கறவை மாடு வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை!

லகிலேயே கால்நடைச் செல்வங்கள் அதிகமாக இருப்பது நமது நாட்டில் தான். அதைப் போல, பால் உற்பத்தியிலும் உலகின் முதல் இடத்தில் நாம் உள்ளோம்.

ஆனால், கறவை மாடுகளின் உற்பத்தித் திறனில் நாம் பின்னோக்கி உள்ளோம்.

எனவே, கறவை மாடுகளின் பால் உற்பத்தியை மேம்படுத்தும் அறிவியல் சார்ந்த உத்திகள் குறித்து இங்கே பார்க்கலாம்.

கொட்டகை அமைத்தல்

மாட்டுக் கொட்டிலை, நீர்த் தேங்காத, சற்று உயரமான இடத்தில் அமைக்க வேண்டும்.

கொட்டிலின் நீளவாட்டம் கிழக்கு மேற்காக இருக்க வேண்டும். அதன் சுற்றுச் சுவர் 1.5-2 மீட்டர் உயரம் இருக்க வேண்டும்.

சுவரில் ஈரக்கசிவு இல்லாமல் இருக்க, மேற்பூச்சுப் பூச வேண்டும். கூரையின் உயரம் 3-4 மீட்டர் இருக்க வேண்டும்.

கொட்டிலில் காற்றோட்ட வசதி இருக்க வேண்டும்.

கொட்டில் தரை, உறுதியாக, நீர்த் தேங்காததாக, வழுக்கும் தன்மை அற்றதாக இருத்தல் அவசியம்.

கொட்டிலைச் சுற்றிலும் நிழல் தரும் மரங்கள் இருப்பது மிகுந்த பயனைத் தரும்.

வளர்க்கும் மாடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, குடிநீர்த் தொட்டிகள் மற்றும் தீவனத் தொட்டிகள் இருக்க வேண்டும்.

சாணத்தை உடனுக்குடன் அகற்றி, கொட்டிலில் சுத்தத்தைப் பேணிக் காக்க வேண்டும்.

மாடுகள் தேர்வு

எவ்வகைக் கலப்பின மாடுகளை வளர்க்கலாம் என்பதை முடிவு செய்ய வேண்டும்.

பண்ணை அமையவுள்ள இடத்தின் தட்ப வெப்ப நிலைக்கு உகந்த மாடுகளை வளர்ப்பது சாலச் சிறந்தது.

வெளிநாட்டுக் கலப்பின மாடுகளை விட, நமது மாடுகளின் பால் உற்பத்திக் குறைவாக இருந்தாலும், நாட்டின மாட்டுப் பாலின் தரம் உயர்ந்து இருக்கும்.

மேலும், நமது நாட்டின மாடுகளுக்கு நோயெதிர்ப்புத் திறன் அதிகமாகும்.

பொதுவாக, தமிழகத்தின் சமதளப் பகுதிகளில் ஜெர்சி கலப்பின மாடுகளை அதிகளவில் வளர்க்கின்றனர்.

எனவே, வளர்க்கப் போகும் மாட்டினத்தை முடிவு செய்து விட்டு, அவற்றை வாங்கும் போது கீழ்க்கண்ட விதிகளைப் பின்பற்றுவது நல்லது.

அதாவது, அருகிலுள்ள சந்தையில் மாடுகளை வாங்க வேண்டும்.

கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி நலமும் நல்ல பால் உற்பத்தித் திறனும் உள்ள மாடுகளை வாங்க வேண்டும்.

இரண்டு அல்லது மூன்றாம் ஈற்றில் உள்ள மாடுகளை வாங்குவது நல்லது.

கறவை மாடுகளை வாங்கு முன், ஒருநாளில் குறைந்தது மூன்று முறை பாலைக் கறந்து, அவற்றின் தினசரி உற்பத்தியைத் தெரிந்து கொண்டு வாங்க வேண்டும்.

தேவையான தடுப்பூசிகள் மாடுகளுக்குப் போடப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

தீவனமளித்தல்

கறவை வளர்ப்பில் ஆகும் மொத்தச் செலவில், தீவனச் செலவு 60%க்கும் அதிகமாகும்.

மேலும், கறவை மாடுகளின் உடல் நலனைப் பேணித் தரமான பால் உற்பத்தியை மேற்கொள்ளச் சமச்சீர் உணவு அவசியம்.

சமச்சீரான கால்நடைத் தீவனத்தை உண்ணும் மாடுகளின் பாலில் தான், மக்களுக்குத் தேவையான சத்துகள் போதியளவில் அடங்கி இருக்கும்.

கறவை மாடுகளின் வயிறு அசையூன் தன்மை மிக்கது. பசுந்தீவனம்,

எனவே, உலர் தீவனம், அடர் தீவனம் ஆகிய மூவகைத் தீவனங்களை, மாடுகளின் உடல் எடை மற்றும் பால் உற்பத்திக்கு ஏற்ப தர வேண்டும்.

மாடுகளுக்குத் தேவையான பசுந் தீவனங்களைச் சொந்தமாக உற்பத்தி செய்தல் நலம்.

ஏனெனில், ஆண்டு முழுவதும் மாடுகளுக்குப் பசுந்தீவனம் அவசியம்.

மேலும், தீவனக்கருவி மூலம் பசுந்தீவனத்தைச் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொடுத்தால், மாடுகளின் செரிப்புத் திறன் கூடும். தீவனமும் வீணாகாது.

அடர் தீவனம் தற்போது குச்சி வடிவில் கிடைக்கிறது. கன்றுகள், கிடேரிகள், பால் மாடுகள், சினை மாடுகள், பால் வற்றிய மாடுகள் என,

ஒவ்வொரு வகைக்கும் தேவையான அளவில் தீவனத்தைக் கணக்கிட்டு வழங்க வேண்டும்.

மாடுகளுக்கு எப்போதும் கிடைக்கும் வகையில் குடிநீர் இருத்தல் அவசியம்.

ஆய்வகம் மூலம் தரமான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்த பிறகே கறவை மாடுகளை வாங்க வேண்டும். ஏனெனில், குடிநீரும் முக்கியச் சத்தாகும்.

நோய் மேலாண்மை

கறவை மாடுகளில் நோய்த் தாக்கம் ஏற்பட்டால், அதன் முதல் அறிகுறி பசியின்மை ஆகும். எனவே, மாடுகள் உண்பதைத் தினமும் கவனித்து வர வேண்டும்.

நமது தட்ப வெப்ப நிலையில் மாடுகளைத் தாக்கும் நோய்களுக்கு எதிரான தடுப்பூசிகளை, கால்நடை மருத்துவர் மூலம் போட வேண்டும்.

கன்றுகள் மற்றும் கறவை மாடுகளுக்குக் குறித்த காலத்தில் குடற்புழு நீக்க மருந்துகளைக் கொடுத்து, நல்ல நிலையில் பராமரிக்க வேண்டும்.

கோமாரி நோயின் தாக்கம் நமது பகுதிகளில் அதிகம். எனவே, மழைக்காலம் வருமுன், கோமாரி நோய்த் தடுப்பூசியை அவசியம் அளித்தல் வேண்டும்.

இனவிருத்தி

கறவை மாடுகள் வளர்ப்பில் வெற்றியின் தாரக மந்திரமே, ஒவ்வொரு மாடு மூலமும் ஆண்டுக்கொரு கன்றைப் பெறுவது தான்.

மாடுகள் சராசரியாக 21 நாட்களுக்கு ஒருமுறை பருவத்துக்கு வரும். இந்தப் பருவமானது 12-18 மணி நேரம் இருக்கும்.

எனவே, மாடுகளைச் சரியாகக் கண்காணித்து, பருவத்தில் இருக்கும் போது சினை ஊசியைப் போட்டு விட வேண்டும்.

பால் பொருள்கள் உற்பத்தி

கறவை மாடு வளர்ப்பில் உள்ள முக்கியச் சிக்கல், பாலுக்கு ஏற்ற விலை கிடைக்காதது தான்.

எனவே, பண்ணையாளர்கள் பாலை உற்பத்தி செய்யும் இடத்தில் சுத்தத்தைப் பேணிக் காக்க வேண்டும்.

மேலும், பாலாக மட்டும் விற்காமல், வெண்ணெய், நெய், கோவா, பன்னீர் போன்ற மதிப்புக்கூட்டுப் பொருள்களாக மாற்றி விற்றால், கூடுதல் வருவாய்க் கிடைக்கும்.


செ.இரமேஷ், இரா.துரைராஜன், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு – 603 319.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!