கறவை மாடுகளைத் தாக்கும் நோய்களில் மடிவீக்க நோய் முக்கியமானது. இந்நோய் அதிகளவில் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும். சிறு சிறு சுகாதார முறைகளைப் பின்பற்றினால் மடிநோய்த் தொற்றைத் தவிர்க்கலாம்.
பசுக்கள் இடது பக்கமிருந்து பாலைத் தரும் இயல்புள்ளவை. இவற்றில் பாலைக் கறக்கும் போது, இரண்டு கைகளைக் கொண்டு கறப்பது நல்லது.
முதல் சில துளிகளைப் பாத்திரத்தில் விடாமல் பீய்ச்சிக் கீழே விட்டுவிட வேண்டும். இந்தத் துளிகளில் பாக்டீரியாக்கள் நிறைய இருக்கும் என்பதால், இந்த முறையைப் பின்பற்ற வேண்டும்.
இரு விரல்களைக் கொண்டோ அல்லது எல்லா விரல்களையும் கொண்டோ பாலைக் கறக்கலாம்.
இருவிரல் முறையில் கட்டை விரலுக்கும், ஆள்காட்டி விரலுக்கும் இடையில் காம்புகளைப் பிடித்து, சிறிது அழுத்தம் தந்து கீழே இழுத்துக் கறக்க வேண்டும்.
எல்லா விரல்களையும் பயன்படுத்தும் போது, காம்பைப் பிடித்து உள்ளங் கையில் அழுத்தினால், கன்றுக்கு ஊட்டுவதைப் போல, எல்லாப் பக்கமும் ஒரே அழுத்தம் ஏற்படும்.
இருவிரல் முறையில் ஒரே அழுத்தம் கிடைக்காது என்பதால், காம்பின் மேல் பாகம் பாதிக்கப்பட்டு, சிறு காயங்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
காம்புகள் மிகச் சிறியளவில் இருந்தால் மட்டுமே இருவிரல் முறையைப் பயன்படுத்த வேண்டும். மிக முக்கியமாக, ஈரமான கைகளால் பால் கறப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
மடித் தூய்மை
பசுவின் மடியில் அழுக்கு அதிகமாகச் சேரும். எனவே, பாலைக் கறக்கு முன், மடியை நன்றாகக் கழுவ வேண்டும். காம்புகளும் சுத்தமாக இருக்க வேண்டும்.
முடிந்தால் கழுவிய மடியை நல்ல துணி மூலம் துடைப்பதும் நல்லது. ஒருமுறை பயன்படும் கைத்துடைப்புக் காகிதத்தைப் பயன்படுத்தலாம்.
கறவையின் போது மாட்டின் உரோமங்கள் பாலில் விழுவதைத் தவிர்க்க வேண்டும். இதற்கு, மாடுகளைக் குளிப்பாட்டும் போது, நன்கு தேய்த்து உடலில் உதிரும் ரோமங்களை அகற்ற வேண்டும்.
மாட்டுச் சாணத்தால் ஈக்கள் மொய்க்கும். எனவே, தொழுவத்தை அடிக்கடி கிருமி நாசினியால் கழுவ வேண்டும்.
மாட்டுக் கழிவுகளை அடிக்கடி நீக்கி, தொழுவத்தைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். மேலும், தொழுவத்தை விட்டுச் சிறிது தூரத்தில் எருக்குழியை அமைக்க வேண்டும்.
மாட்டுத் தொழுவத்தின் அருகே நீர்த் தேங்கினால் அதை உடனடியாக அகற்ற வேண்டும். தொழுவம் சற்று மேடான இடத்தில் அமைவது நல்லது.
தொழுவத்தில் அவ்வப்போது சாம்பிராணி புகையைப் போடுவதன் மூலம், மாடுகளைத் தாக்கும் நோய்த் தொற்றுகளைத் தவிர்க்கலாம்.
பால் கறவையின் போது, மணம் வீசும் தீவனங்களை மாடுகளுக்கு அளிக்கக் கூடாது. ஏனெனில், அந்த வாடை பாலில் எளிதில் தொற்றிக் கொள்ளும்.
கறவையாளர் கைச்சுத்தம்
கறவையாளர் மடியைத் தொடுமுன், தனது கைகளைச் சோப்பால் சுத்தமாகக் கழுவ வேண்டும்.
மாடுகளைப் பராமரிப்போர், பால் கறப்போர், காசநோய், டைஃபாய்டு, டிப்தீரியா போன்ற நோய்களுக்கு உள்ளாகி இருந்தால், கண்டிப்பாக மாடுகளிடம் நெருங்கக் கூடாது.
கறவையாளர், விரல் நகங்களை வெட்டி, அழுக்குச் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பாலைக் கறக்கும் போது இடையிடையே நிறுத்தி விட்டு, கண்ட இடங்களில் கைகளை வைக்கக் கூடாது.
பால் பாத்திரங்கள் சுத்தம்
பால் கறவைப் பாத்திரம், பால் சேமிப்புப் பாத்திரம், இடுக்குகள், மடிப்புகள் இன்றி, எளிதில் சுத்தம் செய்யும் வகையில் இருக்க வேண்டும்.
பால் கறவைக்கு, நெகிழி மற்றும் அலுமினியப் பாத்திரத்தைத் தவிர்த்து விட்டு, தரமான எவர் சில்வர் அல்லது பித்தளைப் பாத்திரத்தில் கறக்க வேண்டும்.
கறவைப் பாத்திரத்தில் கொதிநீரை ஊற்றினால், இரண்டு நிமிடத்தில் அதிலுள்ள பாக்டீரியாக்கள் அழிந்து, பாத்திரம் சுத்தமாகி விடும்.
இதனால், பாலில் பாக்டீரிய பாதிப்பைத் தவிர்த்து, சுத்தமான பாலை நுகர்வோருக்குத் தரலாம். பாலும் நெடுநேரம் கெடாமல் இருக்கும்.
பால் கறவைப் பாத்திரங்களைச் சமையலுக்கோ, மற்ற வீட்டுத் தேவைக்கோ பயன்படுத்தக் கூடாது. அயோட்போர் போன்ற இரசாயனக் கலவை மூலம் இந்தப் பாத்திரங்களை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.
வெந்நீரில் கழுவி வெய்யிலில் உலர்த்த வேண்டும். பாலைக் கறந்ததும் பாத்திரங்களை மிதமான வெப்ப நிலையில் வைக்க வேண்டும். அதிக வெப்பநிலை உள்ள இடத்தில் வைத்தால் பால் எளிதில் கெட்டு விடும்.
முனைவர் கோ.கலைச்செல்வி, முனைவர் மு.ஆனந்த சித்ரா, முனைவர் கோ.பாலகிருஷ்ணன், முனைவர் ரா.இரம்யா, மத்திய பல்கலைக் கழக ஆய்வகம்,
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம், சென்னை – 600 051.