடிபட்டவர் இயன்றவரை உடலை அசைக்காமல் இருக்க வேண்டும். பாரம்பரிய சிகிச்சை என்னும் பெயரில், ஆபத்தை விளைவிக்கும் முதலுதவி சிகிச்சை எதையும் செய்யக் கூடாது.
மருத்துவ வசதி கிடைக்கும் வரை, கடிபட்டவரை இடது பக்கமாகப் படுக்க வைக்க வேண்டும்.
கடிபட்டவர் பயத்திலிருந்து விடுபட, அவருக்குத் தன்னம்பிக்கை ஊட்ட வேண்டும்.
பாம்பு கடித்த பயத்தில் ஓடுவதோ, இறந்து விடுவோம் என்னும் பயத்தில் அழுவதோ கூடாது.
ஏனெனில், இதனால் கடிபட்டவரின் இரத்த ஓட்டம் அதிகமாகி, உடல் முழுவதும் விஷம் வேகமாகப் பரவும்.
பாம்புக் கடியிலிருந்து தப்பும் முறைகள்
வீட்டைச் சுற்றிலும் உப்புக் கல்லைப் போட வேண்டும். வீட்டைச் சுற்றிலும் சுத்தமாக இருக்க வேண்டும்.
தரையில் படுத்து உறங்குவதைத் தவிர்க்க வேண்டும். அழுக்குத் துணிகளைச் சேர்த்து வைக்காமல் உடனுக்குடன் துவைத்து வைக்க வேண்டும்.
இரவில் கழிவறையைக் கவனமாகப் பயன்படுத்த வேண்டும். கழிவறை மற்றும் குளியல் அறை சுத்தமாக இருக்க வேண்டும்.
பாம்பு நடமாட்டம் இருந்தால், வீட்டைச் சுற்றிலும் எலுமிச்சை, பூண்டு மற்றும் வெங்காயம் கலந்த நீரைத் தெளிக்கலாம்.
வீட்டைச் சுற்றி எலிவளை, பொந்து போன்றவை இருந்தால், அவற்றை நன்கு அடைத்து பிளீச்சிங் பொடியைப் போட வேண்டும்.
வீட்டை அடிக்கடி சுத்தம் செய்து, சாம்பிராணி, பத்தியைப் பொருத்தி வைக்க வேண்டும்.
வீட்டிலும் தோட்டத்திலும், சிறியா நங்கை, பெரியா நங்கை, நாகதாளி, ஆகாசக் கருடன் ஆகியவற்றில் ஒன்றை வளர்க்கலாம். ஏனெனில் இவற்றின் வாசனைக்கே பாம்பு வராது.
வயல் வெளிகளில் கவனமாக நடந்து செல்ல வேண்டும். இருட்டில் செல்லக் கூடாது.
முனைவர் கோ.கலைச்செல்வி, ந.ஜெயந்தி, கோ.பாலகிருஷ்ணன், பல்கலைக் கழக மைய ஆய்வகம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம். சென்னை 600 051.