ஆக்சிடோசின் (oxytocin) என்னும் ஹார்மோனை, காதல் ஹார்மோன் (love hormone) என்பார்கள். தாயின் கருப்பையில் இருந்து குழந்தை வெளியே வருவதற்கு, நஞ்சுக்கொடி வெளியேற, பால் சுரக்க, இந்த ஹார்மோன் அவசியம். இதைப் பலர் தவறாகப் பயன்படுத்துவதால், இந்த ஊசிமருந்து தடை செய்யப்பட்டு உள்ளது.
சென்னை போன்ற பெரு நகரங்களில் பால் நுகர்வோரின் வீடுகளுக்கே மாடுகளை ஓட்டிச் சென்று புத்தம் புதிதாகப் (on the spot farm fresh) பாலைக் கறந்து தருவார்கள்.
இப்படிப் பாலைக் கறப்பதற்கு முன், மாட்டின் தொடையில் இந்த ஆக்சிடோசின் ஊசியைப் போடுவார்கள். சிறிது நேரத்தில் மாட்டின் மடி பாலைச் சுரந்து விடும். உடனே பாலைக் கறந்து கொடுத்து விடுவார்கள்.
இப்படி, ஆக்சிடோசின் ஊசி மூலம் கறந்த பாலைக் குடித்தால், 8-9 வயது சிறுமிகள் கூட அதிக வளர்ச்சியைப் பெற்று வயதுக்கு வந்து விடுவார்கள்.
பதின்ம வயதிலுள்ள சிறுமிகளுக்கு, பெரிய பெண்களுக்கு உள்ளதைப் போல மார்பகங்கள் வளர்ந்து விடும். இதை ஆங்கிலத்தில் கைனகோ மாஸ்டியா (gynego mastia) என்பார்கள்.
இப்படி வளர்ந்து விட்டால், அறுவை சிகிச்சை செய்து தான் சரிப்படுத்த வேண்டும்.
குழந்தைகளுக்கு ஹார்மோன்கள் சீராகச் சுரக்காமல் (hormonal inbalance) போவதால் வளர்ச்சித் தடைப்படும்.
பெரியவர்களுக்கு கார்டியாக் அரிதீமியா போன்ற இதய நோய்கள் வரும். குறைந்த அல்லது அதிக இரத்தழுத்தம் ஏற்படும். பெண்களின் மாதவிடாயில் சிக்கல் வரும். கண் மற்றும் சிறுநீரக நோய்கள் வரும், ஞாபக சக்தி குறைந்து போகும்.
மெலாமைன் (melamine) என்பது கல்லுப்பைப் போல இருக்கும். இது, நெகிழிப் பொருள்கள், காயங்களை ஆற்ற உதவும் பிளாஸ்திரிகள், ஒயிட் போர்டுகள் (white board) தயாரிப்பில் பயன்படும் பொருளாகும்.
பாலில் நீரைக் கலப்பதால் ஏற்படும் நைட்ரஜன் சத்துக் குறையைச் சரி செய்ய இந்த மெலாமைன், பாலில் கலப்படம் செய்யப் படுகிறது.
இதனால், சிறுநீரகக் கற்கள் தோன்றும். இந்தக் கற்களால் சிறுநீர்ப் பாதையில் அடைப்பு ஏற்படும்.
இதனால், சிறுநீர் உற்பத்தியில் பாதிப்பு உண்டாகும். சிறுநீரகம் செயல்படாமல் போய் விடும். சிறுநீரில் இரத்தம் கலந்து வரும்.
சிறுநீரைக் கழிப்பதில் எரிச்சல் ஏற்படும். சில நேரம் சிறுநீரே வராமல் போய் விடும். இதனால், இரத்தழுத்தம் அதிகமாகி, குழந்தைகள் இறக்க நேரிடும்.
பாலில் ஸ்டார்ச்சைக் கலந்தால் வயிற்றுப்போக்கு ஏற்படும். சர்க்கரை நோய் உள்ளோர்க்கு மிகவும் ஆபத்தாக முடியும்.
யூரியா கலந்த பாலைக் குடித்தால், சிறுநீரகம் பாதிக்கப்படும். சோடியம் கார்பனேட், அம்மோனியம் பை கார்பனேட் கலந்த பாலைக் குடித்தால், ஹார்மோன் சுரப்பிகள் பாதிக்கப்படும். இதனால், உடல் வளர்ச்சியும், இனப்பெருக்கமும் பாதிக்கப்படும்.
டாக்டர் ஏ.ஆர்.ஜெகத் நாராயணன், மேனாள் இணை இயக்குநர், கால்நடைப் பராமரிப்புத் துறை, சேலம்.