பசுந்தாள் உரப்பயிர்கள் காற்றில் உள்ள தழைச்சத்தைக் கிரகித்து 70% வரை வேர் முடிச்சுகளில் நிலை நிறுத்தி, மண் வளமாக உதவுகின்றன.
மண்ணரிப்பைத் தடுக்கும் பிடிப்புப் பயிராக, நிழற் பயிராக, மூடுபயிராக, தீவனப் பயிராகப் பயன்படு கின்றன. மண்ணில் கரிமப் பொருள்களை அதிகரிக்கச் செய்கின்றன.
நுண் சத்துகளை உறிஞ்சி வைத்துக் கொண்டு, பயிருக்குத் தேவைப்படும் போது எளிதில் கிடைக்கச் செய்கின்றன. இதனால், சத்துகள் விரயமாவது தடுக்கப் படுகிறது.
எனவே, அனைத்து விவசாயிகளும் தக்கைப் பூண்டு, கொளுஞ்சி, அகத்தி, சீமையகத்தி, பில்லிப்பயறு, காராமணி போன்ற பசுந்தாள் உரப் பயிர்களைப் பயிரிட்டு, பூக்கும் போது, மடக்கி உழுது மண்வளம் பெருக்கி, அதிக மகசூலைப் பெறலாம்.
உயிர் உரங்களில் அசோஸ் பைரில்லமும், ரைசோபியமும் தழைச்சத்தை நிலை நிறுத்தும் வேலையைச் செய்கின்றன.
பாஸ்போ பாக்டீரியா மணிச்சத்தைக் கரைக்கும் உயிர் உரமாகும். இது, மண்ணில் உயிரியல் இயக்கத்தைக் கூட்டும் வேலையைச் செய்கிறது.
இயற்கை வளத்தைத் தக்க வைக்கிறது. பயிர்கள் வறட்சியைத் தாங்கி வளர உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது. விதைகளின் முளைப்புத் திறன் மற்றும் பூப்பிடிப்பைக் கூட்டுகிறது.
எனவே, உயிர் உரங்களை இட்டால், செய்ற்கைத் தழைச்சத்து மற்றும் மணிச்சத்தை 25 சதவீதம் குறைவாக இட்டு, சாகுபடி செலவைக் குறைக்கலாம்.
தொகுப்பு: பசுமை