மூங்கில், புல் வகையைச் சேர்ந்த தாவரமாகும். புல் வகையில் மிகவும் பெரிதாக வளரக் கூடியது மூங்கில் தான். சில மரங்கள் ஒருநாளில் ஒரு மீட்டர் உயரம் வரை வளரும்.
மூங்கிலில் ஏறத்தாழ ஆயிரம் சிற்றினங்கள் உள்ளன. உலகம் முழுவதும் 1,500 க்கும் மேற்பட்ட மூங்கில் வகைகள் வளர்க்கப் படுகின்றன.
மூங்கில் 40 மீட்டர் உயரம் வரை வளரும். இதன் பருமன் 1 முதல் 30 செ.மீ. வரை இருக்கும். மலைச் சரிவுகளும், வறண்ட பகுதிகளும் மூங்கில் வளர்வதற்கு ஏற்றவை.
சீனா, இந்தியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, நேபாளம், வங்காளம், கென்யா ஆகிய நாடுகள், மூங்கில் உற்பத்தியில் முன்னணியில் இருக்கின்றன.
இந்தியாவில் 156 வகை மூங்கில் இனங்கள் பயிரிடப் படுகின்றன. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள், மேற்கு வங்காளம், ஒடிசா, ஆந்திரம், மராட்டியம் போன்ற மாநிலங்கள் முதலிடம் வகிக்கின்றன.
மூங்கில் ஆசிய மருத்துவத்தில் மகத்தானது. சீனாவிலும் ஜப்பானிலும் மூங்கில் அதிகமாகும். சீன மூங்கிலை வாழ்க்கையுடன் ஒப்பிட முடியும்.
முதல் ஐந்து மாதங்களில் இந்த மூங்கில் வளரவே வளராது. ஆனால், ஆறாம் மாதத்தில் இதன் உயரம் 90 அடியாக இருக்கும்.
மூங்கிலில் இருந்து கிடைக்கும் மூங்கில் தண்டுகள், மூங்கில் குருத்து, மூங்குருத்து எனப்படும். ஆசியாவில் மூங்கில் தண்டுகளைச் சமையலில் சுவைக்காகச் சேர்க்கின்றனர்.
இதில் அதிகமான கலோரியோ, கொழுப்போ கிடையாது. உண்மையில் இது, நலம் தரவல்லது. அஸ்பாரகசைப் போல மென்மை மிக்கது. இது, சீனா, தைவான், தென்கிழக்கு நாடுகளில் பருவகாலச் சுவைமிகு ரெசிபியாக உள்ளது.
பச்சைத் தங்கம் என்னும் சிறப்புப் பெயரைக் கொண்ட மூங்கில், வேகமாக வளரும் புல்லினத்தைச் சேர்ந்த மரமாகும். தினமும் 1-3 அடி உயரம் வளரும்.
மூங்கிலில் பலகைகள் உள்ளன. பெரும்பாலான மூங்கில் வகைகள் நடுப்பகுதியில் துளை உள்ளவை. மூன்று அங்குலத்துக்குக் குறைவாக உள்ள வகைகளைச் சிறுவாரை என்றும்,
அதற்கு அதிகமாக உள்ளவற்றைப் பெருவாரை என்றும் வகைப்படுத்தி உள்ளனர். மூங்கில் உற்பத்தியில், சீனாவுக்கு அடுத்த இடத்தில் இருப்பது இந்தியா தான்.
உலகின் பல்வேறு மக்களின் உணவில், மூங்கில் குருத்து முக்கியமாக இருக்கிறது. இதில், புரதம், பாஸ்பரஸ், நார்ச்சத்து, பொட்டாசியம், சுண்ணாம்பு, இரும்புச்சத்து, உயிர்ச்சத்து பி3 என, பல்வேறு சத்துகள் உள்ளன.
நூறு கிராம் மூங்கில் குருத்தில் உள்ள சத்துகள்
மாவுச்சத்து: 5.2 கிராம்
புரதச்சத்து: 2.60 கிராம்
மொத்தக் கொழுப்பு: 0.3 கிராம்
கொலஸ்ட்ரால்: 0 மை.கி.
நார்ச்சத்து: 2.2 கிராம்
சுண்ணாம்பு: 8 மி.கி.
இரும்புச்சத்து: 0.31 மி.கி.
பொட்டாசியம்: 78 மி.கி.
சோடியம்: 16 மி.கி.
மூங்கில் குருத்தைப் பயன்படுத்தும் விதம்
மூங்கில் குருத்தைச் சிறு துண்டுகளாக வெட்டி, உப்பு நீரில் 30 நிமிடங்கள் ஊற வைத்து எடுத்துச் சமைக்கப் பயன்படுத்தலாம்.
சாலட் மற்றும் ஊறுகாயுடன் சேர்த்துச் சமைத்துச் சாப்பிடலாம். காய்கறிகள் மற்றும் கோழி இறைச்சியுடன் சேர்த்து உண்ணலாம்.
சத்துமாவு மற்றும் பிழியப்பட்ட உணவுக் கலவையில் சேர்த்துப் பயன்படுத்தலாம். அளவாகப் பயன்படுத்துவது நல்லது.
மூங்கில் குருத்தின் மருத்துவக் குணங்கள்
பாக்டீரியாவை எதிர்க்கும் பண்பு மிக்கது. நார்ச்சத்து மிகுந்தது. பைட்டோ கெமிக்கல் எனப்படும் பண்புள்ளது. பொட்டாசியம் அதிகமாக இருப்பதால் இதயத்துக்கு நல்லது.
உடல் பருமன் மற்றும் அதிக எடையுள்ள அனைவருக்கும் மூங்கில் குருத்துப் பயனுள்ளதாக அமையும். இதில், மூங்கில் தளிருக்கு முக்கியப் பங்குண்டு.
நாம் நலமாக வாழ, நுரையீரல் சிறப்பாக இயங்க வேண்டும். ஆனால், புகைக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு நுரையீரல் ஒவ்வாமை அதிகமாகும்.
மூங்கில் தண்டிலிருந்து எடுக்கப்படும் சாறு, நுரையீரல் சார்ந்த ஆஸ்துமா, இருமல், பித்தப்பைச் சிக்கலுக்கு மருந்தாக அமைகிறது.
மூங்கில் தளிரில் உள்ள பைட்டோ ஸ்டிரால் மற்றும் பைட்டோ நியூட்ரியன்ஸ், உடலில் தீங்கு விளைவிக்கும் எல்.டி.எல். என்னும் குறைந்த அடர்த்தியுள்ள கொழுப்பைக் கரைக்க உதவுகிறது.
இது, தமனிகளில் இருந்து கொழுப்பை எளிதாக்க உதவுகிறது. மேலும், உடல் முழுவதும் இரத்த ஓட்டம் எளிதாக இருக்க உதவுகிறது.
மூங்கில் குருத்து வாய்ப் புண்ணுக்கு நல்லது. இதிலுள்ள உயிர்ச் சத்துகள் மற்றும் தாதுகள், உடலின் நோயெதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்த உதவும்.
மூங்கில் குருத்தில் உள்ள நார்ச்சத்து, வயிற்றுப் போக்குக்குச் சிறந்தது. இது, குடல் இயக்கத்தை மேம்படுத்தும்.
மூங்கிலில், நுண்ணுயிர்க் கொல்லி, ஒவ்வாமை எதிர்ப்புப் பண்பு போன்றவை உண்டு. இது, செல் வளர்ச்சிக்கு உதவும்.
குடற் புழுக்கள் மற்றும் வலிக்கு மூங்கில் குருத்துச் சிறந்தது. குடல் காயங்களை ஆற்றும்.
மூங்கில் குருத்தில் பொட்டாசியம் நிறைந்து உள்ளது. உடலில் பொட்டாசியம் நிறைவாக இருந்தால், இரத்தழுத்தம் சீராக இருக்கும்.
இரத்தழுத்தம் குறையாமல் இருப்பவர்கள், மூங்கில் குருத்தை உணவில் சேர்த்து வந்தால், இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க முடியும்.
முனைவர் ஜெ.செல்வி, முனைவர் க.ஹேமலதா, உணவியல் மற்றும் சத்தியல் துறை, சமுதாய அறிவியல் கல்லூரி, மதுரை. முனைவர் தி.உமா மகேஸ்வரி, அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி, திருச்சி.